புதன், 21 ஆகஸ்ட், 2013

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!
அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்
பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!
தமிழ்நாடு அரசுக்குத்  தலைவர் வீரமணி  வேண்டுகோள்!
அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி  கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும்,  தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு!
- விபச்சாரம் முதலியவற்றில் ஈடுபடுத்தி, கூட்டு வன்புணர்ச்சி, அதையே தொழிலாக்கி, கமிஷன் பெற ஏஜெண்டுகளை அமர்த்தி, இப்படி பல பெண்களை  மயக்க ஊசிகளைப் போட்டு, அருவருப்பும் ஆபாசமும் வழியும் இத்தொழிலை நடத்தி வந்துள்ளான். (இதுபற்றி பிற ஏடுகளில் வந்துள்ள கொடுமையான செய்தியை அப்படியே 3ஆம்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்). பாராட்டத்தக்க காவல்துறையின் நடவடிக்கை!
பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருப்பதிக்கு ஓடிப்போய்  மாங்காய் வியாபாரம் செய்ததையும் கண்டுபிடித்து, இந்த ஜோதிட வேடமணிந்த மானிடக் கழுகு மற்றும் இவன் கூட்டாளிகள் உட்பட 5 பேர்களை கைது செய்துள்ளார்கள் - தமிழக காவல்துறையினர்.
தமிழகக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) திரு. ராமானுஜம் அவர்கள் ஆணைப்படி, சி.பி.சி.அய்.டி. விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் பாராட்டத் தகுந்தது.
டி.ஜி.பி. அவர்களும், காவல்துறை யினரும் இதில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது வற்புறுத்தல் - வேண்டுகோள் ஆகும்.
வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இதில் ஒரு பெரிய ராக்கெட்டே இருந்திருக்கும் போலிருக்கிறது.
முக்கிய புள்ளிகள்சிக்குவார்களா?
அறவழி சித்தர் (செருப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று பெயர்! - மகா வெட்கக்கேடு) வீட்டைச் சோதனையிட்டு, ஆபாச சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர்.
அந்த ஆவணங்களின் மூலம் அவருக்குப் பல அரசியல் பிரமுகர்கள், பணபலம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பட்டியலையும் தயாரித்து வரு கின்றனர் என்பது மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய செய்தியாகும்.
தேவை - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரிவு!
இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல் லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை - Q பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு - மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன் வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு,  வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமை யிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று - முக்கியமானது.
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.
Article 51a(h) “It shall be the duty of every citzen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.
கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரிய வில்லை!
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு...
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்;  அவர் களைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.
கி.வீரமணி

கருத்துகள் இல்லை: