வியாழன், 25 ஜனவரி, 2018

உச்ச நீதிமன்ற நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது!*


இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது மிகப்பெரிய நெருக்கடி என்று கூறுகிறது “லைவ் லா” இணையதளம்.
தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பேசியதன் சுருக்கம் கீழ் வருமாறு :
“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”
“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.”

“நாங்கள் நான்கு பேருமே சொல்கிறோம். நீதித்துறை என்ற இந்த நிறுவனத்தை பாதுகாக்கத் தவறினால் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போய்விடும்… இன்று காலை கூட ஒரு குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியை சந்தித்து நாங்கள் நான்கு பேரும் சில கருத்துகளைக் கூறினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் அதனை ஏற்கவில்லை. எனவேதான் நீதித்துறையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று இந்த நாட்டு மக்களிடம் கூறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.”
“ஏனென்றால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடமை தவறியது பற்றி இந்த நாட்டின் சான்றோர் பலர் முன்னர் விமரிசித்திருக்கிறார்கள். அதுபோல செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் லோகுர் ஆகிய நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்க தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்று கருதுகின்றோம். எனவேதான் இந்த நிலைமையை நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.”
“என்ன வழக்கு தொடர்பான பிரச்சினை?” என்று நிருபர்கள் கேட்டதற்கு “இரண்டு மாதங்கள் முன் நாங்கள் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை உங்களுக்குத் தருகிறோம். அதில் விவரங்கள் உள்ளன” என்றார் ரஞ்சன் கோகோய்.
“நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு பற்றிய பிரச்சினையா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார் ரஞ்சன் கோகோய்.
“தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் கொண்டு வரப்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். இனி நாடு முடிவு செய்யட்டும்” என்றார் செல்லமேஸ்வர்.
“இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம். அவ்வளவுதான்” என்றார் கோகோய்.
*அன்பார்ந்த வாசகர்களே,*
சோரப்தீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்க மறுத்து நீதிபதி லோயோ மர்மமான முறையில் இறந்து போனது பற்றி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. மும்பை வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி இது நடக்கிறது
பாபர் மசூதி வழக்கு மோடியின் அரசியல் நோக்கத்துக்கு பயன்படும் விதத்தில் தீபக் மிஸ்ராவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் லஞ்சக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்விலிருந்து மாற்றி, தனக்கு தோதான நீதிபதிகளை விசாரிக்க சொல்கிறார். இது தொடர்பாக வழக்கு தொடுத்து பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறது உச்ச நீதிமன்றம். ( பார்க்க டிசம்பர் இதழ் பு.ஜ )
நீட் வழக்கில் மெயின் வழக்கு விசாரணை முடியாத போதே, தேர்வு திணிக்கப்படுகிறது. அந்த முறைகேட்டின் தொடர்ச்சிதான் மேற்படி போலி மருத்துவக் கல்லூரி வழக்கு.
இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர் கலிகோ புல் தற்கொலைக் கடிதத்தில் முன்னாள் தலைமை நீதிபதி கேஹர் முதல் இந்நாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரையிலானோர் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களே அந்த வழக்கை விசாரித்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.
– இப்படி எண்ணிலடங்கா முறைகேடுகள். நீதிபதிகள் நியமனத்திலிருந்து அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் வரையில் அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மோடி பிரதமரானபின் நீதித்துறையை ஆர்.எஸ்.எஸ் கையாள்களைக் கொண்டு நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதனைக் கேள்விக்குள்ளாக்கிய காரணத்தினால்தான் தமிழக வழக்கறிஞர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.
பார்ப்பன பாசிசமும் ஊழலும் கைகோர்த்துக் கொண்டு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் கோலோச்சுகின்றன.
அக்லக் என்ற பரிதாபத்துக்குரிய முஸ்லிம், உனாவின் தலித்துகள், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகியோர் மட்டுமல்ல, தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு மரணம்தான் என்று மிரட்டுகிறது பார்ப்பன பாசிசக்கும்பல்
தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு தலையாட்டிய நீதிபதிகளை நினைவு படுத்தி, அத்தகைய நிலைமை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள் இந்த நான்கு நீதிபதிகளும்.
எல்லா முனைகளிலும் தோல்வியடைந்து, மக்களின் வெறுப்பை ஈட்டி வரும் மோடி தலைமையிலான பார்ப்பன பாசிசக் கும்பல், பெயரளவிலான ஜனநாயகத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்து ராஷ்டிரக் கொடுங்கோன்மை சமீபிக்கிறது. எச்சரிக்கை.. எச்சரிக்கை!
- Srinivasan Perumal

கருத்துகள் இல்லை: