ஞாயிறு, 4 மார்ச், 2018

கலைஞர் Vs எமெர்ஜென்சி சர்க்காரியா கமிசன் .. எம்ஜியாரின் வருமான வரி .. மோகன் குமாரமங்கலம் .. பாலதண்டாயுதம்

கலைஞரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ் பெற்ற யாழ்ப்பாண வக்கீல் ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற ஈழத் தமிழரும் வாதாட வந்தார். அந்த வக்கீலும், ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் உதவுவதற்கு எதற்கு கட்டணம் என்று இலவசமாக வாதாட வந்தார். பின்னாளில் பொன்னம்பலம், தங்கும் செலவு, போக்குவரத்து செலவு எதையும் வாங்க மறுத்துவிட்டார்.
Muralidharan Pb :  என்னதான் நாம ஒருத்தரை மாங்கு மாங்குனு புகழ்ந்து
பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது. அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும். இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய். அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ் சமூகம். என்னவோ மற்ற தலைவர்கள் எல்லாம் தன் உடலை வருத்தி சம்பாதித்ததை மக்களுக்கு கொடுப்பது போலவே பேசுவார்கள். கலைஞர் செய்த நல்ல விடயங்களை மறந்து இன்றும் அவரது மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு சர்க்காரியா கமிஷன். அப்படி என்னதான் இருக்கு இந்த சர்க்காரியா கமிஷனில் ? பார்ப்போம்.
முதல்வர் கலைஞர் மீண்டும் 1971ல் அசுர பலத்தோடு 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்தார். அதற்கு முன்னால் காங்கிரஸ் இரண்டாக உடைந்து தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. இந்திரா காந்தியின் காங்கிரஸிற்கு தமிழகத்தில் முகவரியே இல்லாமல் இருந்தது. வெறும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று
இந்திராகாந்தி கூறவே திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி உருப்பெற்றது. பெருவாரியான வாக்குகளில் சுமார் 38 இடங்களில் திமுக 23+காங்கிரஸ் 9 + மற்றவை 6ல் வெற்றி பெற்று இருந்தன.
இந்திராவிற்கு ஆதரவு கொடுத்து, இந்திரா பிரதமராக பதவியேற்றவுடன் பல சிக்கல்களை திமுக சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்டு கல்யாணசுந்தரம், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் உதவியோடு தேன் கூட்டை கலைத்தார் இந்திரா காந்தி அம்மையார். காரணம் கருணாநிதியால் அவருக்கு வேலை முடிந்து பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்திரா முதலில் எம் ஜியார்  திமுகவை விட்டு வெளியேற செய்தார், அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் வருமான வரி சோதனை. மகோரா வெளிநாட்டிற்கு சென்ற போது அவருடைய சிப்பந்திகளை பிடித்து கருப்பு பண விவகாரங்களை கண்டுபிடித்து, பயமுறுத்தி, புதிதாக கட்சி தொடங்கவைத்து,அதை 1972ல் மகோரா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், நிறைய நடந்தேறியது.
கலைஞர் மீதும் திமுகவினர் மீதும் புகார் கொடுக்க வைத்து, பின்னர் முதல்வர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள் மீதும் வீராணம் குழாய் வாங்கியதில் ஊழல், பூச்சி மருந்து வாங்கியதில் ஊழல் என நெடுஞ்செழியன், மாதவன், அன்பில் தர்மலிங்கம், ப உ சண்முகம் மற்றும் முன்னணி தலைவர்கள் மீது 56 வழக்குகளை மகோரா ( எம்ஜியார் ) மூலமாக புகார் கொடுக்க வைத்து, மீண்டும் இந்திரா காந்தியால் 1975ல் தூசு தட்டி எடுத்து நீதிபதி சர்காரியவைக் கொண்டு போடப்பட்டதே சர்க்காரியா விசாரணை கமிஷன்.
நேரடியாக இதில் முதலவர் என்ற காரணத்தால் 28 வழக்குகளை கலைஞர் கருணாநிதியின் மீது பதியப்பட்டது. 1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு தர கேட்டும் பயனில்லை, மகன், மருமகன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் பயனில்லை. சிறைக்குள்ளே ஸ்டாலினை, மாறனை அடித்தும், கலைஞரை பணிய வைக்க முடியாமல் போகவே, எதற்கும் அஞ்சாத கருணாநிதி என்ற யானையை அடக்க இந்திரா காந்தி பயன்படுத்தப்பட்ட அங்குசமே சர்க்காரியா விசாரணை கமிஷன்.
ஆனால் கலைஞர் என்ன மகோரா (எம்ஜியார்)  மாதிரி கோழையா ? பயந்து சரணாகதியாக ? கலைஞர் பல வழக்குகளை சந்தித்தார், பல போராட்டங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளார், அவர் ஓடி ஒளியவில்லை, 18 வருடம் வாய்தா வாங்கவில்லை, நின்று தனது நிலையை சட்டத்தின் மூலமாக சந்தித்து வெற்றி வாகை சூடினார்.
இது சம்பந்தமாக 1972ல் மகோரா உட்பட தனியாக பிரிந்து சென்ற கட்சியினர் விளக்கம் கேட்கவே, புத்தகமாக அச்சடித்து சட்டமன்றத்தில் தனது பக்கத்து உண்மையை எடுத்துரைத்தார். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரமாக செய்ய கூடியவர் அல்ல கலைஞர். நின்று தீர்க்கமாக தன் மீதும், அமைச்சர்கள், கட்சியினர் மீதும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்தார்.
இந்திரா காந்தி 1976ல் மீண்டும் தூசுதட்டி எடுத்து ரஞ்சித் சிங்க் சர்க்காரியா என்ற உச்சநீதிமன்ற நீதியரசர் முலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதுவே மருவி சர்க்காரியா கமிஷன் ஆனது.
அதன் பின்னணியாக ஒரு நாள் கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் சில கேள்விகளைக் கேட்டு, இந்த வீட்டை நீங்கள் எப்போழுது வாங்கினீர்கள் ? இதை நாங்கள் அளக்க வேண்டும் என்று துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களை துழாவி ஏதும் கிடைக்காத காரணத்தால் வெளியேறினார். பின்னர் அவர் முரசொலி அலுவலகம் சென்ற போது, அங்கேயும் அவர்கள் அவரை பின் தொடர்ந்து, சோதனை போடுகிறேன் என்ற போர்வையில் அலுவலகம், அச்சகம் அனைத்துயுமே துவம்சம் செய்து விட்டு சென்றனர். பின்னர் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டிற்கு மதியம் சென்றவர், அங்கு பார்த்த காட்சி துணைவி ராஜாதியம்மாளையும், கனிமொழியையும் சில பெண் அதிகாரிகள் கொடுமை படுத்தி மயக்கம் வருமளவிற்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கலைஞரை அசிங்க படுத்தும் விதமாக தெரிந்த அலுவலர் ஒருவர்,"நீங்கள் யார் ? உங்களுக்கு இங்கே என்ன வேலை ?" என்று கேட்டார். இத்தனை கதைக்கும் கோபாலபுரம், முரசொலி அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து ரொக்கமாக நகையாக எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவரை அச்சுறுத்தும் விதமாக இந்த தேடல் படலம். இதைக் கண்டா அஞ்சுவார் அஞ்சுகம் மைந்தர் ?
அப்போது அனைத்து பத்திரிகைகளிலும், வானொலியிலும் மாறி மாறி பேசியது கருணாநிதி ஊழலில் சிக்கிவிட்டார் என்ற செய்தியையே. மக்களிடத்தே மிக தந்திரமாக அவரது பிம்பத்தை உடைத்தது மத்திய அரசு. அதற்கான விளம்பரத்திற்கு அளித்த செலவு மிக மிக அதிகம். எமெர்ஜென்சியின் கதாநாயகனை ஒரு கொடியவனாக, ஊழல்வாதியாக, கறைபடிந்த அரசியல்வாதியாக சித்தரித்தது மத்திய அரசு.
அன்று பொதுவாக பிராமிணர்களுக்கு திமுக என்றாலோ, கருணாநிதி என்றாலோ ஆகாத பெயர். ஏனென்றால் அவர் பெரியாரின் சீடர். அப்போ மற்ற சாதியினர் கலைஞருக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டுமல்லவா ? ஏறக்குறைய நடு வீதியில் நின்ற கலைஞருக்கு உதவியாக வக்கீல் யாரும் முன் வரவில்லை, அவரால் நல்ல நிலைக்கு வந்த ஜோலார்பேட்டை வரதன் என்ற பட்டியலினத்துக்காரர் அவர் ஒரு வழக்கறிஞர், அவர் முன் வரவில்லை, அவரால் ஆளாக்கப்பட்ட ரத்னவேல் பாண்டியன் பின்னாளில் நீதியரசர் ஆனார். அவரும் வரவில்லை. ஆனால் தஞ்சாவூரை சேர்ந்த பிராமணர் ஜி ராமசாமி அய்யர் உதவிக்கு வந்தார், வந்தது மட்டுமல்ல, "கலைஞரே,நீங்கள் எனக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் நான் வாதாடி உங்களுக்காக துணை நிற்கிறேன்" என்று முதலில் ஆதரவு தந்தார். அது மட்டுமல்ல சாந்தி பூஷன்,KK வேணுகோபால் போன்ற உச்சநீதி மன்ற வக்கீல் எல்லாம் அவரை பின் தொடர்ந்தார்கள். கலைஞரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ் பெற்ற யாழ்ப்பாண வக்கீல் ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற ஈழத் தமிழரும் வாதாட வந்தார். அந்த வக்கீலும், ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் உதவுவதற்கு எதற்கு கட்டணம் என்று இலவசமாக வாதாட வந்தார். பின்னாளில் பொன்னம்பலம், தங்கும் செலவு, போக்குவரத்து செலவு எதையும் வாங்க மறுத்துவிட்டார். வாதாட காசே வாங்காத வக்கீலெல்லாம் வந்தது எதற்கு ? ஒரு குற்றவாளியை காப்பாற்றவா ? ஒருவர் மீதுள்ள வீண் பழியை துடைத்தெறிய.
அனைத்து வக்கீல்களின் வாதத்திறமையால் சாட்சிகள் வழக்கின் உண்மை நிலையை அதாவது இந்திராவின் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பின்னப்பட்ட விசாரணையே இந்த வழக்குகள் என்று நிரூபித்தனர்.
குறிப்பாக வீராணம் குழாய் ஊழல் குற்றச்சாட்டிற்கு குறுக்கு விசாரணையை அனுமதிக்கப்பட்டு எதையுமே நிரூபிக்க முடியாமல் விசாரணைக் கமிஷன் திணறியது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி.
நீதிபதியிடம் கலைஞர் சார்பில் வாதாடிய வக்கீல்கள் கேட்டுக்கொண்டது சாட்சியாக கூண்டில் மகோரா மற்றும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை. எவ்வளவோ கேட்டும் நீதிபதி மறுத்திவிட்டார். ஆனால் அதற்கு முன்னால் கலைஞருக்கு கீழே பணியாற்றிய அனைத்து அலுவலர்கள் இ ஆ ப (IAS) பெரும்பாலனோர் இவருக்கு எதிராக சாட்சி சொல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள். எங்கே குறுக்கு விசாரணையில் அனைத்து சாட்சிகளும் துகள் துகளாக போய்விடுமோ என்று அரசு சார்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க நீதிபதி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதி கொடுக்க மறுத்தார்.
பின்னாட்களில் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், ஓம் மேத்தா, சாந்தி பூஷன் போன்றவர்கள் ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டங்களில் பேசியபோது இது கருணாநிதி மீது இந்திரா காந்தி போட்ட அவதூறு குற்றச்சாட்டு தான் இந்த சர்க்காரியா கமிஷன் என்று பேசினர். இந்திராவுக்கு கலைஞர் கருணாநிதி அரசை கவிழ்க்க மட்டுமல்ல, கருணாநிதிக்கு அவப்பெயர் உண்டாக்கவே சர்க்காரியா கமிஷன் உருவாக்கப்பட்டது கூறினார்கள். இந்திராவுக்கு ஊழல் பற்றி கவலையே இல்லை, அரசியல் காழ்புணர்ச்சியின் வடிவமே சர்க்காரியா.
மகோரா கொடுத்த 56 குற்றச்சாட்டுகளில், 28 மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆதித்தனார் (1969ல் மகாராவிடம் தகராறு செய்த அதே ஆதித்தனார்) அப்பொழுது கலைஞர் அமைச்சரவையில் செய்த குற்றத்தை மறைக்க அதிமுகவில் பின்னாளில் சென்று சேர்ந்து விட்டார் என்பது ஒரு அவலம். சத்யவாணிமுத்து அமைச்சரவையில் இருந்த போது அவர் மீது சுமத்தப்பட்ட பழி எல்லாம் அவர் அதிமுகவில் சேர்ந்த போது மறைக்கப்பட்டது.
கலைஞர் கருணாநிதியை சிறையில் அடைக்க நினைத்த மகோரா, டெல்லி சென்று மத்திய புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள, தன்னிடம் உள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜனதா கட்சியின் வங்கி சேவை ஆணையம்(திரும்ப பெரும்) மசோதாவிற்கு கொடுத்து கலைஞர் கருணாநிதியை சிக்க வைக்க எண்ணினார்.
டெல்லியே மகோராவின் நிலைமை சிரிப்பாய் சிரித்தது. எந்த கலைஞரை அவர் சிறைக்குள் வைக்க நினைத்தாரோ, அதே வழக்கில் அவரும் சிக்கிக்கொண்டார். எந்த கட்சியினர் புகாரில் மாட்டிவைக்க நினைத்தாரோ 1972ல் அதே கட்சியின் பொருளாளர் மகோரா. அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முதலாவதாக சிக்குபவர் மகோராவே. இந்த குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாத அரைகுறை அரசியல்வாதி தான் நமது புரட்சித்தலைவர். இறுதியில் மகோரா பொறுமை இழந்து நின்றது தான் மிச்சம்.
அன்றைய ஜனதா கட்சியின் மாநில தலைவர் Dr எம் சந்தோசம்,"இந்திராவின் வற்புறுத்தலின் பேரில் கருணாநிதியை சிறுமைப்படுத்த அன்று அவரது விசுவாசிகளின் மூலமாக தயாரிக்கப்பட்டதே இந்த கமிஷன் அறிக்கை. அன்றைய ஆளுநர் KK ஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தி இது சார்பாக தயாரித்த அறிக்கை அவரே எழுதினாரா அல்லது இந்திராவின் கட்சியினர் தயாரித்ததா என்று விசாரணை செய்யவேண்டும்" என்று பத்திரிக்கைகளில் பேட்டியளித்தார். .
எல்லாவற்றிக்கும் மேலாக கலைஞர் கருணாநிதி தானே முன், மீதம் உள்ள 28 குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கக் நீதி மன்றத்திடம் கோரினார். மாநில அரசும்(பின்னல் உருவான அதிமுக அரசு ) மத்திய ஜனதா அரசும் அதை மீண்டும் விசாரிக்க உடன்படவில்லை என்பது பெரும் சோகம். குற்றம் சாட்டப்பட்டவர் ஓடி ஒதுங்கும் காலத்தில், என் மீதும் எங்கள் கட்சியினர் மீதும் புனையப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் வழக்குகள் நடத்திட வேண்டும் என்று என்றைக்காவது இந்தியாவில் உள்ள எந்த அரசியல்வாதியாவது கேட்டது போல சரித்திரம் வரலாறு ஏதேனும் உண்டா ? ஆனால் அந்த நெஞ்சுரம் மிக்க அரிமாவை விஞ்ஞான ஊழல் புரிந்தவர் என்று சர்க்காரியா சொல்லாத ஒன்றை சொன்னதாக இன்றும் பேசிவருகின்றனர் அவரது வரலாறு தெரியாத அரைவேக்காட்டுக்கள்.
கலைஞர், சர்க்காரியா கமிஷன் விசாரணையிலோ, வேற எந்த ஒரு வழக்கோ முடிவுற்று இதுவரை ஒரு நாள் கூட அவர் சிறைவாசம் சென்றதில்லை. போராட்டங்கள் செய்து சிறைக்கு போய் இருக்கிறார் ஆனால் ஊழலுக்கு தண்டனை பெற்று இது வரை ஒரு நாள் கூட சிறைத்தண்டனை பெறவில்லை.
இந்திராவின ஷா கமிஷன் விசாரணையை போன்றே சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் விரக்தியில் குப்பையில் தூக்கிப்போடப்பட்ட ஒன்றே. இந்த விவரங்கள் எதையுமே புரிந்துகொள்ளாமல் கருணாநிதி விஞ்ஞான ஊழல் புரிந்தார் என்று வண்டு சிண்டுகள் கூட குருட்டாம்போக்கில் உளறிக்கொட்டும் கற்பனைக்கு கதைகளுக்கு மேற்சொன்ன விவரங்கள் பொய்ப்பிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பகுதி நிறைவு பெறுகிறது.
நன்றி
மீண்டும் சந்திப்போம்,
அடுத்தது: தலைநகரில் கலைஞர்.

கருத்துகள் இல்லை: