சனி, 21 ஏப்ரல், 2018

எஸ் வி சேகர் கைது செய்யப்படும் வாய்ப்பு .... லெட்டர் பேட் ரூபத்தில் ?

எஸ்.வி.சேகர் மீது புதுப் புகார்!மின்னம்பலம்: பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தரக்குறைவான கருத்துகளை தனது சமூக தளத்தில் பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அந்த மன்னிப்பு கூட சர்ச்சைக்குள்ளானது.
மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வழங்கப்பட்ட லெட்டர் ஹெட்டை பயன்படுத்தியிருக்கிறார், அது குற்றம் என்று கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி, நேற்று மின்னம்பலம். காம் மாலை ஏழுமணி பதிப்பில் வெளியிட்ட, ‘மன்னிப்பு கேட்டாலும் குற்றம் குற்றமே’ என்ற செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இந்நிலையில், ‘தனது தரக்குறைவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதற்காக தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்தியது குற்றம். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று போலீஸில் புகார் செய்திருக்கிறார் பரமக்குடியைச் சேர்ந்த சகாயராஜா.

இதுபற்றி அவரிடம் பேசினோம்.
“மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டிய லெட்டர் ஹெட்டை எஸ்.வி.சேகர் பயன்படுத்துவதே தவறு. அந்த லெட்டர் ஹெட்டில் அவருக்கு உரிமையில்லாத மின்னஞ்சல் முகவரியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், ‘எக்ஸ்’ என்ற வார்த்தையை சேர்த்து பயன்படுத்தியிருந்தாலும், சேகர் தெரிந்தே செய்த ஒரு தரக்குறைவான விமர்சனத்துக்காக மன்னிப்பு கேட்பதற்கு தமிழக அரசின் இலச்சினை பொருத்தப்பட்ட லெட்டர் ஹெட் தான் கிடைத்ததா? இது அப்பட்டமான சட்ட மீறல். மோசடி வகைக் குற்றத்திலும் இதை சேர்க்க முடியும்.
இதுபற்றி ஆன்லைனில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸுக்கு புகார் அனுப்பியுள்ளேன். இந்த புகார் என்பது தமிழக அரசின் இலச்சினை தொடர்பானது. எனவே இது காவல்நிலைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இதுபற்றிப் புகார் கொடுக்க முடியும்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதுபற்றி சபாநாயகரிடம் முறையிடுவேன். தனது காலாவதியான சட்டமன்ற லெட்டர் ஹெட்டை மக்கள் பணி அல்லாத தன் சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்தியது தவறு என்ற அடிப்படையில் எஸ்.வி.சேகருக்கு கிடைத்துவரும் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தைக் கூட சபாநாயகர் நினைத்தால் நிறுத்தி வைக்க முடியும்.
சபாநாயகரும் இதில் முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன். தமிழக அரசின் இலச்சினை இதுபோன்று அசிங்கப்படுத்தப்படுவதை தமிழக அரசு பொறுத்துக் கொள்ளக் கூடாது’’ என்கிறார் சகாயராஜா.

கருத்துகள் இல்லை: