திங்கள், 19 ஆகஸ்ட், 2013

துண்டா:கராச்சியில் தாவூத் இப்ராகிமை பலமுறை சந்தித்தேன், 56வது வயதில், 18 வயது இளம் பெண்ணை மணந்தான் வாக்குமூலம்

புதுடில்லி:"மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமை, கராச்சி நகரில் பல முறை சந்தித்தேன். அவனுக்கு, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு அளிக்கிறது. எனக்கும், லஷ்கர் -இ- தொய்பா உட்பட, பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, அப்துல் கரீம் துண்டா தெரிவித்துள்ளான இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின், முக்கிய மூளையாக செயல்பட்டவனும், மத்திய அரசின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவனுமான, பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, டில்லி போலீசாரால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். தற்போது டில்லி போலீசாரின் காவலில் உள்ள அவனிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


விசாரணையின் போது, அவன் கூறியதாவது:பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடனும், லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ் -இ- முகமது, இந்தியன் முஜாகிதீன் மற்றும் பப்பல் கல்சா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனும் எனக்குத் தொடர்பு உண்டு. ஐ.எஸ்.ஐ., அமைப்பின், அதிகாரிகளுடன் நான் தொடர்ச்சியாக பேசி வந்தேன். பாகிஸ்தானில் தங்கியிருந்த போது, பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலரையும் சந்தித்தேன். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிமை, கராச்சி நகரில், 2010ல் முதல் முறையாக சந்தித்தேன். அதன்பின், பல முறை சந்தித்துள்ளேன். கராச்சியில், பாதுகாப்பான வீடு ஒன்றில் தங்கியுள்ள, தாவூத்திற்கு, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர் எங்கு செல்ல வேண்டுமானாலும், ஐ.எஸ்.ஐ., அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அந்த அமைப்பினர், அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாகிஸ்தானில் தங்கியிருந்த போது, மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, பலருடன் தொடர்பு வைத்திருந்தேன். இந்தியாவுக்கு எதிராக செயல்படும், பெரிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமின்றி, சிறிய அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன்.

கராச்சியில், மதரசாக்கள் பலவற்றையும் நடத்தினேன்; அவற்றுக்கு தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து, நன்கொடைகள் பெற்றேன். இளைஞர்கள் பலரை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத அமைப்புகளில் சேர தூண்டினேன். அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தேன். நான் பயிற்சி அளித்த, ஒவ்வொரு அணியிலும், 200 இளைஞர்கள் இருப்பர்.பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவுக்கு போலி ரூபாய் நோட்டுகளையும், வெடிமருந்துகளையும் அனுப்பியுள்ளேன். பப்பர் கல்சா பயங்கரவாத அமைப்பின் தலைவர், வாத்கவா சிங், 2010ம் ஆண்டில், என்னை தொடர்பு கொண்டு பேசினார். வங்கதேசம் வழியாக, இந்தியாவுக்குள் வெடிகுண்டுகளை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, பாகிஸ்தானுக்கு வெளியே, வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை, டில்லி அல்லது பஞ்சாபிற்கு அனுப்பப்பட இருந்தன. ஆனால், வெடிமருந்து எடுத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த இருந்த சிலர், வங்கதேச போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால், அந்தத் திட்டம் தோல்வி அடைந்தது.மற்றவர்களை கவரும் வகையில் பேசக்கூடியவன் நான். அதனால், என் கவர்ச்சியான பேச்சுக்கள் மூலம், இளைஞர்கள் பலரை, பயங்கரவாத அமைப்புகளில் சேரச் செய்தேன். என்னுடைய பேச்சு காரணமாக, பயங்கரவாத அமைப்புகள் மத்தியிலேயே, எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது, அவர்களை வழிநடத்துவது மற்றும் வெடிமருந்துகளை கொடுத்து அனுப்புவதே என் முக்கியமான பணி.இவ்வாறு, துண்டா கூறியுள்ளான்.

டில்லியில், 1943ல், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவன் துண்டா. ஆரம்பத்தில் டில்லியில் வசித்த அவன், தன் இளம் பருவத்தில், காஜியாபாத் நகர் அருகேயுள்ள பகுதிக்கு இடம் மாறினான். பின், மும்பை சென்றான். அங்கு துணிகளுக்கு, சாயம் போடும் தொழிலில் ஈடுபட்டான்.கடந்த, 1985ம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள, பிவாண்டியில் மத கலவரம் நிகழ்ந்தது. இந்த கலவரத்தில், துண்டாவின் உறவினர்கள் சிலர் கொல்லப்பட்டதால், அதன்பிறகே, பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். இந்தியாவில் போலீசாரால் தேடப்பட்டதும், வங்கதேசம் சென்று, அங்கு தன், 56வது வயதில், 18 வயது இளம் பெண்ணை மணந்தான். இதையடுத்து, பாகிஸ்தான் சென்றுள்ளான். dinamalar.com

கருத்துகள் இல்லை: