திங்கள், 14 மார்ச், 2016

BBC:உடுமலைப் பேட்டை ஜாதி வெறி கொலை CCTV youtube , மனைவியின் தந்தை சரண்


தமிழகம், உடுமலைப் பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் ஷங்கர் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சங்கரின் மனைவி கவுல்யாவின் தந்தை சின்னச்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். இருந்தபோதும் இந்தக் கொலைக்கும் சின்னசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சின்னச்சாமியை மார்ச் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்களை திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தனிப்படைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தங்களிடம் தாக்கல் வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு கோரியுள்ளன.
இதனிடையே, உடுமலைப்பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் தந்தை வேலு, இது திட்டமிடப்பட்ட கொலை தான் என செய்தியாளர்களிடம் உறுதியாக குற்றம் சாட்டினார்.
பெண்ணின் குடும்பத்தார் பலமுறை மிரட்டல் விடுத்துவந்ததாக குறிப்பிட்ட அவர், பொறியியல் மாணவரான தமது மகனின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.
சங்கரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
கௌரவக் கொலைகளை தடுக்கவும் ஜாதி ரீதியான கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
இதனிடையே, இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. நேற்று ஞாயிறன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அவர், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை: