'நீலம் பண்பாட்டு மைய'த்தின் சார்பாக, இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் ப்ரொடக்சன்ஸ்' தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஆவணப்படம் தான் 'லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' (Ladies and Gentle Women). இப்படத்தின் இயக்குனர்
மாலினி ஜீவரத்தினம், ‘வழக்கமான ஆவணப்படங்களின் வடிவமைப்பில் Ladies and Gentle Women எடுக்கப்படவில்லை. ஆர்வத்தை, சர்ச்சைகளை மையப்படுத்தும் விதமாக கதை அமைக்கவில்லை. ஹிட்டன் கேமராக்களைத் தவிர்த்திருக்கிறோம். அப்படி ஹிட்டன் கேமராக்களை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட பெண்ணின் முகம் யூ-ட்யூபில் வெளிவரும்பொழுது அந்தப்பெண் ஆணவப்படுகொலைக்கு ஆளாக நேரிடும். வெளியே வரவேண்டும் என்பது தானாக நிகழவேண்டும். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் அல்லது இருபால் ஈர்ப்பாளர் என்ற உண்மையை தானாக முன்வந்து சொல்லவேண்டும்’ என்கிறார்.
;'Ladies and Gentle Women' ஆவணப்படம் ராஜஸ்தானில் வாழ்ந்த தீஜா, பீஜா என்கிற இரண்டு செல்வந்தர்களுக்குப் பிறந்த பெண்களின் காதல் வாழ்க்கையை விவரித்தபடியே தொடங்குகிறது. இந்தக் கதையில், பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்படும் கல்யாணம், சொத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணை ஆணாக உருவகப்படுத்தும் செல்வந்தர், முதலிரவில் பீஜா ஆண் அல்ல பெண் என்பதை அறிந்த தீஜா, நான் உன்னை காதலிப்பது உண்மை. நீ ஏன் ஆணாக வாழவேண்டும் பெண்ணாகவே இருந்துகொள் என்று சொல்லும் தீஜா. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ மனிதர்கள்தான் காரணம் என் எண்ணி நினைத்து 128 பேய்கள் வாழும் இடத்திற்கு சென்று வாழ்கிறார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு செல்கிறார்கள். அங்கு ஊர்க்காரர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து ஒரு ஆணின் நிழல்கூட படாத இந்தக் கல்யாணம் செல்லாது என்று சொல்ல.. பீஜா பேய்களிடம் சென்று தன்னை ஆணாக மாற்றும்படி வேண்டுகிறாள். பேய்களும் அவள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றன. உடலளவில் ஆணாக மாறிய பீஜாவிடம் ஆண் ஆதிக்கமும் சேர்ந்தே வந்துவிடுகிறது. பீஜா, தன்னுடைய ஆண் ஆதிக்கத்தை தீஜாவிடம் செலுத்த.. கிணற்றில் குதித்து விடுகிறாள் தீஜா. அதன்பின் தன்னை மீண்டும் பெண்ணாகவே மாற்றும்படி பேய்களிடம் கேட்கிறாள் பீஜா. பேய்களும் மீண்டும் அதை நிறைவேற்ற, இறுதியில் பீஜாவும், தீஜாவும் சேர்ந்து தங்களுடைய காதல் வாழ்க்கையை தொடர்கின்றனர்.
இந்த வரலாற்றுக் கதையின் மூலமாக Ladies and Gentle Women ஆவணப்படத்தின் மொத்த கருத்துகளையும் ஒரே கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாலினி.
;நம்முடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையில், ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழகினாலோ அல்லது ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகினாலோ.. கேலி, கிண்டல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அதுவும் ஓரின பால் ஈர்ப்பை மறைப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆண்-பெண் இடையிலான காதலுக்கே பல்வேறு படிநிலைகளைக் கடந்துசெல்ல வேண்டிய சூழல் இங்குள்ளது. அப்படி மலரும் காதல்களை அந்தஸ்து, கவுரவம், சாதி என இன்னும் பல காரணங்களைச் சொல்லி கொன்றுவிடும் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை மட்டும் எளிதில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுவிடுமா?
இப்படத்தில் வரும் திருநங்கை இதற்கான பதிலைத் தருகிறார். "இப்போது எங்களுக்குக் கிடைத்திருக்கும் சில உரிமைகள் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. தெருவில் உட்கார்ந்து போராடினோம், பெற்றோரால் கைவிடப்பட்டோம், சமூகத்தினுடைய விருப்பு, வெறுப்புக்களை சம்பாதித்திருக்கிறோம், தனிமையில் உட்கார்ந்து அழுதிருக்கிறோம், ஒடுக்கப்பட்டிருக்கிறோம். இவை அனைத்தையும் கடந்துதான் எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த சமூகத்தில் போராட்டத்தின் மூலமாகத்தான் எதையும் பெறமுடியும்" என்பதுதான் அந்த பதில்.இந்த ஆவணப்படம் சாதி, மதம், பாலினம், சமூகம் என அனைத்தையும் கடந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் விருப்பு, வெறுப்புகளை புரிதலோடு கையாளவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
இப்படத்தின் உதவி இயக்குனர் முருகானந்த், "லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்" படத்தை பார்க்க வந்த அனைத்து ஆண்களும், பெண்களும் எனக்கு மனிதர்களாக தெரிந்தார்கள் என்று சொன்னார். அனைவரும் சமம் என்ற எண்ணம், சம்பந்தபட்டவர்களை தாண்டி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வரும்போதுதான், இங்கு கோரப்பட்டிருக்கும் உண்மையான விடுதலை கிடைக்கும்.
gt;கோ.ஸ்ரீபாலாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக