சென்னை: சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பார்வர்டு பிளாக் கட்சி,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட 7 கட்சித் தலைவர்களை அதிமுக
பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று சந்தித்துள்ளார் .
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
தற்போதைய சூழலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியும், மக்கள் நலக்கூட்டணியும்
உறுதியாகியுள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்துப்
போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பாஜகவும் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அதிமுக இன்று தனது கூட்டணிப் பேச்சுவார்த்தையைத்
தொடங்கியுள்ளது.
7 கட்சித் தலைவர்கள்...
இன்று மதியம் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த
இந்த சந்திப்பில், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டுபிளாக்,
சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலில்...
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் தேமுதிக, சமத்துவ மக்கள்
கட்சி, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு
கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக
வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம் என 10 கட்சிகள் இடம் பெற்று இருந்தன.
தேமுதிக...
தேர்தல் முடிந்த சில மாதங்களில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக
வெளியேறியது. இதே போல் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியில்
இடம் பெற்றுள்ளது. புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டமைப்பில்
இருந்து வெளியேறி விட்டது.
5 கட்சிகள்...
மீதம் உள்ள 5 கட்சிகள் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருவதாக
நம்பப்படுகிறது. இது தொடர்பாக அந்த 5 கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவை
சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.
ஜெ.வுடன் சந்திப்பு..
இந்த சூழ்நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.பி.வி.கதிரவன்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியக் குடியரசுக்
கட்சியின் செ.கு.தமிழரசன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு
இளைஞர் பேரவையின் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத்,
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் இன்று போயஸ்
தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளனர்.
எர்ணாவூர் நாராயணன்...
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய எர்ணாவூர்
நாராயணன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சமத்துவ மக்கள் கழகம் என்ற
பெயரில் புதிய கட்சி தொடங்கினார்
பார்வர்டு பிளாக்...
கடந்தமுறை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.வி.கதிரவன்
உசிலம்பட்டி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமாகா...
இதற்கிடையே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதிமுக
கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான
பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more a://tamil.oneindia.com
Read more a://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக