புதன், 24 ஜனவரி, 2018

விஜயேந்திரன் சுந்தரனார் நினைவிடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் ... தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை


மின்னம்பலம்: சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எச். ராஜாவின் தந்தை பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா ராயப்பேட்டையில் நேற்று (ஜனவரி 23) நடைபெற்றது.
இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பேராசிரியர் சாலமன் பாப்பையா, காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், எச்.ராஜா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
நூலை வெளியிட்டுப் பேசிய பன்வாரிலால், “மொழி வளம் மிக்க இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் பிரதான மொழிகள். சமஸ்கிருதம், பல மொழிகளுக்குத் தாய் மொழியாக உள்ளது. அறிவியல் சார்ந்த விஷயங்கள் சமஸ்கிருதத்தில் புதைந்துள்ளன. அதைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

சாலமன் பாப்பையா பேசுகையில், “தமிழுக்குப் புதிய வரவுகள் வர வேண்டும். மக்கள் மனதில் இருக்கும் இருளை அகற்ற வேண்டும். சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு நூல்கள் வந்தால் அதைப் படிப்பதற்கு தடை இல்லை” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். அவரது இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவர் அவமரியாதை செய்துவிட்டதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜயேந்திரர் தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று சங்கரமடம் விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: