சனி, 27 ஜனவரி, 2018

பத்மாவத் திரைப்படம் நிலைத்திருக்கும் காலத்துக்குள் இந்துத்துவம் அழியும்!

சிறப்புக் கட்டுரை: இவ்வளவு பலவீனமானதா  இந்துத்துவம்?மின்னம்பலம் :பா.நரேஷ் : மிகவும் சாதரணமான கேள்விதான். இந்துத்துவத்தின் வரலாறு பற்றியோ, கொள்கைகள் பற்றியோ நாம் பேசத் தேவையில்லை. ஒரு சமூகத்தைக் குறித்த மதிப்பு என்பது அந்தச் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான மனிதர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்தே அளவிடப்படும். அந்தச் சமூகம் எப்படிப்பட்ட வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கிறது என்பதை அதன் நடத்தையை வைத்தே அறிய முடியும்.
இந்த அடிப்படையில், இந்துத்துவத்தைப் பற்றி யோசிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. ஒரு திரைப்படத்தால் அவமதிக்கப்படும் அளவுக்கு இந்துத்துவம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? ஒரு திரைப்படம் தங்கள் பண்பாட்டைச் சீரழித்துவிடும் என்று நம்பும் அளவுக்கு இந்துத்துவவாதிகள் மூடர்களாக இருக்கிறார்களா?

இன்னும் பல தீவிரமான கேள்விகளை இந்துத்துவத்தின்மீது வைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், அவர்களின் வினையாற்றும் முறை அப்படி. சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னைக்கு உங்கள் பிள்ளைகளின் மீது வன்முறைத் தாக்குதல் நிகழ்த்தினால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? டெல்லியில் நடந்த சம்பவத்தைத்தான் குறிப்பிடுகிறேன். சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குவதாகக் கூறப்படும் ஒரு நாட்டின் தலைநகரில், பள்ளி செல்லும் குழந்தைகளின் வாகனத்தின் மீது கல் வீசிக் காயப்படுத்துவதும், அதற்கான காரணம் வெறும் ஒரு திரைப்படத்தின் மீதான காழ்புணர்ச்சி என்பதும் நமக்கு உரைக்கும் செய்தி என்ன? இந்துத்துவத்தின் வெளிப்பாடு என்பது குழந்தைகளின் மீது வன்முறையை விதைப்பதும் அல்லது குழந்தைகளின் மனதில் வன்முறையைத் திணிப்பதுமாகவல்லவா இருக்கிறது!

உங்கள் செயலே உங்கள் அழிவுக்கான விதை
அந்தப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தாங்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும்போது, அவர்களுக்குப் புரிவது இந்துத்துவவாதிகளின் மூடத்தனமான குணமும், இந்துத்துவத்தின் வன்முறைப் பண்பாடும்தான். திரைப்படத்தை எதிர்ப்பதனால் தங்கள் பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் என்று இறங்கியிருப்பவர்கள், உண்மையில் வருங்காலச் சங்கதியினரிடம் தங்கள் பண்பாட்டை மிக மோசமாக விதைத்து வருகிறார்கள். இதன் விளைவுகளைத் தங்களின் வாழ்நாளிலேயே மிகப் பெரிய அழிவாக அவர்கள் பார்த்து, தங்கள் வன்முறையின் விதைப்பைத் தாங்களே அறுவடை செய்ய இருக்கிறார்கள்.
இதைவிடப் பல அதிர்ச்சிகரமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றை காண்பதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். இந்துத்துவாதிகளின் கருத்துகள் அநியாயம், தவறு என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. அது உங்கள் உணர்வுகளைப் பொறுத்தது. ஆனால், அந்தக் கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் வன்முறையாக இருக்கும்போது, அது சாமானியர்களையும் குழந்தைகளையும் பாதிக்கும்போது, உங்களை அழிக்கும் வலிமையை நீங்களே மற்றவர்கள் கையில் கொடுத்துவிடுகிறீர்கள்.
ரத்தக் கறை உங்கள் கைகளில்
இது ஏதோ ஓரிருவர் செய்யும் தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. அப்படிச் சொல்லி இந்துத்துவவாதிகள் தப்பித்துக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் இந்துத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்களும், அதைச் செய்தவர்களின் எண்ணிக்கையும் மோசமான எதிர்காலத்தின் சாட்சியாகக் கண்முன் நிற்கிறது.
வளர்ச்சியின் ‘தாயக’மான, நாட்டுக்கே ‘முன்மாதிரி’யாகக் கூறப்படும் குஜராத்தில் ராஜபுத்திர சமூக கர்ணீ சேனா அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோரால் அலங்கரிக்கப்பட்ட ஆவேசத்தின் உச்சமாகத் தாண்டவமிட்டது. அந்தக் கூட்டத்துக்கு அடுத்த நாள் படம் திரையிடப்படுவதாக இருந்த தியேட்டர்கள், மால்கள், சுற்றியுள்ள கடைகள் ஆகியவை வன்முறைக் கும்பலால் சுக்குநூறாக உடைக்கப்பட்டன. பெட்ரோல் வீசப்பட்டு தியேட்டரில் நின்றிருந்த வாகனங்களுக்கும் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
சூரத், வதோதரா, ஆனந்த் நகரங்களிலும் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களைப் போட்டு எரித்ததால் போக்குவரத்து முடங்கியது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் மேற்கூறப்பட்ட பள்ளி வாகனத்தின் மீதான கல்வீச்சை நடத்தியது கர்ணீ சேனா அமைப்பினர் என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெறிவித்துள்ளார். மேலும் டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை போக்குவரத்து முடக்கப்பட்டது.

உத்தமமான முதல்வரைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் உச்சமான சம்பவம், “பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டால், பார்லிமெண்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உடைத்தெறியப்படும்” என்று புவனேஷ்வர் சிங் கொடுத்த மிரட்டல். சம்பந்தமே இல்லாத சாமானியர்களைத் தாக்கியதை அடுத்து, நாட்டின் ஆதாரங்களை அசைத்துப் பார்த்துவிடும் திமிரை அவர்களுக்கு வழங்கியது இந்துத்துவத்தின் மூடத்தனமான பண்பாட்டைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில், வன்முறையில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குர்காவ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் அதிகாரபூர்வமான செய்திகள். இவையல்லாமல் அரங்கேறியிருக்கும் அவலங்கள் ஏராளம். இது தொடர்ந்தால் ஒன்று மட்டும் நிச்சயம்,
பத்மாவத் திரைப்படம் நிலைத்திருக்கும் காலத்துக்குள் இந்துத்துவம் அழியும்!

கருத்துகள் இல்லை: