வியாழன், 19 ஏப்ரல், 2018

அமெரிக்காவின் சிஐஏ தலைவர் வட கொரியாவுக்கு ரகசிய பயணம்... வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை..

bbc :அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின்
இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியோங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி அளவில் நடைபெற்றதாக பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவோடு உயர் நிலை பேச்சுவார்த்தைகள் நடத்துவது பற்றி அதிபர் டிரம்ப் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்க்காத இந்த ரகசிய கூட்டம் 2000ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தையாக அமையும்.
"உயர் மட்ட அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினோம்" என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை வரவேற்ற ஃபுளோரிடாவில் இருந்து டிரம்ப் அறிவித்தார்.

1950-53 வரை நடைபெற்ற கொரிய போர் முடிவுக்கு வந்த பின்னர் வட மற்றும் தென் கொரியா நாடுகள் முறையாக அமைதி ஒப்பந்தம் ஒன்றை விவாதிக்க கூறியுள்ளதாக அதிபர் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
இந்த மோதலின் முறையான தீர்வை தொடர தயாராக இருப்பதை தென் கொரியாவும் குறிப்புணர்த்தியுள்ளது.
தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் ஒரு சில பகுதிகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்று தென் கொரிய அரசு செய்தி நிறுவனமான யோன்ஹோப் தகவல் வெளிட்டுள்ளது.e>வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை ரகசியமாக சந்திக்க மைக் பாம்பேயோ வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை முதலில் "த வாஷிங்டன் போஸ்ட்" வெளியிட்டது.
ரெக்ஸ் டில்லர்சனின் பொறுப்பில் அதிபர் டிரம்ப், மைக் பாம்பேயோவை நியமித்த சில நாட்களுக்குள் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக இதை பற்றி நேரடியாக தெரிந்த, ஆனால் பெயர் சொல்ல விரும்பாத இருவர் இந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களின் மூத்த அதிகாரிகளால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது. ஆனால், வெள்ளை மாளிகை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வரயிருக்கும் டிரம்ப், கிம் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதை தவிர மேலதிகமாக இவர்கள் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை.
வருகின்ற வாரங்களில் குடியரசு கட்சியினரால் கட்டுப்படுத்தப்படும் செனட் அவையில் அமெரிக்காவின் உயரிய தூதராக பாம்பேயோ உறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் இரு அவைகளின் செனட் வெளியுறவு குழு 5 மணிநேரம் நடத்திய கலந்தாய்வில் பாம்பேயோ தோல்வியுற்ற பின்னரும், இத்தகைய எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் தொடர்பு<>அமெரிக்கா வட கொரியாவோடு ராஜீய உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவில்லை. ஆனால், கடந்த காலத்தில் ராஜீய அதிகாரிகள் வட கொரியாவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
"பின்புற வழிகள்" என்று கூறப்படும் சிலவற்றை பயன்படுத்தி வட கொரியாவோடு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
2000ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் மடேலெய்னி ஆல்பிரட், தற்போதைய வட கொரிய தலைவரின் தந்தை கிம் ஜாங்-இல் சந்திப்புக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையில் நடைபெறும் உயர் நிலை பேச்சுவார்த்தை இதுதான்.
2014ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க தேசிய உளவுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் இரண்டு அமெரிக்க குடிமக்களை விடுவிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ரகசிய பயணமாக வட கொரியா சென்றார்.
ஆனால், அப்போதைய பயணத்தில் வட கொரிய தலைவரை கிளாப்பர் சந்திக்கவில்லை.
இந்த சந்திப்பு எப்போது நடைபெறும்?
நேரடியான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா விடுத்த அழைப்பை அமெரிக்கா ஒப்புக் கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இதுவரை அமெரிக்க அதிபர்கள் வட கொரிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.
இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வட கொரியா பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது,மேலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா தடைகளை மீறுவது ஆகியவற்றிற்குகாக தனித்து விடப்பட்டது.
இதுவரை ஆறு அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது மேலும் அமெரிக்காவை தாக்க கூடிய ஏவுகணைகளையும் வட கொரியா வைத்துள்ளது.
ஆனால், இந்த வருடம் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொியா பங்கேற்றது பிற நாடுகளுடனான நல்லுறவுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இருந்தது

கருத்துகள் இல்லை: