வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சிரியாவில் ரசாயன குண்டு தாக்குதலில் 1300 பேர் பலி !

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Chemical-attacksyria.jpgஅம்மான்,
சிரியாவில் அதிபர் ஆதரவு படைகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தின. இந்த கொடூர தாக்குதலில் 1300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது.
அதிபருக்கு எதிராக கிளர்ச்சி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் குடும்பத்தினர் கால் நூற்றாண்டுக்கு மேலாக பதவியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகம் மலரச்செய்வதற்காக பொதுமக்களும், புரட்சிப்படையினரும் இணைந்து அங்கு மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிளர்ச்சி நீடித்து வருகிறது. அதிபர் ஆசாத்தின் ஆதரவு படையினர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களையும், புரட்சிப்படையினரையும் கொன்று குவித்து வருகின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த உள்நாட்டு போரில் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரசாயன ஆயுத தாக்குதல்
இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகில் உள்ள மாவட்டங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தி விட்டனர். அந்த மாவட்டங்களில் உள்ள எய்ன் டர்மா, ஜமால்கா, ஜோபார் உள்ளிட்ட பல பகுதிகளில்  அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படையினர் ராக்கெட்டுகள் மூலமாக விஷ வாயு குண்டு வீச்சு (ரசாயன ஆயுத தாக்குதல்) நடத்தினர். இந்த குண்டுகள் வெடித்து அதில் உள்ள நச்சுக்காற்று பரவி, அதை சுவாசிக்கிற மக்களின் நரம்பு மண்டலம் முடங்கிப்போய் மரணம் நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
1300 பேர் உயிரிழப்பு
அதிபர் பஷார் அல் ஆசாத் படையினர்  நடத்திய இந்த ரசாயன ஆயுத தாக்குதலில் 213 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. பின்னர் இந்த தாக்குதலில் 650–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக சிரியா தேசிய கூட்டணி கூறியது.
ஆனால் கடைசியாக கிடைத்த தகவல்கள், அதிபர் ஆதரவு படையினரின் ரசாயன ஆயுத தாக்குதலில் 1300 பேர் பலியாகி விட்டதாக தெரிவிக்கின்றன.
பெண்கள், குழந்தைகள்
ரசாயன ஆயுத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் நிறைய பேர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது. இதனால் தூக்கத்திலேயே பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது.
இது தொடர்பாக அங்குள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் பயன் பேக்கர் என்பவர் கூறுகையில், ‘‘கொல்லப்பட்டவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டபோது, பலரது கருவிழிகள் பிதுங்கி இருந்தன. கை கால்கள் குளிர்ந்து உறைந்து இருந்தன. வாயில் நுரை தள்ளி இருந்தது. இதெல்லாம் நரம்பு மண்டலத்தை பாதிக்கிற நச்சு வாயு தாக்குதலால் ஏற்படுவதாகும்’’ என்றார். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மறுப்பு
அதே நேரத்தில் ரசாயன ஆயுத தாக்குதலை அதிபர் பஷார் அல் ஆசாத் தரப்பு மறுத்து உள்ளது. இதை அரசு டெலிவிஷன் அறிவித்தது.
ஏற்கனவே அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படையினர் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி வருவதை தாங்கள் நம்புவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. தலையிட கோரிக்கை
சிரியாவில் ஏற்கனவே ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு ஐ.நா. ரசாயன ஆயுத வல்லுனர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ள நிலையில், நடந்துள்ள இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இந்த பிரச்சினையில் உடனடியாக ஐ.நா. தலையிடவேண்டும், பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று சிரியா தேசிய கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: