கலைத் துறையில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கி வருவதற்காக சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உயரிய விருதான பத்ம விபூஷணுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட கலைஞர்களை மத்திய அரசு கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கும் நிகழ்வை வரும் 28, ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், முதலாம் கட்ட நிகழ்விலேயே ரஜினிகாந்துக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து அவருக்கும் மத்திய அரசிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் சங்கர் இயக்க, ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த எந்திரன் படத்தின் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் "எந்திரன் 2.0' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் டெல்லி ஜவாஹர் லால் நேரு விளையாட்டரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது விருது பெறும் நிகழ்வு டெல்லியில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு எந்திரன் படத்துக்காக டெல்லியில் ஒரு மாதம் தங்கியிருக்க ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, டெல்லி வந்துள்ள ரஜினி, இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து படத்தயாரிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பின்னணியில், டெல்லியில் தங்கியிருக்கும் நாள்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பத்ம விருது பெறும் நிகழ்வுக்கு முன்னதாக இந்தச் சந்திப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு பிரதமர், அத்வானி அலுவலகங்கள் அவற்றின் செயலக அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக