வெள்ளி, 18 மார்ச், 2016

மாடுகளை வெட்டக் கூடாது என்பவர்கள் குதிரையை அடித்தே கொல்கிறார்கள்!

vikatan.com இறைச்சிக்காக இந்தியாவில் மாடுகளை வெட்டக் கூடாது என்று கூறும் பாஜகவினர், போலீசாரால் வளர்க்கப்படும் குதிரையை அடித்துக் காலை உடைத்து இன்பம் காணுகிறார்கள்.அதே போல தமிழர்களின் மரபு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து மகிழ்ச்சிக் கண்டவர்களுடன் சேர்ந்துகொண்ட  ஆட்சியாளர்கள், ஒரு பாவமும் அறியாத குதிரை தாக்கப்பட்ட சம்பவத்தை எந்த மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை" என்கிறார்கள் சமூக மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறியது. அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். குதிரைப்படை போலீசாரும் அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

அப்போது பாஜக  எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, ஒரு போலீசாரிடமிருந்த லத்தியைப் பிடுங்கி குதிரையின் இடது பக்க பின்னங்காலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்தே, அந்த குதிரையின் காலை ஒடித்துவிட்டார். வலி தாங்காமல் அலறியபடி,குதிரை அங்கேயே சுருண்டு விழுந்தது. இந்தக் கொடூர சம்பவத்தின்  வீடியோ காட்சி சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் பரவி வைரலானது.

குதிரை என்ன செய்தது? போரட்டக்காரர்களை தடுத்ததா அல்லது பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா?  மாடுகள், பசுக்கள் மட்டும்தான் வாய் பேசாத விலங்குகளா? பாஜக உள்ளிட்ட இந்துமத தலைவர்கள் பெரிதும்  போற்றும் வீர சிவாஜி மாட்டின்மீது சென்றா போர் புரிந்தார்? குதிரையின் மீதுதானே ஏறிச் சென்று எதிரிகளை வென்று,  தனது வீரத்தை நிலைநாட்டினார். அவ்வாறு இருக்கையில் இப்படி அடித்தே காலை ஒடித்த கொடூரத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று விலங்கு நல ஆர்வலர்கள்  சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கிறார்கள்.

குதிரையிடம்கூட அன்புகாட்ட தெரியாத பாஜக எம்.எல்.ஏ.,  எவ்வாறு தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்  செய்த மக்களிடம் அன்பு காட்டுவார்? என்று அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகின்றனர். குஜராத் கலவரம், அயோத்தி பாபர் மசூதி இடிப்பு என்று சகிப்பின்மைக்கு உதாரணமாகத் திகழும் பாஜகவினரிடம்,  உண்மையான விலங்கு நல ஆர்வத்தை எதிர்பார்க்கவே முடியாததுதான். ஆனால் அதற்காக, பாரம்பர்யமாக மாட்டிறைச்சி உண்பவர்களைத் தடுப்பது, தடைவிதிப்பது அராஜகம்தானே.
ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கொந்தளிக்கும் விலங்குகள் நல ஆர்வலர்கள், போலீசின் குதிரை பாஜக எம்.எல்.ஏ.வால் அடித்தே கால் முறிக்கப்பட்ட கொடூர சம்பவம் குறித்து ஏன் கொந்தளிக்கவில்லை. வெறும் கண்டனங்கள் மட்டும் தெரிவித்துவிட்டு போராட்டங்கள் நடத்த ஏன் முன்வரவில்லை? இதிலிருந்தே பாஜகவின் போலி மதச் சார்பும், போலி கலாச்சார ஆதரவுக் குணமும் தெளிவாகிறது. ஜல்லிக் கட்டை தடுக்க போராடிய மேனகாகாந்தி, இந்தக் குதிரை மீதான கொடூர நிகழ்வுக்கு எதிராக ஏன் போராட முன்வரவில்லை.
ஆக,  தமக்கு அரசியல் லாபம்,  பதவி அதிகாரம் கிடைக்கிற பட்சத்தில் எந்த வேடத்தையும் போட்டுக்கொள்ளும் பா.ஜனதா என்பது குதிரையின் இந்த கால் உடைக்கப்பட்ட சம்பவம் உணர்த்துகிறது.

  - தேவராஜன்  

கருத்துகள் இல்லை: