திங்கள், 22 ஜனவரி, 2018

கீழடி அகழாய்வு பிப்ரவரியில் தொடக்கம்!

கீழடி அகழாய்வு பிப்ரவரியில் தொடக்கம்!மின்னம்பலம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டுவரும் ஒரு சங்க கால வசிப்பிடமாகும். இந்த அகழாய்வு மையம் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில், கீழடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையால் இங்கு 3 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது குறித்துத் தொல்லியல் துறை அதிகாரிகள், "50 லட்சம் செலவில் நான்காம் கட்ட அகழாய்வை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைக்கவுள்ளார். அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கவுள்ளது" என்று தெரிவித்தனர்.
கீழடி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுவரை மொத்தம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வில் சங்க கால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் பயன்படுத்திய செங்கல் கட்டுமானங்கள், சுடுமண்ணால் ஆன உறைக் கிணறுகள், பல அரிய கல்மணிகள், யானைத் தந்தத்தினால் ஆன பொருட்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் பாத்திரங்கள், விளையாட்டுப் பொருட்கள் என பல்வேறு வகையான அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: