செவ்வாய், 23 ஜனவரி, 2018

தினகரனுக்கு எதிராக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஜாதிக்கட்சி.. போஸ் மக்கள் பணியகம்!

டிஜிட்டல் திண்ணை: இன்று பணியகம்... நாளை கட்சி!மின்னம்பலம் : இந்தத் தைத் திருநாளைத் தொடர்ந்து, மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் பெயரில் ஒரு மக்கள் பணியகம் தொடங்கப்படும். இதில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு சமூக வலைதளம் உருவாக்கப்படும். என்னைச் சந்தித்த இளைஞர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது. இதற்கான அடுத்த கட்ட நகர்வை என் முகநூல் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்’- பொங்கல் சமயத்தில் இப்படி ஒரு பதிவிட்டிருந்தார் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்.
அதில் அடுத்த கட்ட நகர்வை இன்று தொடங்கிவிட்டார். ‘போஸ் மக்கள் பணியகம்’ என அந்த அமைப்புக்குப் பெயர் சூட்டியிருக்கும் ஜெய் ஆனந்த், அந்த அமைப்புக்கான லோகோவையும் வெளியிட்டிருக்கிறார்.
‘இது தினகரனுக்கு எதிரான அமைப்பு இல்லை’ எனத் தொடர்ந்து விளக்கம் கொடுத்துவருகிறார். அப்படியானால், எதற்காக இப்படி ஒரு அமைப்பைத் தொடங்குகிறார் ஜெய் ஆனந்த் என்று மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தினகரனுக்குத்தான். சசிகலாவின் சகோதரர் திவாகரன் தன் மகனுக்குக் கட்சியில் ஏதாவது முக்கியப் பொறுப்பு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் எனப் பல வழிகளில் முயற்சி செய்தார். சசிகலா சிறைக்குப் போன புதிதில் பெங்களூருவிலேயே தங்கி, தினமும் சிறைக்குப் போய் அத்தையைச் சந்தித்துவந்தார் ஜெய் ஆனந்த். எப்படியாவது தினகரனுக்கு அடுத்த நிலையில் தன்னை உட்கார வைத்து அழகு பார்ப்பார் அத்தை சசிகலா என ஆசை ஆசையாகக் காத்திருந்தார் ஜெய் ஆனந்த். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
பொங்கலுக்கு முன்பாகச் சிறைக்குச் சென்று சசிகலாவைப் பார்த்திருக்கிறார் ஜெய் ஆனந்த். அப்போது, ‘கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றுதான் நான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். டிடிவிகிட்ட என்ன சொன்னாலும் அவரு கண்டுக்கவே இல்லை. அதனால், மக்களுக்கு சேவை செய்ய நானே ஒரு அமைப்பை தொடங்க முடிவு பண்ணியிருக்கேன். இது அரசியல் அமைப்பு இல்லை. சேவை மட்டும்தான் செய்யப் போறேன்’ எனச் சொன்னாராம். அதற்கு சசிகலாவோ, ‘இப்போ கட்சியும் நம்ம கையில் இல்லை, ஆட்சியும் கையில் இல்லை. இதுல உனக்கு என்ன பொறுப்பு கொடுக்க முடியும்? நான் எது சொன்னாலுமே அவரு கேட்கிறது இல்லை. நீ என்னமோ ஆரம்பிச்சு நடத்து. ஆனால், திரும்பவும் அக்கா பேரை அசிங்கப்படுத்துற மாதிரி எதுவும் செஞ்சுடாதீங்க...’ என்று சொல்லி அனுப்பினாராம்.
அதன் பிறகுதான், போஸ் மக்கள் பணியகத்தைத் தொடங்கியிருக்கிறார் ஜெய் ஆனந்த். இதில் அரசியல் இல்லை என அவர் சொன்னாலுமே அரசியல்தான் ஜெய் ஆனந்த்தின் டார்கெட் என்கிறார்கள் அவரது தரப்பில். அதிமுகவில் இருக்கும் இளைஞர்களை ஒன்றிணைக்கும் வேலையைத்தான் முதல் கட்டமாகத் தொடங்கப் போகிறாராம். ரஜினி எப்படி முதலில் தன் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வேலையைத் தொடங்கினாரோ, அதேபோல ஒரு அசைன்மென்ட்டை ஜெய் ஆனந்த் கையில் எடுத்திருக்கிறார். முதலில் பணியகம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடக்கும். பணியகம் மூலமாக, மக்களிடம் போவது, மக்கள் பிரச்சினைக்காகப் போராடுவது எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் போகிறார். அதன் பிறகு, பணியகத்தைக் கட்சியாக மாற்றுவதே அவரது திட்டம். இது தினகரனுக்கும் தெரியும்.
ஜெய் ஆனந்த் பணியகம் தொடங்கியதில் தினகரனுக்கு உடன்பாடு இல்லை. ‘இப்போ எதுக்கு இவரு இடையில் புகுந்து குழப்பிட்டு இருக்காரு... ஏற்கெனவே இருக்கிற குழப்பத்துக்கே விடை கிடைக்காமல்தான் ஓடிட்டு இருக்கோம். இவர் புதுசா எதையோ பேசிட்டு இருக்காரு. இது நல்லதுக்கு இல்லை’ எனத் தனது குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் தினகரன்.
இந்த தகவல் திவாகரன் காதுக்கும் போயிருக்கிறது. ‘அவரு மட்டும் எம்.எல்.ஏ. ஆவாரு, கட்சியைக் கைப்பற்றுவாரு, புதுக் கட்சி ஆரம்பிக்க ப்ளான் போடுவாரு... நாங்க அப்படியே இருக்கணுமா?’ என்று திவாகரனும் கேட்டதாகச் சொல்கிறார்கள். இப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது மன்னார்குடி குடும்பப் பஞ்சாயத்து” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
“புதிய பணியகத்துக்கான லோகோவுடன் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார் ஜெய் ஆனந்த். தினகரன் மீது கோபத்தில் இருக்கும் சசிகலாவைத் தங்களது பணியகத்துக்குள் கொண்டுவருவதுதான் ஜெய் ஆனந்தின் அடுத்த திட்டம். இந்தத் திட்டத்துக்கு இளவரசி மகன் விவேக்கும் கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம்”

கருத்துகள் இல்லை: