செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பெனாசிர் புட்டோ கொலைவழக்கில் முஷராப் கைது !


இஸ்லாமாபாத்
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பர்வேஸ் முஷரப் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது.
பெனாசிர் கொலை வழக்கு
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப்(70) பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அவருடைய பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீதான வழக்குகளில் 2007–ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றாகும்.
இந்த வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நேற்று நீதிபதி ஹபிபூர் ரஹ்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பர்வேஸ் முஷரப் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டு தாக்கல்
அப்போது முஷரப் மீது கொலை, கொலை செய்ய சதி மற்றும் கொலைக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த தகவலை அரசு வக்கீல் முகமது அசார் தெரிவித்தார். இந்த வழக்கில் முஷரப் தவிர மேலும் 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராவல்பிண்டி முன்னாள் போலீஸ் துறை தலைவர் சவுத் அஜீஸ், சூப்பிரண்டு குர்ராம் ஷாசாத் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.
முதல் முன்னாள் தளபதி
ஆனால் நீதிபதி முன்பு தனது மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளை முஷரப் மறுத்தார். பாகிஸ்தான் வரலாற்றில் கொலை வழக்கை சந்திக்கும் முதல் முன்னாள் ராணுவ தளபதி முஷரப் ஆவார். இந்த விசாரணையின் போது வக்கீல்கள் தவிர வேறுயாரும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் கோர்ட்டு வளாகத்தில் நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிறகு வழக்கு விசாரணையை வருகிற 27–ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்று விசாரணை தொடங்கும் என தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முஷரப்புக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: