ஞாயிறு, 21 ஜனவரி, 2018

எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: நிதி சுமை தெரியவில்லையா?

மின்னம்பலம்: ‘எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும்போது அரசின் நிதி சுமை ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லையா?’ என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக நேற்று முன்தினம் (ஜனவரி 19) தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைந்த கட்டணமே வசூல் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. திமுக, பாமக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அறிவித்துள்ளன.
எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: நிதி சுமை தெரியவில்லையா?இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை, “தற்போதுதான் வேலைநிறுத்தம் முடிந்து பேருந்துகள் ஓட ஆரம்பித்துள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
“போக்குவரத்துத் துறை நஷ்டத்தைச் சந்தித்துள்ளதற்குக் காரணம் நிர்வாக சீர்கேடு, ஊழல், துறையை மேம்படுத்த சரியான திட்டங்கள் இல்லாததுதான். நிதி பற்றாக்குறை இருக்கிறது என்றால் ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லாமல் செயல்படுவதையே காட்டுகிறது. மற்ற மாநிலங்களுடன் பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் ஆட்சியாளர்கள் தொழில்வளர்ச்சி போன்றவற்றில் அண்டை மாநிலங்களை ஏன் ஒப்பிடவில்லை. கட்டண உயர்வுக்கு நிதிச்சுமை அதிகரித்ததுதான் காரணம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், எம்.எல்.ஏக்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கும்போது நிதி நெருக்கடி இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையா. சுமையை மக்கள்மீது சுமத்திவிட்டு ஊதிய உயர்வை தாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது எவ்வகையில் நியாயம்?” என்று கேள்வியும் எழுப்பினார்.
மேலும், “பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: