மற்றவர்களைக் காட்டிலும் கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினரே அதிகளவு இனவெறி உள்ளவர்களாக இருக்கிறார்கள் எனக் கல்விமான் ஒருவர் தெரிவிக்கிறார்.
ஸ்ரீலங்கா எதிர்கொள்ளும் அதிக சவாலான விடயம், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், எனப் பாகுபாடற்ற ஸ்ரீலங்காவாசிகள் என்கிற சமுதாயத்தை உருவாக்க, கல்வித் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது...... வர்த்தக சமூகத்தினருக்கு இதில் முக்கிய பாத்திரம் உள்ளது.
பேராசிரியர் றோகான் குணரத்ன, சமீபத்தில் கல்வி ஊடாக சமரசம் என்கிற கருத்தரங்கில் உரையாற்றும்போது, வர்த்தக சமூகத்தினருக்கு நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு முக்கிய பாத்திரம் காத்துக் கிடக்கிறது, ஆனால் நாட்டிலுள்ள ஏனைய பகுதிகளைக் காட்டிலும் கொழும்பிலுள்ள உயரடுக்கு பிரிவினரிடையேதான் அதிகளவு இனவெறி காணப்படுகிறது என்று தெரிவித்தார். “நான் வடக்கிற்கோ அல்லது தெற்கிற்கோ அல்லது கிழக்கிற்கோ பயணம் செய்த வேளைகளில் என்னால் இனவெறியினைக் காணமுடியவில்லை,
ஆனால் கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினரிடையே அதிகளவு இனவெறியினைக் காண்கிறேன். தலைநகரில் குறிப்பிடத்தக்க அளவு பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு மறுதலையாக கிராமப்புறங்களில் வாழும் மக்கள் சமாதானமாக வாழ விரும்புகிறார்கள். வன்னியில் உள்ள மக்களிடம் உங்கள் தேவை என்ன என்று கேட்டால், எனக்குப் பாதுகாப்பு தேவை, எனக்கு ஒரு வேலை தேவை ,நான் வசிப்பதற்கு ஒரு வீடு தேவை, எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அவர்கள் என்னிடம் சொல்வார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பதால் அது ஸ்ரீலங்காவை இனம், மற்றும் மதம் என்கிற அடிப்படையில் பிளவு படுத்துகிறது, என்பதை மையமாக கொண்டுள்ளது என்கிற கருத்தாக ஆகிவிடாது”.
“சாதாரண மக்கள் எதிர்கொள்ளுவதற்கு முரண்பாடான வகையில் இந்த முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பிரதிபலிப்புகளும் மற்றும் விவாதங்களும் இடம்பெறுகின்றன என நான் எண்ணுகிறேன். கடந்த 25 – 30 வருடங்களாக நாங்கள் பல தவறுகளைச் செய்திருக்கிறோம், அந்த தவறுகள் உருவாக்கி, அதனால் நிலைபெற்றதுதான் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட மோதல். நாங்கள் செய்த நல்லவைகளையும் மற்றும் தவறுகளையும் கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பதற்கான நேரம் இதுதான், மேலும் சீர்கேடுகள் ஏற்படாமல் அல்லது மோதல் திரும்பவும் இடம்பெறாமல் இருப்பதற்கு அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார் பேராசிரியர். குணரத்ன.
பேராசிரியர். குணரத்னவின் உரையின் முழு வடிவமும் கீழே தரப்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்காவின் வரலாறு செல்லும் திசை நிச்சயமாக மே 19, 2009 ல் மாற்றமடைந்தது. அப்போதிருந்து நல்லிணக்கத்துக்கான பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மூன்று வித்தியாசமான பகுதிகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா சாட்சியாக உள்ளது.
முதலாவது, மனிதாபிமான உதவிகள்,
இரண்டாவதாக, சமூக – பொருளாதார அபிவிருத்திகள்,
மற்றும் மூன்றாவதாக அரசியல் ஈடுபாடு.
தேசிய நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளில் எடுத்த முதல் அடிதான் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின், குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களின் மறுவாழ்வு. சுமார் 12,000 வரையிலான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ யினர் மறுவாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டார்கள். ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா செல்லவிருக்கும் பாதை பற்றிய ஒரு தெளிவு இருக்கவில்லை, அது ஒரு பழிவாங்கும் நீதியாக இருந்து, அந்த தமிழ் புலிகள் அனைவரும் தண்டிக்கப் படுவார்களோ, அல்லது பழைய நிலையை மீண்டும் வழங்கும் நீதியாக இருந்து அவர்கள் அனைவரும் மறுவாழ்வு வழங்கப்பட்டு விடுதலை அடைவார்களோ என்கிற ஐயம் இருந்தது.
ஸ்ரீலங்கா அரசாங்கமோ அல்லது ஸ்ரீலங்கா மக்களோ தமிழ் புலிகளை தண்டிப்பதை விரும்பவில்லை, என்கிற உண்மையை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஸ்ரீலங்காவின் எதிர்கால ஸ்திரத் தன்மை, மற்றும் சமாதானம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் 11,500 தமிழ் புலிகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைக்க முடிவு செய்தது.
12,000 தமிழ் புலிகளில் சுமார் 500பேர்கள் வரை 18 வயதிலும் குறைந்த சிறுவர்களாக இருந்தனர். ஸ்ரீலங்கா அரசாங்கம், அவர்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்க முடிவு செய்தது. அநேகமாக அவர்கள் அனைவரும் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்கள். மறுவாழ்வு வழங்கப்பட்ட தமிழ் புலிகளில் கிட்டத்தட்ட சில நூறு பேர்கள் வரை பல்கலைக் கழகத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளார்கள் என்பதை அறியத்தருவதில் நான் பெருமை அடைகிறேன். அவர்களில் சிலர் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வதற்கான தகுதியைக் கூடப் பெற்றிருக்கிறார்கள். இது ஸ்ரீலங்கா மக்களின் நல்லுணர்வை வெளிப்படுத்துகிறது. அவர்கள் முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட,அவர்களில் சிலர் வடக்கு மற்றும் கிழக்கில் மற்றும் அந்தப் பிரதேசங்களுக்கு வெளியே கொலைகளைப் புரிந்திருந்தாலும் கூட, ஸ்ரீலங்கா மக்களினதும் மற்றும் அரசாங்கத்தினதும் பதில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கி சமூகத்துடன் ஒன்றிணைப்பதாகவே இருந்தது.
நல்லிணக்கத்தின் முதல்படிதான் மறுவாழ்வு. இந்தப் புள்ளிக்கு அப்பால் நகர்வதற்காக ஸ்ரீலங்கா மக்கள் பன்முகப்படுத்தப்பட்ட சமரச நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப கதிர்காமர் நிறுவனம் நல்லிணக்கத்துக்கான 12, பல்வேறு தொகுப்புகளை உருவாக்கியது. (1) வர்த்தகம்,(2) கல்வி,(3) தகவல் தொழில்நுட்பம்,(4) ஊடகம்,(5) சமயம்,(6) சமூகம்,(7) பாதுகாப்பு,(8) இளையோர்,(9) புலம் பெயர் சமூகம்,(10) பெண்கள்,(11) விளையாட்டு,(12) கலை மற்றும் கலாச்சாரம் ஆகிவற்றில் தலைவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சமரசத்தை ஏற்படுத்துதல்.
2011,நவம்பர் 24ல் கதிர்காமர் நிறுவனம், நல்லிணக்கத்துக்கான அதன் தேசிய கருத்தரங்கின் ஆரம்பித்தது. கடந்த பெப்ரவரி, 26ல் வர்த்தக சமூகத்தினர் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளில் வகிக்க வேண்டிய பாத்திரத்தைப் பற்றி விளக்க மிகவும் வெற்றிகரமான ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. அநேகமான முக்கியமான வணிக நிறுவனத் தலைவர்கள், வடக்கு மற்றும் கிழக்கில் முதலீடு செய்தோ அல்லது முதலீட்டை ஆரம்பிப்பதற்கோ உறுதியளித்திருந்தார்கள்.
ஸ்ரீலங்காவின் மிகவும் முக்கியமான வர்த்தகத் தலைவரான ஈஸ்வரன் என்பவர் முன்னாள் போராளிகள் 52பேர் திருமணம் செய்வதற்கு உதவியளித்திருந்தார். அவர் பெண்களுக்கு திருமணப் புடவைகளையும், ஆண்களுக்கு அவர்களின் பாரம்பரிய உடைகளையும் மற்றும் பணப் பரிசில்களையும் வழங்கியிருந்தார். இந்த நிகழ்வை குறிப்பதற்காக கோலாகலமான கொண்டாட்டம் ஒன்றும் இடம்பெற்றது.
சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஈஸ்வரன் அவர்கள் தொடரான நிறுவனங்கள் பலவற்றை இப்போது ஆரம்பித்துள்ளார். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கக்கூடிய சில தொழில்களுக்குள் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஊதுவத்தி தயாரிப்பினைச் சொல்லலாம். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் அங்கத்தவர்களான போதும், நாங்கள் அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவதில்லை. அவர்கள் வன்முறையினைக் கைவிட்டு சமாதானத்தை தழுவியுள்ளார்கள். நாங்கள் அவர்களை பயனாளிகள் என அழைக்கிறோம், ஏனெனில் அவர்கள் இந்த நல்லிணக்க நடவடிக்கை மூலம் பயன் பெற்றுள்ளார்கள். மறுவாழ்வு நடவடிக்கையானது ஆறு முக்கிய வகையான மறுவாழ்வினைக் கொண்டுள்ளது,
(1) சமய மற்றும் ஆன்மீக மறுவாழ்வு,
(2) கல்வி மூலமான மறுவாழ்வு,
(3) தொழிற்பயிற்சி மறுவாழ்வு,
(4) சமூக மற்றும் குடும்ப மறுவாழ்வு,
(5) பொழுது போக்கு மறுவாழ்வு,
(6) உளவியல் மறுவாழ்வு,என்பனவே அவை.
சமய மற்றும் ஆன்மீக மறுவாழ்வின் கீழ் பயனாளிகளில் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ஆன்மீக போதனைகளை கேட்டும், சமய சம்பந்தமான புத்தகங்களைப் படித்தும் மற்றும் தியானங்கள் செய்தும் பயனடைந்தனர். கல்வி மூலமான மறுவாழ்வின் கீழ்,ஆசிரியர்கள் அங்கு வந்து,பயனாளிகளுக்கு கல்வி போதித்தனர். அவர்களில் 60 விகிதமானவர்கள் மட்டுமே க.பொ.த. சாதாரண தரம்வரை கல்வி பயின்றிருந்தனர். பலர் படிப்பறிவு அற்றவர்கள். மோதலின் முடிவு, தவறாக வழி நடத்தப்பட்ட ஸ்ரீலங்காவாசிகளான இந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்று தங்களை ஒரு உற்பத்தி திறன் மிக்க பிரஜைகளாக மாற்றிக் கொள்ளும் பொன்னான வாய்ப்பினை வழங்கியிருந்தது. பலவழிகளிலும் இந்த மறுவாழ்வு மையங்கள் கல்வி மையங்களாகவே மாறியிருந்தன. தொமிற் பயிற்சி திட்டங்களின் கீழ் இந்தப் பயனாளிகளுக்கு ஒரு இரண்டாவது வாழ்வினை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.இந்தப் பயனாளிகளுக்கு புதிய வகையான ஒரு தொழில் தொகுதியினை உருவாக்கிக் கொடுப்பதில் தனியார் துறை முக்கிய பங்கினை வகித்தது.
சமூக மற்றும் குடும்ப மறுவாழ்வின் கீழ், வருகைகள் உட்பட, குடும்ப அங்கத்தவர்களுடனான தொடர்பு அடிக்கடி நெருக்கம் பெற்றது. பொழுது போக்கு மறுவாழ்வு மூலம்,பயனாளிகள் விளையாட்டினை கற்றுக் கொள்ளவும் அதனை விளையாடவும் செய்தார்கள். அவர்கள் எந்த இனத்துக்கு எதிராகவும் விளையாடவில்லை, ஆனால் கலப்பு அணிகளில் ஒருமித்து விளையாடியது மூலமாக அவர்கள் புதிய நண்பர்களைப் பெற்றுக் கொண்டனர். உளவியல் மறுவாழ்வின் கீழ், பயனாளிகள் ஆக்கபூர்வமான கலைகள் மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களைக் கற்றுக் கொண்டனர். அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள்,விளையாட்டுத்துறை அல்லது ஊடகத் துறையை சேர்ந்தவர்கள் என முக்கியமான பல பிரமுகர்கள், பயனாளிகளிடம் வந்து சொற்பொழிவுகளை நடத்தினார்கள். அவர்களது சொந்த இன மற்றும் மதங்களைச் சேர்ந்த இந்த முன்மாதிரியாளர்களின் பாத்திரங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டின.
மறுவாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட இந்த 11.500 தமிழ் புலிகளில் ஒருவராவது திரும்பவும் வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள், என்று தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். வன்முறைகளைப் புரிந்ததால், மோதல் என்றால் என்ன என்பதை கண்ணால் கண்டு தனிப்பட்ட வகையில் அனுபவித்தும் அறிந்து கொண்டார்கள். பிரதான நீரோட்டத்தில் இணையும் வாழ்க்கையினையே அவர்கள் முன்னெடுப்பார்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.
வெளிநாட்டிலுள்ள மிகவும் சிறிய அளவிலான தமிழ் சமூகத்தினர் ஒரு நீர்க்குமிழி போன்ற நிலையில் வாழ்கிறார்கள். அவர்கள் நமக்கு இணையான மற்றொரு பிரபஞ்சத்தில் வாழ்கிறார்கள் என்றே நான் சொல்கிறேன். ஸ்ரீலங்காவில் என்ன நடந்தது, என்கிற யதார்த்த நிலமையைப் பற்றிய அனுபவம் அவர்களிடமில்லை. ஸ்ரீலங்காவில் வாழ்கின்றவர்களைப் போலல்லாது, வெளிநாடுகளில் வாழ்பவர்களில் ஒரு பகுதியினர், ஸ்ரீலங்காவில் மீண்டும் மோதல் வெடிப்பதையே விரும்புகிறார்கள். தனியார் துறையினர், சமூக அமைப்புகள், மற்றும் அரசாங்கம் என்பன மறுவாழ்வு நடவடிக்கை, மற்றும் தடுப்புக் காவலில் உள்ள 11,500 எல்.ரீ.ரீ.ஈ யினரை மீளக் குடியமர்த்தல் போன்றவற்றில் ஒருமித்து இயங்குவதன் காரணமாக, வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் நாட்டில் பலமான ஸ்திரத் தன்மை உருவாகும்.
தமிழ் புலி அங்கத்தினருக்கு மறுவாழ்வு வழங்குவதன் மூலம், அவர்களின் சிந்தனைகள் யாவும் பிரதான நீரோட்டத்துடன் இணைந்துவிடும். அதேபோல,வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொதுமக்களிடமும் இத்தகைய அல்லது இதைவிட இன்னும் பெரிய நம்பிக்கை மூலதனத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது.
30 வருடங்களாக இடம்பெற்ற மோதல் மிகப் பெரிய சந்தேகத்தையும், மற்றும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. தெற்கில் எல்.ரீ.ரீ.ஈயினர் மேற் கொண்ட குண்டுமாரிகளும் மற்றும் தாக்குதல்களும், மற்றும் வடக்கில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கைகளும், தெற்கிலும் மற்றும் வடக்கிலும் வாழும் மக்களின் சிந்தனைகளில் முனைவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.சமூகங்களிடையே பிளவுகள் ஏற்பட்டதுடன் மக்கள் ஒருவர் மீது ஒருவர் தப்பபிப்ராயங்கள் கொள்ளவும் வழி ஏற்பட்டது. இந்தப் பிளவுக்கு பாலம் போட்டு இணக்கத்தை ஏற்படுத்த நல்லிணக்கமே சிறந்த உபகரணம்.
எனவே நல்லிணக்கமானது, வர்த்தக சமூகம் ,பல்கலைக்கழகங்கள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் இதர ஊடகங்கள் மூலமே உருவாக முடியும். சமூகத்தின் பல்வேறு துறையினரையும் இணைக்கும் தொடர் நிகழ்வுகள் பலவற்றை நடத்துவதற்கு நாங்களும் திட்டமிட்டுள்ளோம். நல்லிணக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கின் மூலம் இளையோர்களையும் இதில் ஈடுபடுத்துவோம். நல்லிணக்கத்தில் புலம் பெயர்ந்தவர்களின் பங்களிப்பு என்கிற தேசிய கருத்தரங்கின் மூலம் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் குடி பெயர்ந்தோர்களையும் இதில் இணைப்போம். நல்லிணக்கத்துக்கான கலை மற்றும் கலாச்சாரத்தின் பங்களிப்பு என்கிற தேசிய கருத்தரங்கு வழியாக நாங்கள் பாட்டு, நடனம், பொம்மலாட்டம்,மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களை இணைத்து இணக்கமான வாழ்வியலை கட்டியெழுப்புவோம். கலைகள் இன,மத பேதங்களைக் கடந்து மக்களை வசீகரித்து விடக்கூடியவை. பல வருட மோதல்களுக்குப் பின்பு, பல்வேறு பிரிவான சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்க இந்த தளங்கள் பேருதவியாக இருக்கும்.
கல்வித் துறையைப் பொறுத்தமட்டில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இதுவரை ஏற்பட்ட முனனேற்றங்களை ஒருங்கிணைத்து அதைப் பலப்படுத்த முயற்சிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இப்போது நல்லிணக்கத்துக்கான கல்வியின் பாத்திரம் என்கிற தேசிய கருத்தரங்கில் ஏராளமான பாடசாலைகள் பங்குபற்றுவதற்கு காரணம் தொலைநோக்கம் கொண்ட அவற்றின் அதிபர்களே.
திருக்குடும்ப கன்னியர் மடத்தின் முன்னாள் அதிபர், சகோ.கனிஸ்,சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜாவேட் யூசுப்,மகளிர் கல்லூரியின் அதிபர் நிர்மலி விக்கிரமசிங்க, ஆகியோர்,பல்வேறுபட்ட இன மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள்.
இந்தப் பாடசாலைகள் யாவும், வடக்கிலுள்ள சிறுவர்களை தெற்கிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் வந்து நேரத்தைக் கழிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன, அதேபோல இந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த பிள்ளைகள் வடக்கிற்கும் விஜயம் செய்திருந்தனர்.
நல்லிணக்கத்தை பரிசீலிப்பதில் மகளீர் கல்லூரி, நிகழ்ச்சித் திட்டங்களை பரிவர்த்தனை செய்யதிராத ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.மோதல்கள் முடிவடைவதற்கு முன்புகூட, தொலைநோக்கு கல்வியாளர்களைக் கொண்ட சில பாடசாலைகள், சரியான எடுத்துக்காட்டாக அமையும் வண்ணம் மாதிரிகளை விருத்தியாக்கி இருந்தன.
இன்று, ஸ்ரீலங்கா எதிர்கொள்ளும் அதிக சவாலான விடயம்,சிங்களவர்கள், தமிழர்கள்;, முஸ்லிம்கள், எனப் பாகுபாடற்ற ஸ்ரீலங்காவாசிகள் என்கிற சமுதாயத்தை உருவாக்கும் வகையில்,கல்வித் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை.
தானே ஒரு கல்விமான் என்கிற வகையிலும், மற்றும் கல்விப்பகுதியை கண்காணிக்கும் பாராளுமன்ற அங்கத்தவர் என்கிற வகையிலும் மோகன்லால் கிறேரோ அவர்கள், ,ஸ்ரீலங்கா எதிர்கொள்ளும் கல்விச் சவால்களை நிச்சயம் புரிந்து கொள்வார். நான் வளர்ந்தது ஆனந்தாக் கல்லூரியிலிருந்து, ஆனால் நான் உங்களிடம் சொல்ல வேண்டியது, எனது நண்பர்கள் அனைவரும் சிங்களவர்கள், அநேகமாக அவர்கள் அனைவருமே பௌத்தர்கள். எனவே நாங்கள் சிங்களவர்களாகவே வளர்ந்தோம், நாங்கள் ஸ்ரீலங்கன்களாக வளரவில்லை.
இதேபோலத்தான் தமிழ் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளும் ஸ்ரீலங்கன்களாக இல்லாமல் தமிழர்களாகவே வளர்ந்தார்கள். எங்களிடையே உள்ள சில முஸ்லிம் பாடசாலைகளிலும் இதேநிலைதான் உள்ளது.எனவே பிள்ளைகள் ஸ்ரீலங்கன்களாக வளர்வதற்கு ஏற்ற மாதிரியான ஒரு கல்வி முறையை உருவாக்க வேண்டியது அவசியம். பல்வேறுபட்ட இனம் மற்றும் மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரர்களிடையே வளர்வதன் செழுமையை அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் நன்மை அடைவார்கள்.
அவர்கள் தமிழை அல்லது சிங்களத்தை படிக்க ஆரம்பிக்கும்போது, மற்றைய இன அல்லது மத குழுக்கள் வெளிப்படுத்துவதைப் பற்றிய பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் சந்தேகங்கள் நிச்சயம் அவர்களிடம் தோன்றாது.
திருமதி.பண்டாரநாயக்கா காலமாவதற்கு சில வருடங்களுக்கு முன்பு நான், அமெரிக்காவின் முன்னணி பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் புறூஸ் கொஃப்மான் அவர்களுடன் சேர்ந்து அவரைச் சந்தித்தேன். அவரிடம் நான் “ அம்மணி! இனமோதலுக்கான காரணம் எது” என்று கேட்டேன்? தனது பதிலை மிகத் தெளிவாக “சிங்களம் மட்டும் சட்டம்தான் அதற்கான காரணம்” என்று சொன்னார். அப்போ நான் சொன்னேன் “அம்மணி, உங்கள் கணவரான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்கள் தனே அதை அறிமுகப் படுத்தினார்”என்று. அதற்கு அவர் “ஆம், அதுதான் உண்மை, ஆனால் அது பல வழிகளிலும் நமது நாட்டை கூறு போட்டுவிட்டது” என்றார். தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களோ, அல்லது எதிர்க்கட்சியையோ அல்லது ரி.என்.ஏ யை சேர்ந்தவர்களோ எவராயினும், அரசியல்வாதிகள் எப்போதும் அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள.
அவர்கள் எப்பொழுதும் விசேடமாக தேர்தல் நெருங்கும்போதும், வாக்குகளைப் பெறுவதற்காக, இனம், மதம் போன்ற சீட்டுக்களை விளையாடத் தொடங்குவார்கள். திடீரென அவர்கள் ஸ்ரீலங்காவாசி இல்லை என்பதைப்போல நடந்து கொள்வார்கள். எங்களது செல்வாக்கு மிக்க சமூகத்தினரிடையே இன மத வேறுபாடுகளை வெளிபடுத்துவதற்கு எதிராக ஸ்ரீலங்கா சமூகம் என்கிற தரத்தையும் மற்றும் கோட்பாட்டையும் உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியம்.; நெய்யப்பட்ட பட்டுத்துணியினைப் போன்ற ஸ்ரீலங்கா சமூகத்தை, இன மற்றும் மதப் பிரிவினை எனும் சீட்டுக்களை விளையாடிப் பாழாக்குவதற்கு அரசியல்வாதிகளை நாங்கள் அனுமதிக்கக் கூடாது.
மிகப்பெரிய பாரம்பரியத்தின் வழியாக மரபு வழியாக ஒவ்வொரு ஸ்ரீலங்கனும் பெற்றுவருவது, நல்லுறவேயாகும்.துரதிருஸ்ட வசமாக தெற்கிலும் மற்றும் வடக்கிலுமுள்ள அரசியல் தலைவர்கள். தங்கள் சுய மற்றும் அரசியல் இலாபங்களுக்காக மக்களின் இன மற்றும் மத உரிமைகளை சுரண்டுகிறார்கள். அரசியல்வாதிகள் நமது மக்களை இன வெறியர்களாக மாற்றியுள்ளனர். அதன் விளைவாக தாங்கள் மரபுவழியாக பெற்றுவந்த நல்லுறவை மற்றும் அதன் நலன்களை, 30 வருடங்களாக ஸ்ரீலங்கா மக்களால் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. எங்களது கல்விமுறையால் இலட்சிய ஸ்ரீலங்கன்களை எதிர்காலத்தில் மீண்டும் உருவாக்க முடியும்.
இந்த கருத்தரங்கம் இலட்சிய ஸ்ரீலங்காவாசியினை உருவாக்குவதற்கான எங்களது தொலைநோக்கு பற்றிய விவாதத்தை, விசேடமாக உயர்மட்ட வாசிகளிடத்தில் பரப்பும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நான் வடக்கிற்கோ அல்லது தெற்கிற்கோ அல்லது கிழக்கிற்கோ விஜயம் செய்தால் என்னால் இனவெறியினைக் காண முடிவதில்லை,ஆனால் கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினரிடையே நான் அதிகளவிலான இனவெறித் தன்மையை காண்கிறேன். தலைநகரில் இனவெறி பற்றி குறிப்பிடத்தக்க அளவு பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது.அதற்கு மறுதலையாக கிராமப்புறங்களில் வாழும் மக்கள் சமாதானமாக வாழ விரும்புகிறார்கள்.
வன்னியில் உள்ள மக்களிடம் உங்கள் தேவை என்ன என்று கேட்டடால், எனக்குப் பாதுகாப்பு தேவை, எனக்கு ஒரு வேலை தேவை,நான் வசிப்பதற்கு ஒரு வீடு தேவை, எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் அவர்கள் என்னிடம் சொல்வார்கள். இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பதால் அது ஸ்ரீலங்காவை இனம்,மற்றும் மதம் என்கிற அடிப்படையில் பிளவு படுத்துகிறது, என்பதை மையமாக கொண்டுள்ளது என்கிற கருத்தாக ஆகிவிடாது.
சாதாரண மக்கள் எதிர்கொள்ளுவதற்கு முரண்பாடான வகையில், இந்த முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாக கொழும்பிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பிரதிபலிப்புகளும் மற்றும் விவாதங்களும் இடம்பெறுகின்றன என நான் எண்ணுகிறேன்.கடந்த 25 – 30 வருடங்களாக நாங்கள் பல தவறுகளைச் செய்திருக்கிறோம், அந்த தவறுகள் உருவாக்கி, அதனால் நிலைபெற்றதுதான் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட மோதல்.நாங்கள் செய்த நல்லவைகளையும் மற்றும் தவறுகளையும் கவனமாக சீர்தூக்கிப் ஒரு கடும் பார்வை பார்ப்பதற்கான நேரம் இதுதான், மேலும் சீர்கேடுகள் ஏற்படாமல், அல்லது மோதல் திரும்பவும் இடம்பெறாமல் இருப்பதற்கு, அதே தவறுகளை மீண்டும் செய்யாமல் முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக