செவ்வாய், 25 ஜூன், 2013

ஊழல் வர்த்தகத்தை வளர்த்த இந்திய கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எவ்வளவு நல்லவர்கள்
இருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்துவிட்டது. புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் இது. செயலர், நிதி காப்பாளர், இந்திய பிரிமியர் லீக் தலைவர் என்று அனைவரும் கட்டுப்பாட்டுக் கழகத்தைவிட்டு வெளியேறுவதோடு, இன்னும் பலர் இந்தப் புனிதமான கொள்கைக்காக வெளியேற வரிசையாக நிற்கின்றனர். அதிகம் வசைபாடப்பட்ட தங்கள் தலைவரைத் தூக்கி வீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இந்திய பிரிமியர் லீகும் ‘வெளியேற்று சூத்திரத்தைப்’ பயன்படுத்துகின்றன. ஆனால், சீனிவாசனை வெளியேற்றுவதன்மூலம் ஐபிஎல்லையோ அல்லது கிரிக்கெட்டையோ தூய்மைப்படுத்திவிடமுடியுமா என்ன? கவனிக்கவும், அங்கு ஒரு பழம் மட்டும் அழுகிவிடவில்லை. மொத்தப் பழத்தோட்டமும் அழுகியுள்ளது. ‘மூன்று கிரிக்கெட் வீரர்கள் மட்டும்’ என்ற வாதம் ஒரு பெரிய மோசடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய பிரிமியர் லீக் இரண்டையும் இந்த அழுகல் நாற்றமடிக்க வைத்துள்ளது. ஊடகம் சீனிவாசனின் உச்சந்தலைக்கு குறிவைத்துள்ளது. இதுவும்கூட ஒரு கேளிக்கையாகத்தான் இருக்கிறது. நேற்றைய சீனிவாசனனின் விசுவாசிகள் நாளைக்குத் தன்னையும் தாக்குவார்கள் என்று சரத்பவாருக்குத் தெரியும்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து வெளியேறிய சஞ்சய் ஜெக்டால், அஜய் ஷிர்கே, ராஜிவ் சுக்லா ஆகியோர் அத்தகைய ஒரு கோப்பையை அடைய தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில், சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் (அல்லது பொது நலன் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்புக்கு) தலைமையேற்றிருக்கக்கூடாது. ஆனால் அதற்காக அவரது வெளியேற்றத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது அபத்தமானது.
சமீப காலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இந்திய பிரிமியர் லீகை உருவாக்கியவர்களுள் ஒருவர் லண்டனில் சட்டத்திலிருந்து தப்பி வாழ்பவர். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தனது நலனுக்கு உகந்ததாக விதிகளை மாற்றிக்கொண்டதை சட்டபூர்வமாக்கிய அந்தத் தலைவர் இப்போது வெளியே வந்துள்ளார்.
சரத்பவாரைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தபோது விவசாய அமைச்சரான அவர் விவசாயம் தொடர்பாக மேலை நாடுகளுக்குப் பறந்ததைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்காக பறந்ததுதான் அதிகம்.
கடந்த ஏப்ரல் மாதம், பம்பாய் உயர்நீதிமன்றம், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடந்தபோது, பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினருக்கான ஊதியத்தை வழங்கவேண்டுமென்று அந்தப் போட்டியை பார்க்க வந்த கூட்டத்தினருக்கு எரிச்சலுடன் உத்திரவிட்டது. அந்தத் தொகை சுமார் 9 கோடி இருக்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. அவ்வாறு பணம் செலுத்தாதவர்கள் சொத்தை ஜப்தி செய்யுமாறும் உத்திரவிட்டது. இறுதியில் முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ஷாருக்கான் போன்றவர்களுக்குப் பலன் சென்றடையும் வகையில் 20 கோடி வரை கேளிக்கை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. மொத்தத்தில், அரசிடமே ஐபிஎல் பணம் பெற்றுள்ளது. ஆத்திரமடைந்த பம்பாய் உயர்நீதிமன்றம் அந்தத் தொகையை உடனே வசூலிக்க உத்திரவிட்டது. அதே நேரம், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களைக்கூட ஏதோ சொற்ப தொகைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல்லுக்கு வாடகைக்கு விட்டது.
இந்தப் பின்னணியில் நாம் செய்யவேண்யதெல்லாம் ஒன்றுதான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையே கலைத்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவேண்டும். அதன் கடந்த காலத்தை ஒரு பொது தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும். பொது நலன் என்றாலே வெறுப்படையும் ஒரு துறை இந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தண்டனையிலிருந்து விதிவிலக்கு வசதி, தனது அதிகாரத்தில் தனக்குள்ள நம்பிக்கை, பெரு நிறுவன அரசியல் மற்றும் ஊடகங்கள் துணை போன்றவையே இந்த நிலைக்குக் காரணம்.
இந்தத் தேசத்தின் பெயரில் செயல்படும் ஓர் அமைப்பு இந்தியக் கிரிக்கெட் அணியை நடத்தும்போது, அது பொறுப்பானதாக, பொதுமக்களுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால், அழகான ஒரு விளையாட்டின் ஆன்மாவையே அழித்துவிடும் ஒரு உயர்நிலை வர்த்தக நடவடிக்கையாக ஐபிஎல் உள்ளது. இது இழிவானதாகவும் தரமற்ற கட்டுமானம் கொண்டதாகவும் கலாசாரத்தைச் சீரழிப்பதாகவும் உள்ளது.
வர்த்தகரீதியான வெற்றி என்று சாக்குபோக்கு சொல்லி நடந்தவற்றுக்குப் பரிகாரம் கோருகிறது ஐபிஎல். அவர்களைப் பொறுத்தவரை இந்தச் ‘சிறிய தவறுகள்’ வர்த்தகரீதியான பலன்களால் சரிசெய்யப்படுகின்றன.
இந்தச் சறுக்கலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏதோ திடீரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது உண்மையல்ல. இந்தியாவிலுள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் தினந்தோறும் இத்தகைய மோசடிகளை வெளிக்கொண்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. இதே ஊடகங்கள்தான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது அவற்றை உச்சியில் தூக்கிப் பிடிக்கின்றன.
ஊடகங்கள் தற்போது கொடுத்த நெருக்கடி பயனுள்ளது. டெல்லி, மும்பை காவல்துறை மூலமும், அமலாக்கப் பிரிவு மூலமும் இந்த ஊழல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு நிருபர்கள்மூலம் வெளிக்கொணரப்பட்ட பல சிறந்த வெளியீடுகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கே உரித்தான கலாச்சார பலத்தால் மறைக்கப்பட்டுவிட்டன. வாரியத்தின் சம்பளப் பட்டியலிலேயே இருந்துகொண்டு அதன் செயலை மிகைப்படுத்தி புகழ்ந்துரைக்கும் ஆலோசகர்களாகவே தொலைக்காட்சி ஊடகங்களில் சிலர் இருக்கின்றனர்.
அதில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளான முன்னாள் விளையாட்டு வீரர்களும் உள்ளனர். இதுநாள் வரை இந்த எதிரும் புதிருமான கருத்தாக்கங்களை விளம்பர நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஐபிஎல்லில் முதலீடு செய்துள்ள விளம்பரதாரர்கள் சரிவடையத் தொடங்கியதும் அந்தக் கவலை எழுந்துள்ளது. ஆனால், உண்மையில் அதிக சரிவைச் சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட்தான்.
ஒரு சில தவறுகள் நடந்துவிட்டதற்காக ஐபிஎல்லைப் பெரிய அளவில் காயப்படுத்திடவேண்டாம் என்று சிலர் சமாதானம் பேசுகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கும், இந்திய பிரிமியர் லீகுக்குமான நலனை உண்மைக்குப் புறம்பான வகையில் சிறுமைப்படுத்துகிறது.
இந்திய கிரிக்கெட்டின் ஆத்மாவை ஐபிஎல் பாழ்படுத்திவிட்டது. ஓர் இந்திய வேட்கையை, உணர்வை தனியார்மயமாக்கியதுடன், ஊழல் வர்த்தகத்தையும் வளர்த்திருக்கிறது. தற்போது பெரிய நிறுவனங்களும், கார்ப்பரேட் குழுக்களும் அவர்களது அரசியல் சகாக்களும், திரைத்துறை நடிகர்களும், விளம்பரத் துறையினரும்தான் கிரிக்கெட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். கிரிக்கெட்மீது உண்மையான ஆர்வம் கொண்டுள்ள பொது ரசிகர்களிடமிருந்து என்றோ அது கைநழுவிவிட்டது. இந்தியாவின் சர்வதேச அணிகளைத் தேர்வு செய்யும் இந்திய உள்நாட்டுக் குழுமம் தற்போது தன்னைக் காயப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களை இந்தக் குழுமம் நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் தற்போது ஐபிஎல்லுக்கு வீரர்களை அளிக்கும் ஒரு களமாக சுருங்கிவிட்டது. மோசமான தரமுள்ள லீக் போட்டிகளில் விளையாடி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதைவிட்டுவிட்டு, ஏன் அநாவசியமாக ரஞ்சிக் கோப்பை போன்ற தரமான போட்டிகளில் ஒருவர் விளையாட வேண்டும்? உண்மையில் இந்த இந்தியன் பிரிமியர் லீக் இதுவரை எந்த நல்ல வீரரையும் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கவில்லை.
ஏதோ சில பழங்கள் மட்டும் அழுகிவிட்டது என்ற வாதமே ஒரு மோசடி. அசாதாரண சந்தர்பத்தில் பழத்தோட்டக்காரர்கள் என்ன செய்வார்களோ அதை நாம் செய்யவேண்டியுள்ளது. பழத்தோட்டத்தை முற்றாக எரித்துவிட்டு, புதிய செடியை நடுவோம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றாக கலைத்துவிட்டு, புதியதைத் தொடங்கவேண்டும். கிரிக்கெட்டை மறு பயிரிட்டு வளர்ப்போம்.
(தி ஹிந்துவில் கடந்த ஜூன் 1 அன்று வெளியான Burn the orchard, re-grow cricket என்னும் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம். அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், எஸ்.சம்பத்).
tamilpaper.net

கருத்துகள் இல்லை: