சனி, 29 ஜூன், 2013

நாக்பூரில் கற்பழித்து கொலை செய்த 2 பேருக்கு தூக்கு தண்டனை

நாக்பூரில் இளம்பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்த வழக்கில்
கைதான 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் கல்மேஷ்வர் அருகே உள்ள லோனாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கஞ்சன் மெஷ்ரம் (வயது 19). கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அமர்சிங் தாக்கூர், ராஜேஷ் காம்ப்ளே ஆகிய 2 பேர் சேர்ந்து கஞ்சன் மெஷ்ரமை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கஞ்சன் மெஷ்ரம் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரை பின் தொடர்ந்து வாலிபர்கள் இருவரும் அவரது வாயை பொத்தி அருகில் உள்ள காட்டு பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு அவரை கொடூரமான முறையில் கற்பழித்து படுகொலை செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2006-ம் ஆண்டு ராஜேஷ் காம்ப்ளேயை கைது செய்தனர். இதனை தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமர் சிங் தாக்கூர் பிடிபட்டார். அமர்சிங் தாக்கூர் ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் லோனரா கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. போலீசார் 2 பேர் மீதும் நாக்பூர் கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விபா இங்க்லே நேற்று தீர்ப்பு கூறினார். இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்த குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால், வாலிபர்கள் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

கருத்துகள் இல்லை: