புதன், 24 ஜனவரி, 2018

மலையக தமிழ் பெண் அதிபரை முழங்காலிட செய்த முதலமைச்சர் தசநாயக கைது


பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்தார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மூன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸில், நேற்று (23) சரணடைந்தார்.
இதனையடுத்து பதுளை பொலிஸார் அவரை, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, நீதவான் அவரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்ததுடன், வழக்கை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதன்போது முதலமைச்சர் சார்பாக, ஐந்து சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றத்துக்கு முதலமைச்சர் கொண்டு செல்லப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும், முதலமைச்சரின் ஏராளமான ஆதரவாளர்களும், நீதிமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்தனர். முதலமைச்சர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பதுளையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.


 ஊவா மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் சில பகுதிகளில், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.மேலும், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணைக்கு, மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானி ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், முதலமைச்சர் தவிர்ந்த அனைவரும் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகிறது.இலங்கைக்நெட்

கருத்துகள் இல்லை: