முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னரே உருக்கமான அறிக்கையை சசிகலா வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே முதல்வர் ஜெயலலிதா அறிவுரையின்படியே அவர் அறிக்கை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.நடப்பது கனவா அல்லது நிஜமா என்பதுதான் நான்கு மாதங்களுக்கு முன்பு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தார் மீது ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கையின்போது அனைவரின் மனதிலும் நிழலாடிய கேள்வி. காரணம், வரலாறு காணாத வகையில் சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் கூண்டோடு கட்சியை விட்டும் தனது நட்பு வட்டத்தையும் விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
இந்த நடவடிக்கைக்கு அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஏன் மொட்டைகள் போட்டும் கூட கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த அளவுக்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரின் தாக்கம் அதிமுகவில் அமோகமாக, அராஜகமாக இருந்து வந்தது.
ஆனால் நேற்று யாரும் எதிர்பாராத வகையில், தடாலடியாக ஜெயலலிதாவுடன் சமரசமாகி விட்டார் சசிகலா. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் தீவிர ஜெயலலிதா விசுவாசிகள் கூட இதை இன்னும் நம்ப முடியவில்லை.
நேற்று பிற்பகலுக்கு மேல் சசிகலாவின் அறிக்கை வந்தது. ஆனால் காலையிலேயே அவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி விட்டதாக தற்போது தகவல்கள் கூறுகின்றன. முதலில் ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து சசிகலா சந்தித்துப் பேசியதாகவும், அப்போது இரு தோழிகளும் மனம் விட்டுப் பேசிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். அதன் பிறகே ஜெயலலிதா சமாதானமடைந்தார் என்றும், அதேசமயம், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் இடையே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற ரீதியில் அறிக்கை விடுமாறு ஜெயலலிதா சசிகலாவை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படியே சசிகலாவும் அறிக்கை விட்டதாக சொல்கிறார்கள்.
ஜெயலலிதாவை சமாதானப்படுத்திய சந்தோஷத்துடன்தான் சசிகலா பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா நீக்கப்பட்டபோது மொட்டை அடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர் இப்போது எப்படி ரியாக்ஷன் காட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக