திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்க அரசு தீர்மானம்

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப்
பயிற்சி அளிக்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட செஸ் விளையாட்டுக் கழகம் தலைவர் என்.விஜயன் கூறினார். சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செல்லம்மாள் நினைவு செஸ் போட்டி பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 60 பள்ளிகளைச் சேர்ந்த 780 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். 8 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 5 பிரிவுகளில்  போட்டியில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கு முதல் பரிசாக சைக்கிளும், இதர 100 மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் என்.விஜயன் பேசியது: அண்மையில் தமிழக கல்வித்துறை சார்பில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு உருவாக்குவதுடன்,பயிற்றுவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு பாடத்திட்டத்தைச் செயல்படுத்தும் பள்ளிகளில் செஸ் விளையாட்டு கற்பிக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல்,அறிவாற்றல் பெருகி,வரவேற்கத்தக்க பலன் கிடைத்துள்ளது
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செஸ் விளையாட்டு குறித்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகத்துடனும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மாதா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.ராஜா,மவுண்ட் செஸ் அகாடமி செயலர்
 ரவிச்சந்திரன்,காஞ்சிபுரம் மாவட்ட செஸ் விளையாட்டுக் கழக துணை செயலர் சந்தானம்,பொருளாளர் புவனா,வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். dinamani.com/

கருத்துகள் இல்லை: