செவ்வாய், 27 மார்ச், 2012

வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்


பாராட்டுக்குரிய சேரனுடன் ராஜ்குமார்


மனிதர்களை இழிவாக நடத்துகிற மதம், ஜாதி அவைகளின் தொடர்ச்சியான மூடநம்பிக்கை; இவைகளின் மீதான கோபம், வெறுப்பு, பிரபலங்களின், ‘அறிவாளி’களின் முட்டாள்தனத்தால் அவர்கள் மீது ஏற்படுகிற அலட்சியம் என்று பல நிலைகளில் பெரியார் பயன்படுத்திய சொல் ‘வெங்காயம்’.
பல மோசடி மூடர்களின் தோலை ‘உரி’ த்த பெரியார், ‘உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் ‘வெங்காயம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.
‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்ததில் பெரியார் உச்சரித்த ‘வெங்காயம்’ என்ற சொல்லுக்கு தமிழக அரசியலில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
பெரியாரின் உணர்வைப் போலவே, கோபம், அலட்சியம். வெறுப்பு என்று சமூக பிரச்சினையை அலசி இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமாரின் ‘வெங்காயம்’.
இரண்டாம் முறையாக வெளியாகி இருக்கிறது.
முதல் முறை வெளியானபோது, திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே… ‘ஓடி’ முடிந்துவிட்டது.
சரி இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு, இயக்குநர் சேரன் பெருமையுடன் வழங்கும் என்ற வித்தியாசமான முறையோடு தினத்தந்தியில் வெளியான விளம்பரம் பார்க்க தூண்டியது.
CHALLENGE நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்தி, பல புதிய பார்வையாளர்களை படத்திற்கு பெற்று தந்திருக்கிறது.
படம் புதிய யுக்திகளை குறிப்பாக வசனம் பேசும் முறை, கிராமப்புற நடிகர்களின் நடிப்பு இதுவரை எந்த படத்திலும் இவ்வளவு இயல்பாக வந்ததில்லை.
அதிலும் குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக வருகிறவரின் யதார்த்தமான நடிப்பு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று.
அவர், அவருடைய மகள், மகன் மூவரும் கலங்க வைக்கிறார்கள். படம் பார்த்த யாருடனும் இந்த மூவரும் இரண்டு நாட்கள் அவர்களின் தூக்கத்தில் கூட பயணிப்பார்கள்.
இந்த படத்தை எடுத்த சங்ககிரி ராஜ்குமாருக்கும் தயாரிப்பாளரான அவருடைய தந்தைக்கும் நன்றி சொல்வதைவிட,
இதை பலரும் பார்க்கும் வண்ணம் தன் பணத்தை வாரி இறைத்து தைரியத்துடன், சமூக பொறுப்புடன் மீண்டும் வெளியிட்டிருக்கிற இயக்குர் சேரனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு
ஜோதிடத்தால், ஏற்படுகிற அழிவை காட்டுகிறது படம்.
வேதத்தில், மகாபாரதத்தில், ராமாயணத்தில் இருக்கிறது ஜோதிடம். அதன் மூலவர்கள் பார்ப்பனர்களே. அவர்களிடம் இருந்தே மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள். படத்தில் வரும் மூன்று ஜோதிடர்-சாமியார்களில் ஒருவரைகூட பார்ப்பனராக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் காட்டவில்லை.
ஆனாலும், ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை பாராட்டி எழுதவில்லை என்பதை பெரியாரின் தொண்டரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: