புதன், 16 மார்ச், 2016

அம்மாவை வீழ்த்த அசுவமேத யாகம் ஓ.பி.எஸ்! - அதிர்ந்தது கார்டன்!.... நிரந்தரமா உள்ளே இருக்க பன்னீரு வளர்த்த தீ?

விகடன்.com :  சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம் அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து  வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி நாம், போயஸ் கார்டனில் உள்ள உதவியாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“‘உங்களால் மட்டும் அல்ல... கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ். குறித்து உளவுத்துறை சேகரித்துத் தரும் தகவல்களை எங்களாலும் நம்ப முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா-சசிகலா இருவருமே நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். ஆர்வமாக இருந்திருக்கிறார்.


இதற்காக, பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் அவர் யாகம் நடத்திய படங்கள் அம்மாவின் கைக்குக் கிடைத்த பிறகுதான் அம்மாவுக்கு கடும் கோபம். அது மன்னர்கள் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட அசுவமேத யாகம் போன்றது. இந்த யாகத்தின் பலன் என்பது, ஒருவரின் தனிப்பட்ட பலத்தைக் காட்டுவது, செல்வச் செழிப்பு, அதிகாரம், எதிரிகள் அழிவது, ராஜயோகம் என பல வகைகளிலும் பலன் தரக் கூடியது. இந்த யாகத்தில் எருமை மாடு ஒன்றையும் பலியிட்டு நாள் முழுக்க ஓ.பி.எஸ். யாகம் நடத்தினாராம்.

ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டிற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் மீண்டும் கார்டனுக்குள் வரவிடக்கூடாது என்பதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாட்டை ஆளும் ராஜயோகம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். நினைத்திருந்தார். ஆனால் அவரது மறைமுக ஆசைகள் இப்படி அம்பலமாகும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை” என்றார் ஒருவர் அதிர்ச்சி விலகாமல்.
இன்னொருவரோ, எலெக்‌ஷன், கலெக்‌ஷன் பற்றி பகீர் தருகிறார்.
“தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக ஓ.பி.எஸ். வசூலித்த தொகை மட்டும் 88 கோடி ரூபாய். ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த நிலையில் இருந்த சீனியர் அமைச்சர்கள் இருவரும் தலா 60 கோடி வரையில் சீட்டுக்காக வசூல் வேட்டை ஆடியிருக்கிறார்கள். இந்த அணி தேர்வு செய்த வேட்பாளர்கள் அனைவரும் ஓ.பி.எஸ். கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டடவர்கள் என்பதுதான் அதிர்ச்சி தகவல்.

இதுதவிர, சீனியர் அமைச்சர் ஒருவர் மலேசியாவில் வாங்கிக் குவித்திருக்கும் 12 பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், நிலங்கள் என இந்த அணியினர் வாங்கிக் குவித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கைப்பற்றும் வேலையில் கார்டன் டீம் இறங்கியிருக்கிறது. தேர்தல் என்பதால் அம்மா அமைதியாக இருக்கிறார்.. இல்லாவிட்டால், இந்நேரம் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும். ‘தேர்தலில் சீட் வாங்கித்தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு அம்மாவுக்கு சீனியர்கள் மீது கடும் வெறுப்பு. இதனால், சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள்” என்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க.வில் உள்ள சில மூத்த தலைவர்களிடம் பேசியபோது, ''சீனியர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முன் இதைப்போன்ற தகவல்களை கசியவிடுவது கார்டன் ஸ்டைல். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அந்த டெக்னிக்கைத்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு அப்ளை செய்கிறார்கள்” என்கிறார்கள்.

வழக்கமாக, எதிரிகள் அழிய வேண்டும் என சக்கரத்தாழ்வாருக்கு ஜெயலலிதாதான் யாகம் செய்வார் என்பார்கள். இப்போது அவர் பாணியிலேயே ஓ.பி.எஸ். யாகம் நடத்தியதாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: