புதன், 24 ஜனவரி, 2018

எடப்பாடி அணிக்கு வரும் 7 எம்.எல்.ஏ.க்கள்?

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி அணிக்கு வரும்  7 எம்.எல்.ஏ.க்கள்?மின்னம்பலம் :“ஒருவேளை தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அதில் எங்களால் சேர முடியாது. ஆனால், அவர் தனியாகக் கட்சி தொடங்கும் பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களும் வெளியிலிருந்து ஆதரவு தருவோம். அவர் தனியாகச் செயல்படுவார். நாங்கள் தனியாகச் செயல்படுவோம். ஆனால் எங்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்கும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். தினகரன் கட்சி தொடங்கும் பட்சத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அவரோடு போனால், கட்சித் தாவல் தடை சட்டத்தில் பதவியை இழக்க நேரிடும். ஏற்கெனவே இது தொடர்பாக வழக்கு நடந்து வரும் சூழ்நிலையில் இப்படியான ஒரு ரிஸ்க் எடுக்க 18 பேருமே தயாராக இல்லை. அதனால்தான் வெற்றிவேல் இப்படிச் சொல்லியிருக்கிறார். தினகரனுடன் இது தொடர்பாக கலந்து பேசிவிட்டுத்தான் மீடியாவிடம் பேசினார் வெற்றிவேல்.

இந்தச் சூழ்நிலையில் எடப்பாடி தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மூலமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் பங்கேற்றார்களாம். அவர்களிடம் பேசிய அமைச்சர், ‘இவ்வளவு நாளாக கட்சியை மீட்கப் போறேன் என்று சொல்லிட்டு இருந்தவரு, இப்போ தனிக்கட்சி பற்றி யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. இனி அதிமுக என்றால், அம்மா என்றால் அது நாங்கதான். இனியும் அவரோடு போய் என்ன சாதிக்க முடியும்னு நினைக்கிறீங்க? ஒரு தொகுதியில் பணத்தை கொடுத்து ஜெயிச்சுட்டா எல்லா தொகுதியிலும் அவரால் ஜெயிக்க முடியுமா? இதெல்லாம் பிராட்டிக்கலா சாத்தியாமா என்பது உங்களுக்கே தெரியும். நீங்க எதையும் யோசிக்காமல் இங்கே வாங்க. இது நம்ம ஆட்சி. நம்ம கட்சி. உங்களுக்கு என்ன தேவையோ அதை செஞ்சு கொடுக்க இங்கே தயாராக இருக்கோம். நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க...’ என்று சொன்னாராம்.
இந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாங்கி வந்த, தென் மாவட்ட எம்.எல்.ஏ. ஒருவர், ‘எங்களுக்கு கொஞ்சம் டைம் வேணும். கலந்து பேசிட்டு சொல்றோம். எங்களோட நோக்கம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். இன்னொரு கட்சி தொடங்கி மறுபடியும் பிரிஞ்சு நிற்கணும்னு நாங்க எந்த சூழ்நிலையிலும் நினைக்கலை. நாங்க பேசிட்டு சொல்றோம்’ எனச் சொன்னாராம். இந்த பேச்சுவார்த்தையின் தகவல் எடப்பாடிக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. எப்படியாவது பேசி அவங்களை இங்கே கொண்டு வந்துடுங்க... என சொன்னாராம் எடப்பாடி” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்
தொடர்ந்து, ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது ஃபேஸ்புக்.
“பேருந்துக் கட்டண உயர்வு தமிழக அரசுக்குப் பெரும் தலைவலியாகி விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் போராட்டங்கள் நடக்கிறது. எடப்பாடி வீட்டை முற்றுகையிடுகிறார்கள். போராட்டக் களத்தில் மாணவர்களும் கைகோர்த்து நிற்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கட்டண உயர்வை எதிர்த்துப் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, `பேருந்துக் கட்டணத்தை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பேருந்துக் கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது அரசு தரப்பைக் குஷியாக்கி இருக்கிறது.
‘போராடுறவங்க போராடிட்டுதான் இருப்பாங்க. இங்கே என்ன நிர்வாகச் சிக்கல் இருக்குன்னு நமக்குதான் தெரியும். எல்லாம் இன்னும் நாலு நாளைக்கு அப்படித்தான் இருக்கும். அடுத்த பிரச்னை வந்தால் இதை மறந்துடுவாங்க. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் காரணம் கொண்டும் அடக்குறையை கையாள வேண்டாம். போரட்டம் நடத்துபவர்களுக்கு பாதுகாப்பு மட்டும் கொடுக்கச் சொல்லுங்க. அரசுக்கு எதிராக அவங்க கோபம் இருக்கும். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர். இது தொடர்பாக முதல்வர் அலுவலகத்திலிருந்து காவல் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்

கருத்துகள் இல்லை: