வியாழன், 27 ஜூன், 2013

1 கோடியே 60 லட்சம் இழப்பீடு, மலேசிய போலிஸ் காவலில் இறந்த தமிழரின் குடும்பத்திற்கு

மலேசிய நாட்டில் போலீஸ் காவலில் உயிரிழந்த தமிழர் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் இழப்பீடு வழங்க அந்த நாட்டு ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் குகன் (22 வயது). இவர் தனது குடும்பத்தினருடன் மலேசியாவில் வசித்து வந்தார். இவரை ஒரு கார் திருட்டு வழக்கில் மலேசிய போலீசார் கடந்த 2009-ம் ஆண்டு, ஜனவரி 20-ந்தேதி பிடித்துச் சென்றனர். தைபான் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸ் சித்ரவதையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது தாயார் இந்திரா, கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், போலீஸ் காவலில் தன் மகன் இறந்ததற்கு செலங்கார் போலீஸ் அதிகாரியாக இருந்த காலித் அபுபக்கர், முன்னாள் போலீஸ்காரர் நவீந்திரன், முன்னாள் உதவி கமிஷனர் ஜைனல் ரஷீத் அபு பக்கர் ஆகியோரே காரணம் என இந்திரா குற்றம் சாட்டி இருந்தார். தனது மகன் போலீஸ் காவலில் இறந்ததற்கு இழப்பீடு வழங்குமாறு வழக்கில் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த வழக்கை நீதிபதி சிங்கம் விசாரித்தார். விசாரணை முடிவில், போலீஸ் காவலில் மரணம் அடைந்த குகனின் சாவுக்கு, இழப்பீடாக அவரது குடும்பத்துக்கு மலேசிய அரசு 2 லட்சத்து 67 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ. 1 கோடியே 60 லட்சம்) வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்பில் நீதிபதி சிங்கம் கூறி இருப்பதாவது:– போலீஸ் காவலில்தான் குகன் இறந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இப்படி போலீஸ் காவலில் அவரை மரணம் அடையச்செய்தது மிகக்கொடிய குற்றம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிர்தரப்பினர், 7 நாள் போலீஸ் காவலில் வைத்து குகனை விசாரித்தபோது என்ன நடந்தது என்பது தங்களுக்கு தெரியாது என கூற முடியாது.

குகனின் உடலில் கொடிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காயங்கள் நவீந்திரன் அடித்ததால் ஏற்பட்டதாக கூறுவதை இந்தக் கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது. போலீஸ் காவலில் இருந்தபோது குகனுக்கு என்ன நேர்ந்தது என்பது அவரது உடலில் ஏற்பட்டுள்ள உள்காயங்கள், வெளிக்காயங்கள் ஆதாரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை கேட்டதும், இறந்து போன மகன் நினைவால் இந்திரா கதறி அழுதது, அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. போலீஸ் அராஜகத்தில் குகன் இறந்ததற்கு, அவரது தாயாருக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என போற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை: