செவ்வாய், 31 மே, 2016

ஐ.ஜே.கேவின் வாக்குகள் அதிமுகவுக்கு... மோடி ஜெயலலிதா ரகசிய கூட்டணி! ...

வாக்கு எண்ணிக்கை சென்று கொண்டு இருந்தது. நான்கு சுற்று பாக்கி இருந்தது. அப்போது நான் சொன்னேன்," இப்ப நாலாயிரம் ஓட்டு முன்னணினா வெற்றி. இல்லன்னா சான்ஸே இல்ல". அப்போது ஆயிரம் வாக்குகள் தான் முன்னணி. "அவ்ளோ தான்" என்றேன்.
கடைசி மூன்று சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் அண்ணன் தாமரை.ராஜேந்திரன் முன்னணி பெற்று 2048 வாக்குகளில் வெற்றி பெற்றார். உடன் இருந்தவர்கள், அந்த ஊர் ஏமாற்றி விட்டது, இந்த ஊர் கை கொடுத்தது என சில செய்திகளை விவாதித்தார்கள். இதைத் தாண்டி காரணம் இருக்கும் என்பது தான் என் எண்ணம்.
வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேந்திரன் சான்றிதழ் பெற்று செல்ல காத்திருந்து, அலுவலகம் சென்றேன். காரணம், வாக்கு எண்ணிக்கை மையமான அரசு கலைக்கல்லூரி எதிரில் தான் மாவட்டக் கழக அலுவலகம். கழகத் தோழர்கள் குழுமியிருந்தனர். 

அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். சிலர் கதறி அழுதனர். சமாதானப் படுத்தினேன்.அப்போது தான் ஒரு தோழர் கேட்டார்,"ஐ.ஜே.கே கட்சியின் வாக்குகளை கவனத்தீர்களா?". ஆராய்ந்தேன். 1330 வாக்குகள் பெற்றிருந்தார் வேட்பாளர் சகோதரர் பாஸ்கர். இதில் என்னப் பிரச்சினை?. "கடந்தத் தேர்தலில் இதே பாஸ்கர் பெற்ற வாக்குகள் எவ்வளவு ?". "9,501".
"9,501-1,330= 8,171. இந்த வாக்குகள் எங்கே போனது?", என்ற ஆராய்ச்சியில் இறங்கினோம். ஒரு ஐ.ஜே.கே நிர்வாகி சிக்கினார். "என்னாச்சி உங்கக் கட்சிக்கு?", என்று கேட்டோம். "எங்கக் கட்சித் தலைவர் சொல்லிட்டாரு, நம்ம வேட்பாளர் வெற்றி பெற முடியாது, அதனால அதிமுகவுக்கு போட்டுடுங்க. நாங்க அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டோம். இங்க மட்டுமில்லை. எல்லாத் தொகுதியிலும் தான்", என்றார்.
அப்புறம் தான், விசாரணையில் இறங்கினோம். குன்னம் தொகுதியில் 2006ல் ஐ.ஜே.கே பெற்ற வாக்குகள் 13,735 , இப்போது பெற்றிருக்கும் வாக்குகள் 1,168 தான். ஷாக் அடித்தது. பக்கத்து தொகுதியான லால்குடியை கவனித்தேன். 14,404 வாக்குகள் 802 ஆகியிருந்தது. இப்போது தான் வெற்றி சூட்சுமம் புரிந்தது.
காலை 11.00மணிக்கே பிரதமர் மோடி வாழ்த்து சொன்ன மர்மம் அது தான். மோடி வழிக்காட்டுதல் படி, ஐ.ஜே.கே வேட்பாளர்கள் போட்டியிட்டத் தொகுதிகளில் வாக்குகள் காணாமல் போயிருக்கிறது . மதுரவாயில் தொகுதியில் மாத்திரம் தான் 4,508 வாக்குகள். மீதி 42 தொகுதிகளிலும் 1,500க்கு குறைவு தான்.இதை நான் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் தெளிவாக சொல்லி விட்டேன்.
அதிமுக வேட்பாளரின் சொந்த ஊரான தாமரைக்குளம் கிராமத்தில் அவர் 100 வாக்குகள் தான் கூடுதல் பெற்றுள்ளார். அதே போல அந்த சுற்றுப்பகுதியில் பெரிய வாக்குவித்தியாசம் இல்லை. அதிமுக வேட்பாளர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அங்கு ஆதரவு குறைவாக இருக்கும் என்பது பொதுக் கருத்தாக இருந்தது. ஆனால் உடையார் சமூகத்தினரின் கழக ஆதரவில் குறைவில்லை. அதே போல் மூப்பனார் சமூகப் பகுதியிலும் வாக்குகள் கூடுதல் தான். சாதி பார்த்து யாரும் வாக்களிக்கவில்லை. ஐ.ஜே கே கட்சி வாக்குகள் தான் பின்னடைவுக்கு காரணம்.
அதே போல், பா.ம.க கோலோச்சும் பகுதியில் தான் அதிமுக கூடுதலாக 3,000 வாக்குகளை பெற்றிருக்கிறது.இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். சாதிக் கட்சிகள் திமுகவை வீழ்த்த எடுத்துள்ள முயற்சிகள் அம்பலப்பட்டுவிட்டது.
சிவசங்கர் எஸ்.எஸ்   Venkat Ramanujam

கருத்துகள் இல்லை: