சென்னை: தமிழகத்தில் மழை பெய்து மாநிலம் செழிக்க வேண்டி மாநிலம்
முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்தி வருகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. நிலத்தடி
நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மாநிலம் முழுவதும்
கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து முக்கிய கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும்
கோவில்களில் யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய 7ம் திருமறை
பதிகம் ஓதுதல், மேகவர்சினி, அமிர்தவர்சினி, ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற
ராகங்களுடன் வாத்தியங்கள் இசைக்க வேண்டும், சிவன் கோயில்களில்
சிவபெருமானுக்கு சீதலகும்பம் எனப்படும் தாராபாத்திரத்தில் நீர்விழச்
செய்தல் போன்றவை நடத்திட வேண்டும், ருத்ர அபிஷேகம், வர்ண வேத மந்திர
பாராயணம், காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட வேண்டும் என்று
உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த யாகங்கள் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகின்றன. சென்னையில் மட்டும்
28 கோயில்களில் யாகம் நடக்கிறது. மயிலை மாதவப்பெருமாள் கோயில், பாடி
திருவல்லீஸ்வரர் கோயில், அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் கோயில்,
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு யாகங்களும்
வருண பூஜைகளும் நடத்தப்பட்டன.
யாகத்தில் நவதானியங்கள், வஸ்திரங்கள் போடப்பட்டு மகா யாகமும்,
தீபாராதனையும் காட்டப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலில்...
இதே போல தஞ்சை பெரிய கோவிலிலும் சிறப்பு யாகம் நடத்தியது இந்து சமய
அறநிலையத்துறை. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகத்தில் சங்கல்பம்
புண்யாகம், வேதிகார்ச்சனை, பர்ஜன்யசாந்தி யாகம், வருணசூக்த ஜபபாராயணம்,
வருண காயத்ரி ஜபபாராயணம், ருத்ரபாராயணம், வருணமாலா மந்திரஜபம் ஆகியவை
நடைபெற்றது.
இதையொட்டி ரோஜா, தாமரை, முல்லை, பிச்சிப்பூக்களால் யாகக் குண்டங்கள்
அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா, மாதுளை போன்ற பழ வகைகளும்
யாகக் குண்டங்களின் முன் வைக்கப்பட்டிருந்தன. முந்திரி, சர்க்கரை, மிளகு,
கடுகு உள்பட 91 வகையான பொருட்கள் யாகக் குண்டத்தில் போட்டு பூஜை
செய்யப்பட்டது.
ஓதுவா மூர்த்திகளால் மழைக்குரிய திருப்புங்கூர் மற்றும் திருஞானசம்பந்தர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகங்கள் பாடப்பட்டன. தொடர்ந்து
நாதஸ்வரவித்வான்கள் ஆனந்த பைரவி, அமிர்தவர்ஷினி போன்ற ராகங்களை வாசித்தனர்.
பின்பு பெருவுடையாருக்கு யாகத்தில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தம் கொண்டு
அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில்..
அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயிலில் மழை வேண்டி
வருண யாகம் நடைபெற்றது.
பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனை
தொடர்ந்து வருண யாகம் நடைபெற்றது.
குற்றாலநாதர் கோயிலில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் நேற்று மழை வேண்டி யாகம் நடந்தது.
குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் காலை 9 மணி முதல் யாகம்
நடந்தது.
திருத்தணி முருகன் கோயிலில்.... அரியலூர் பெருமாள் கோயிலில்...
அதே போல திருத்தணி முருகன் கோயிலிலும் பருவமழை வேண்டி சிறப்பு யாகப்
பூஜைகள் நடைபெற்றன.
மேலும் அரியலூர் பெருமாள் கோயிலிலும் வருண யாகம் நடந்தது. கோவில்
வளாகத்தில் உள்ள நரசிம்ம மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை
நடைபெற்றது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்...
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் மழை மற்றும் விவசாய வளம் பெற சிறப்பு யாகம்
நடைபெற்றது. அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்கள் மழை பெய்ய வேண்டி
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 7-ம் திருமுறை மற்றும் திருஞானசம்பந்தரின்
12-ம் திருமுறை ஆகிய மழை பாசுவங்களை பாடினர்.
மழைக்கான நாமங்களான அமிர்தவர்ஷினி மேகவர்ஷினி கேழாரி, ஆனந்த பைரவி, வருண
காயத்திரி மந்திரம், ரூபகல்யாணி ராகங்களும் இசைக்கப்பட்டன
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக