ஆர்.சரண் Vikatan : "சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ...
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்குத்தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்...!"- மறக்கமுடியுமா இந்தப் பாடலை? இலங்கையின் 'பாப் மாஸ்ட்ரோ' என்றழைக்கப்பட்ட சிலோன் மனோகரின் குரல் 70-களில் தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே நேரத்தில் வசியப்படுத்தி வைத்திருந்த மாயக்குரல். இலங்கைக்கே உரிய பாரம்பர்ய இசையான 'பெய்லா' (Baila) என்ற இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து ஃபியூஷன் இசையை உலகுக்குத் தந்தவர்தான் சிலோன் மனோகர். இன்றும் இவரின் பெய்லாக்களைத்தான் கோவாவில் வாழும் போர்ச்சுக்கீசியர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிகிறார்கள். (பெய்லா என்ற இசைவடிவம் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்தது. ஆப்பிரிக்க காஃபிர்கள் இலங்கைக்கு 1630களில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். அவர்கள் மூலம் உருவானதுதான் பெய்லா இசை. சிங்களம் கலந்த ஆப்பிரிக்க வரிகளில் பாடுவதை பெய்லா என்று அழைத்தனர்.)
பாப் இசையையும் பிசைந்து பல மெட்டுகளை உருவாக்கினார். அதில் ஒன்றுதான் கொலவெறி ஹிட். ஆம்... இவர் உருவாக்கிய ஃபியூஷன் பாடல் 'சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனி' பாடலை பாடாதவர்களே இருக்க முடியாது. தமிழ்நாட்டின்... நம் சென்னையின் கானாவில்கூட சுராங்கனியின் தாக்கம் இன்றும் இருக்கிறது. சுராங்கனியின் எளிமையான மெட்டுதான் இன்றுவரை உலகம் முழுவதும் பாப்புலர். அந்தப் பாடலை மட்டும் மனோகர் இந்தி உட்பட 8 மொழிகளில் பாடி இருக்கிறார்.
அத்தனை மொழிகளிலும் அது ஹிட். தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் இப்பாடலை பாடி நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார். மனோகர் இலங்கையில் பிறந்தவர்தான் என்றாலும் தமிழரான அவர் தமிழ்நாட்டில் பிரபலமாக திகழ்ந்தார்.
1970ல் அவர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த 'நல்நண்பர்கள்' என்ற இசைக்குழு அந்நாள்களில் இலங்கையை மொழிபேதம் கடந்து ஒன்றிணைத்து வைத்திருந்தது. அதற்கு முன்பே 'பாசநிலா' என்ற இலங்கையில் தயாரான தமிழ்ப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். அவர் நடித்த 'வட காற்று' என்ற தமிழ்ப்படம் இலங்கை அரசின் ஜனாதிபதி விருதினைப் பெற்றது. ஹிப்பி ஹேர் ஸ்டைலும், பிரெஞ்சு தாடியும், கணீர் குரலும் அப்போது இவரால் ஏக பாப்புலர். பல கல்லூரி மாணவ மாணவிகள் இவர் ஸடைலுக்கும் குரலுக்கும் மயங்கிக் கிடந்தார்கள். மனோகரின் பெற்றோர்களும் இசையார்வம் உள்ளவர் என்பதால் இயல்பிலேயே தமிழிசையைக் கேட்டு பாட ஆரம்பித்தவர் மனோகர்.
பள்ளி நாள்களில் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி இசையில் உருவான பல பாடல் வரிகளை மட்டும் மாற்றிப்போட்டு பாடி பள்ளியில் பாப்புலராக இருந்தார். கல்லூரிக் காலத்தில் தமிழகத்தில் அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதன்முதலாகப் பாடினார். பாடி பில்டரான மனோகர் பல முறை ஆணழகன் பட்டம் வென்றிருக்கிறார்.
இலங்கையில் அவர் பாடிய சுராங்கனி பாடலுக்கு இந்தியாவில் இருக்கும் மவுசைக் கண்டு சென்னைக்குக் குடியேறினார்.
இளையராஜாவேகூட இவர் அனுமதி பெற்று 'அவர் எனக்கே சொந்தம்' என்ற ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த படத்தில் மலேசியா வாசுதேவன், ரேணுகாவை வைத்து 'சுராங்கனி' மெட்டில் ஒரு பாடலை கம்போஸ் செய்து சேர்த்திருந்தார். பாலிவுட்டிலும் ஆஷா போன்ஸ்லே 'சுராங்கனி கமால் கரேகி' என்ற பாடலை இதே மெட்டில் 'பரமாத்மா' என்ற படத்தில் பாட, மனோகரின் ஒற்றை மெட்டு உலக மெட்டாக... மொட்டாக மலர்ந்தது. சுராங்கனி இசைத் தட்டுகள் இங்கும் ஹிட்டடிக்க மீடியாக்களில் அவர் முகம் வெளியானது. வித்தியாசமான சிகையலங்காரம், கம்பீரமான தோற்றத்தைப் பார்த்து பல தமிழ்ப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், முதல் படமாக 'டூபான் மெயில்' என்ற தெலுங்குப் படம்தான் ரிலீஸானது. அப்படத்தில் ஒரு சர்வதேச கடத்தல்காரனாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் சந்திரகுமார் இயக்கத்தில் 'தடவரா' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தார். 'மாமாங்கம்', 'சக்தி', 'கழுகன்' எனப் பல படங்களில் நடித்து பாப்புலரானார். அப்போது கேரளாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ஜெயனுடன் 'ஆவேசம்' 'கோளிளக்கம்' படங்களிலும் வில்லனாக நடித்தார். 'கோளிளக்கம்' படப்பிடிப்பின்போது சென்னை இருங்காட்டுக்கோட்டையில் தன் கண்முன்னால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நண்பனும் நடிகரருமான ஜெயன் இறந்துவிட, திரையுலகை விட்டே மனம் வெறுத்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்தார். லண்டனுக்கு ஜாகை மாற்றிக் கொண்டவர் பி.பி.சி-யில் 9 வருடங்கள் வேலை பார்த்தார். பாடுவதற்காக சென்னைக்கு வந்து மீண்டும் மலையாளம், தமிழ் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழில் மட்டும் குரு, காஷ்மீர் காதலி, ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா, உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, தீ, ஜே.ஜே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில தமிழ் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அண்மைக்காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். சென்னையிலிருக்கும் அவர் வீட்டில் தன் 73வது வயதில் நேற்று உயிரிழந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக