திங்கள், 14 மார்ச், 2016

மாயமான மல்லையாவை பிடிச்சுட்டு வாங்கடானா, மாசமான டீச்சரை பிடிச்சுட்டு வந்திருக்காய்ங்கெ!”



கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர் கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014ஆம் ஆண்டில் 6 மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். எல்.கே.ஜி. வகுப்புக்கு பாடம் நடத்தினார். அதே ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. எம்.எஸ்சி. பட்டதாரியான கோதைலட்சுமிக்கு, செங்கோட்டை அருகில் உள்ள காலாங்கரை சொந்த ஊர் ஆகும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கோதைலட்சுமி திடீர் என்று மாயமானார். அவரை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால், அவரைப் பற்றி தகவல் தெரியவராததால், தந்தை கேசரி செங்கோட்டை போலீசாரிடம் புகார் செய்தார்.
கோதைலட்சுமி மாயமான நாளில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரும் மாயமானார். இது தொடர்பாக கடையநல்லூர் போலீசில், புகார் செய்யப்பட்டது.
இருவரும் மாயமானது குறித்து 2 போலீஸ் நிலையங்களிலும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், ஆசிரியை கோதை லட்சுமி வேலைபார்த்து வந்த, அந்த பள்ளிக்கூடத்தில்தான் அந்த மாணவரும் 10ஆம் வகுப்பு படித்து வந்தார் என்ற விவரம் தெரியவந்தது.
பள்ளிக்கூடத்தில் படித்து வந்த அந்த மாணவரும், ஆசிரியை கோதை லட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பள்ளிக்கூட இடைவேளை நேரங்களில் இருவரும் சந்திப்பது, வெளியிடங்களில் சுற்றித் திரிவது என்று இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் ஆசிரியையுடன், மாயமாகி விட்டார்.
தென்காசி பகுதியில் இருந்து கிளம்பிய அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் என அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தனர். அவர்களுடைய நண்பர்களுடன் செல்போனில் பேசுவதை வைத்து இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில், அந்த மாணவரின் தாயார் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர், ஆசிரியை கோதை லட்சுமி ஆகிய 2 பேரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து, அவர்களை பிடித்தனர்.
அந்த மாணவர் ஒரு பனியன் கம்பெனியிலும், ஆசிரியை கோதை லட்சுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். கோதை லட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
அங்கிருந்து இருவரையும் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மாலையில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது “எங்களை பிரித்துவிடாதீர்கள். சேர்ந்து வாழவிடுங்கள்” என்று போலீசாரிடம் உருக்கமாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் இருவரையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், ஆசிரியையை சிறையிலும் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பாக சமூக வலைத்தள பதிவர் ஒருவரின் பதிவு: “மாயமான மல்லையாவை பிடிச்சுட்டு வாங்கடானா, மாசமான டீச்சரை பிடிச்சுட்டு வந்திருக்காய்ங்கெ!”
யப்பா… என்னமா யோசிக்கிறாய்ங்கெ…!  //heronewsonline.com

கருத்துகள் இல்லை: