சனி, 4 ஜூன், 2016

சிலை கடத்தல் தீனதயாளனை இயக்கும் சினிமா அரசியல் புள்ளிகள்.... 120 கலைப்பொருட்கள்..


சிலை கடத்தல் புகாரில் தேடப்பட்டுவந்த தொழிலதிபர் தீனதயாளன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை, முரேஷ் கேட் சாலையில் ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கடந்த சில தினங்களுக்குமுன் சோதனை நடத்தினர்.
முதற்கட்டமாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 55 சிலைகள் கைப்பற்றப்பட்டன.
இந்த விவகாரத்தில் மான்சிங் (58), குமார் (58), ராஜாமணி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மூன்றுபேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லும் ஏஜெண்டுகள் என்பது தெரிந்தது. வீட்டின் உரிமையாளரும், கடத்தல் கும்பலின் தலைவருமான தீனதயாளன் (78) அங்கிருந்து தப்பினார். உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை வைத்து சிலை கடத்தல் வேலையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த சுபாஷ்சந்திர கபூரின் வலதுகரம்தான் தீனதயாளன் என்பது தெரிந்தது.
அந்த பங்களாவில் இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், போலீஸார் சோதனை செய்யவில்லை. அங்கு சிலைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருக்கலாம் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் மீண்டும் போலீஸார் தீனதயாளன் வீட்டில் சோதனை செய்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட சிலைகளை போலீஸார் கைப்பற்றினர். தீனதயாளனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க காவல்துறை, தீனதயாளனின் பாஸ்போர்ட்டை முடக்கியது. இந்தியாவில் உள்ள அவரது 5 வங்கிக் கணக்குகளையும், ஹாலாந்தில் உள்ள டச்சு வங்கிக் கணக்கையும் முடக்கினர். அவரது வீட்டில் இருந்து இதுவரை கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், ஓவியங்கள், தந்தத்தால் ஆன சிலைகள் என்று பல்வேறு வகைகளில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோராயமாக 120 சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட சிலைகளின் மொத்த எண்ணிக்கையை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை. கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
அநேக சிலைகள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்தச் சிலைகளை ஆய்வுசெய்ய மத்திய தொல்லியல் துறை சென்னை வர இருக்கிறது. இந்நிலையில், இன்று பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தீனதயாளன் சரணடைந்தார்.
கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தீனதயாளனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்று பதிவுசெய்யும் வேலையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். இந்த விவகாரத்தில் தீனதயாளனுக்கு வலதுகரமாகச் செயல்பட்ட அவரது மகன் கிருதயாளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தீனதயாளன் சென்னையில் இருந்து தலைமறைவானவுடன், அவருக்கும் தமிழ் சினிமாவின் பிரபல நடன நடிகைக்கும் தொடர்பிருப்பதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது, போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரித்திருக்கின்றனர். அவர் மட்டுமில்லாது, தீனதயாளனுடன் மேலும் சில சினிமா பிரபலங்கள் தொடர்பில் இருந்ததால், அவர்கள் குறித்தும் விசாரணை செய்துள்ளனர். மேலும், தீனதயாளன் தன்னந்தனியாக அரசியல் மற்றும் அதிகார சக்திகளின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய சிலை கடத்தலை அரங்கேற்றி இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் தீனதயாளன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்குள்ளாகவே அடுத்தடுத்து கைது சம்பவங்கள் அரங்கேறலாம் என்று போலீஸ் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  minnambalam.com/

கருத்துகள் இல்லை: