திங்கள், 16 ஏப்ரல், 2018

எஸ்.சி/எஸ்.டி சட்டம்: அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்!

எஸ்.சி/எஸ்.டி சட்டம்: அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்!மின்னம்பலம் :தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரியப் பாதுகாப்பினை வழங்கிட வலியுறுத்தியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் .தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரியப் பாதுகாப்பினை வழங்கிட வலியுறுத்தியும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் கே.ஆர். ராமசாமி பேராசிரியர் காதர் மைதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராகக் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா முழுவதிலும் பாரத் பந்த் நடத்தப்பட்டது. கேரளாவில் கடந்த 9ஆம் தேதி இதே காரணத்திற்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராகப் பெரிதாக போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தன. தற்போது, திமுக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: