பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முஸ்லிமைக் காட்டி ”பார் முஸ்லிம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி.
”இராமநாதபுரம் கீழக்கரையில் தொடங்கி பம்பாய் தாவுத் இப்ராஹிம் வரை, கடத்தல் போன்ற சட்ட விரோதத் தொழில்களில் முசுலீம்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.”
- இந்து முன்னணியின் மேடைகளிலும், ஆர்.எஸ்.எஸ்.-இன் ‘ஷாகா‘க்களிலும் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒரு அவதூறு
மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆமாம் உண்மைதானே’ என்று தோன்றும்.
திரைப்பட உலகமும், செய்தி நிறுவனங்களும் முசுலீம்களைக் கடத்தல்காரர்களாகப் பல ஆண்டுகளாகச் சித்தரித்ததன் விளைவே மேற்கண்ட கருத்து. விவாதத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை போல இது உருவெடுத்திருக்கிறது. உண்மையில் கடத்தல் தொழிலுக்கு உகந்த மதம் என்று எதுவும் இல்லை. கடத்தல் தொழிலில் எல்லா மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். அவர்களின் மதமே சட்ட விரோதமாகக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதுதான்.
பம்பாயின் வரதராஜ முதலியார், அமர்நாயக், அருண்காவ்லி, சிவசேனாவின் குண்டர்படைத் தொழிற்சங்கம், தாவூத் இப்ராகிமிடம் வேலை பார்க்கும் இந்துத் தளபதிகள் போன்ற தாதாக்களெல்லாம் யார்? சென்னையில் ஏழுமலை, சிவா, வீரமணி, பாக்சர் வடிவேலு, எர்ணாவூர் நாராயணன், ஆதி ராஜாராம், மதுசூதனன், ஜெயா – சசி கும்பலின் தலைமையில் தமிழகத்தை மொட்டையடித்த வட்டாரத் தளபதிகள் அவர்களெல்லாம் யார்? அந்நியச் செலவாணி மோசடியில் ஈடுபட்டமைக்காக ஜெயா – சசி கும்பலைச் சேர்ந்த தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ என்பதால்தான் கடத்தல், சட்ட விரோத தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று கூறலாமா?
கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி மோசடியைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகக் கருதிய ஃபெரா (FERA) சட்டத்தை ரத்து செய்து, அதை சிவில் குற்றமாக மாற்றி ஃபெமா (FEMA) என்ற புதிய சட்டத்தைப் பிறப்பித்திருப்பதே தற்போதைய பா.ஜ.க. அரசுதான். எனவே கடத்தல் பேர்வழிகளெல்லாம் இந்துக்கள்தான் என்பதற்கு இதையே நிரூபணமாக எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது, முசுலீம்கள் மட்டுமே கடத்தல் செய்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகிறார்களாம்.
உண்மையில் கடத்தல் என்றால் என்ன? சுங்கவரி, இறக்குமதித் தீர்வைப் பட்டியலில் உள்ள பொருட்களை சட்ட விரோதமாகக் கடத்தி வந்து விற்று இலாபம் சம்பாதிப்பது. ஆனால், இன்றைய உலகமயமாக்கமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் இத்தகைய மரபுவழிக் கடத்தலைத் தேவையற்றதாக்கி விட்டது. தங்கமும், டாலரும் தடையின்றி வர அனுமதிக்கப்படுகின்றன. முக்கியமாக அரசே கடத்தல் தொழிலுக்கு உரிமம் கொடுத்து வருகிறது. ஓ.ஜி.எல் (Open Goverment License) என்ற உரிமம் பெற்று எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யலாம். தற்போதைய பா.ஜ.க. அரசும், முந்தைய அரசுகளும் செய்ததும், செய்வதும் இத்தகைய கடத்தல்தான்.
பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முசுலீமைக் காட்டி ”பார் முசுலீம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி. லுங்கி கிடக்கட்டும்; பனியன் ஜட்டி முதல் பல் குத்தும் குச்சி வரை, ஊறுகாய் மட்டை முதல் துடைப்பக்கட்டை வரை சுமார் 750 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து ‘கடத்தலாம்’ என்று இப்போது சட்டமே போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. கடத்தல் அனுமதிக்கப்பட்ட 750 சரக்குகளில் ”ஹிந்துக்களின் புனிதமான குங்குமமும்” அடக்கம். பர்மா பஜார் முசுலீம்களை ஒழிக்கத்தான் பா.ஜ.க அரசு நாட்டையே பர்மா பஜார் ஆக்கிவிட்டது போலும்!
இதுவன்றி ஏற்றுமதி – இறக்குமதி மோசடி, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி, கழிவு, தரகு, ஊழல் என்று பல்லாயிரங்கோடிக் கணக்கில் சுருட்டுவது பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள்தான். தன்னுடைய கணக்குப்படி ஒரு ஆண்டில் சுருட்டப்படும் மோசடிப் பணம் குறைந்தது ஒரு லட்சம் கோடியிருக்கும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் மாதவன் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியாவின் பிரபல ஊழல் வழக்குகளான போஃபர்ஸ், சர்க்கரை, நிலக்கரி, தொலைபேசி, ஜெயின் டைரி, ஹவாலா, இந்தியன் வங்கி, பங்குச் சந்தை, ஜெயா – சசி ஊழல், தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற அனைத்து வழக்குகளிலும் கோடிகளைக் கொள்ளையடித்தவர்கள் யார்? முசுலீம்களா? இல்லை; ஒருவர் கூட இல்லை. மாறாக பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருந்து நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது.
எனவே இத்தகைய மோசடிகளைத் தடுப்பதோ, தடை செய்வதோ இந்து மத வெறியர்களின் நோக்கமல்ல. மாறாக இந்த சட்ட விரோத – சமூக விரோத கும்பல்கள் அனைத்தும் தனக்கு மட்டும் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். ”கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், குண்டர் படை நடத்துபவர்கள், விபச்சாரத் தொழில் செய்பவர்கள் – அனைவரும் மராத்திய இந்துக்களாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று அவர்களின் நோக்கத்தை பால் தாக்கரே பச்சையாக வெளியிடுகிறார். இது இந்து தர்மத்துக்கு விரோதமானதல்ல என்பதையே கீழ்க்கண்ட கீதையின் சுலோகமும் மெய்ப்பிக்கின்றது.
”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.”
- தொடரும்<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக