வியாழன், 17 மார்ச், 2016

தினமலர்: தகுதியான ஆளின்றி தவிக்கும் தி.மு.க....தகுதியானவர்களை வெளியேற்றுவதிலேயே குறி.......

தமிழகத்தில், ஆறு முறை ஆட்சி கட்டிலை பிடித்த கட்சி என்ற பெருமையை பெற்ற, தி.மு.க., இன்று, கூட்டணி பேசக்கூட, தகுதியான ஆட்கள் இன்றி திணறிக் கொண்டிருக்கிறது.
திராவிட கழகத் தலைவர், ஈ.வெ.ரா. வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணா துரை மற்றும் சில தலைவர்கள் பிரிந்து, 1949 செப்., 17ம் தேதி, தி.மு.க.,வை துவக்கினர். கட்சி துவக்கப்பட்ட பின், 1952ல் நடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., பங்கேற்கவில்லை. இணைந்து போட்டி: அடுத்து, 1956 மே, 17ம் தேதி முதல், 20ம் தேதி வரை, திருச்சியில் நடந்த, தி.மு.க., இரண்டாவது மாநில மாநாட்டில், தேர்தலில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில், 112 இடங்களில் போட்டியிட்டு, 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.கடந்த, 1958 மார்ச் 2ல், தி.மு.க., மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, 'உதயசூரியன்' சின்னத்தை, தேர்தல் சின்னமாக பெற்றது. அடுத்து, 1962ல், நடந்த பொதுத் தேர்தலில், 50 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியது. என்னதான் சொன்னாலும் அழகிரிதான் இந்த மாதிரி விவகாரங்களுக்கு சரியான ஆளு....அதனால்தானோ அவருக்கு  கல்தா?  

தி.மு.க., தொடர் வெற்றி:
அடுத்து, 1967ல், நடந்த சட்டசபை தேர்தலில், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 138 இடங்களை பிடித்து, முதன் முறையாக ஆட்சியை பிடித்தது; அண்ணாதுரை முதல்வரானார். அவரது மறைவுக்கு பின், 1969ல் கருணாநிதி முதல்வரானார். அடுத்து, 1971, 1989, 1996, 2006, ஆகிய சட்ட சபை தேர்தல்களில், தி.மு.க., வெற்றி பெற்று, கருணாநிதி முதல்வரானார். இதுதவிர, பல லோக்சபா தேர்தல்களிலும், தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தே போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளது.அனைத்து கட்சி தலைவர்களுடனும், சுமுக உறவு வைத்துள்ளதால், கூட்டணி பேசி முடிப்பது கருணாநிதிக்கு எளிதாக இருந்தது. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலின் போது, கூட இருந்த காங்கிரசையும் கைவிட்டு, தே.மு.தி.க., கூட்டணிக்காக அலைமோதியது. ஆனால் விஜயகாந்த், வழக்கம் போல, போக்கு காட்டி, கடைசி நேரத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்று விட்டார்.
தனித்து போட்டி அறிவிப்பு:
அரசியலில் பரம வைரியாக இருக்கும், பா.ம.க.,வுடன், கடந்த தேர்தலில் கைகோர்த்த விஜயகாந்துக்கும், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததோடு, கடைசி வரை கூட்டணிக்காக அவரை எதிர்பார்த்து காத்திருந்த, தி.மு.க.,வும் படுதோல்வி அடைந்தது.அதே மாதிரியான ஒரு சூழல் இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க.,வுடன்தான் கூட்டணி ஏற்படும் என்பது போல, தே.மு.தி.க., போக்கு காட்டியபடியே, தடாலடியாக, தனித்து போட்டியிட போவதாக அறிவித்து, தி.மு.க.,வுக்கு கிலியை ஏற்படுத்தியது. சறுக்கல் ஏன்?< வலுவான கூட்டணியை இலகுவாக ஏற்படுத்தி வந்த, தி.மு.க.,வுக்கு சமீபத்தில் ஏற்பட்டு வரும் சறுக்கல் ஏன் என விசாரித்தபோது, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வில் கூட்டணி கட்சிகளுடன் பேச, குழு அமைக்கும் முறை பின்பற்றப்படும். ஆனால், சமீப காலமாக அந்த முறை பின்பற்றப்படுவதில்லை. விஜயகாந்த், தனித்து போட்டி என அறிவித்தபோது தான், கூட்டணி பேச கட்சியில் குழு அமைக்கப்படுவதில்லை என்பது,கருணாநிதிக்கு தெரியவந்தது. அதன் பிறகே, கூட்டணி பேசுவதற்காக, கட்சியில் ஸ்டாலின்உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க., கூட்டணி வாய்ப்பு பறிபோனதும், கூட்டணி குறித்து பேசும்படி, பொது செயலர் அன்பழகனிடம், கருணாநிதி கேட்டார். அவர், தன்னால் இயலாது எனக் கூறி விட்டார். கூட்டணியை பேசி முடிப்பதில் வல்லவரான, ஆற்காடு வீராசாமி தற்போது மறதி நோயால் அவதிப்படுகிறார்.மற்றொரு மூத்த தலைவரான துரைமுருகன், தன் துடுக்கான பேச்சால், அனைத்தையும் கெடுத்து விடுகிறார். தே.மு.தி.க., உடன் கூட்டணியை முடித்து விட்டதாக கூறிய, முன்னாள் அமைச்சர் வேலு மற்றும் சிலர் மீது, கருணாநிதி கடும் கோபத்தில் உள்ளார்.
திறமைசாலிகள் இல்லை:
கடந்த காலங்களில், வெளிப்படையான அரசியல் ஈடுபாட்டில் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் ஈடுபடாவிட்டாலும், திரைமறைவில் பேச வேண்டியதை பேசி, கூட்டணிகளை இறுதி செய்வதில் கில்லாடி. அவரைப் போன்ற திறமைசாலிகள் கட்சியில் இப்போது இல்லை. அதனால் தான், விஜயகாந்த் உள்ளிட்ட பலரையும், 'டீல்' செய்ய முடியாமல் கட்சி தவிக்கிறது. கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, பலருடனும் நட்புடன் இருந்து வந்தாலும், அவரை கூட்டணி விஷயத்தில் முக்கியத்துவம் அளித்து பேச்சுக்கு அனுப்பாததும், கட்சிக்கு பலவீனம்தான். முரண்பட்டு நின்ற காங்கிரசை, தி.மு.க., பக்கம் இப்போதும் திருப்பி கொண்டு வந்தவர் கனிமொழிதான். ஆனால், லேட்டஸ்ட்டாக அமைக்கப்பட்ட குழுவில், அவர் இடம்பெறவில்லை. மீண்டும் கூட்டணியை முடிவு செய்யும் பொறுப்பு, ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.அவரோ, தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார். இவ்வாறு, அவர்கள்தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: