பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சிக்குள் அதிகரித்துக் கொண்டே போகும் மோதல்களால் முன்னாள் முதல்வரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற மூத்த தலைவர்களை களம் இறக்கினால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்று காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.
பாஜக நிலைகர்நாடக முதல்வராக உள்ள சதானந்தா கவுடாவின் சொந்த தொகுதி உடுப்பி-சிக்மகலூர். முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்ய நேரிட்டதால் இந்த தொகுதியின் எம்.பியாக இருந்த சதானந்தா முதல்வராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து தமது எம்பி பதவியையும் ராஜினாமா செய்தார் சதானந்தா.
சதானந்தாவின் சொந்த தொகுதியான உடுப்பி-சிக்மகலூரில் கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜ்னதா கட்சி படுதோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சியை உற்சாகப்படுத்தியிருக்கிறது. சதானந்தாவின் தொகுதியாக இருந்தாலும் எடியூரப்பா ஆதரவு கோஷ்டி பிரச்சாரம் செய்யாததால்தான் இத்தோல்வி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த வாக்குகள் கூட சதானந்தாவின் ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளாகவே கருதப்படுகிறது.
சமூகப் பிளவு
ஆம்... சதானந்தாவுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையேயான மோதல் வெறும் கட்சிப் பிரச்சனயாக மட்டுமல்லாமல் பாஜகவுக்கு பலமான வாக்கு வங்கிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தையும் இருதுருவங்களாக்கி வைத்துள்ளது. கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள் 17 விழுக்காட்டினரும் லிங்காயத் சமூகத்தினர் 19 விழுக்காட்டினரும் உள்ளனர்.
இதையே தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு சாதகமாகப் பார்க்கின்றன.
காங்கிரஸ் வியூகம்
ஒருவேளை எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைத்தால் தேர்தலில் ஒக்கலிகர் சமூகத்தின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைப்பது சந்தேகமே. மடாதிபதிகளின் கட்டளையை மீறாத அந்த சமூகம் சதானந்தாவுக்கு ஆதரவாகத்தான் இருக்குமே தவிர பாஜகவுக்கு வாக்குகளைச் செலுத்தாது என்று கூறப்படுகிறது. இதனால் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை காங்கிரஸ் களம் இறக்க திட்டமிடுகிறது. ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த தேவ கவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரது செயல்பாடுகள் ஒக்கலிகர்களிடம் இருந்த செல்வாக்கைக் குறைத்துவிட்டது. இதனால் எஸ்.எம்.கிருஷ்ணாவை கர்நாடக அரசியலில் களம் இறக்கினால் ஒட்டுமொத்தமாக ஒக்கலிகர் வாக்குகளை அள்ளிச்செல்லலாம் என்பதே காங்கிரஸின் கணக்கு. ஒக்கலிகர்களுக்கும் ஆட்சி அதிகாரம் மீண்டும் கிடைத்த திருப்தி ஏற்படும் என்கின்றனர்.
அதாவது எப்படி உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்-யாதவ் வாக்குகளை சமாஜ்வாதி அள்ளிச்சென்றதோ அதேபோல் கர்நாடகத்தில் பெரும்பான்மை சமூகமான ஒக்கலிகர்கள்[- முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகள் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிட முடியும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. காங்கிரஸின் தலித் சமூகத் தலைவரான மல்லிகார்ஜூனையா கார்கேவும் கர்நாடக அரசியலுக்குத் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் தலித் வாக்குகளை கவர்ந்துவிடலாம் என்கிறது காங்கிரஸ். ஆனால் வீரப்ப மொய்லி மாநில அரசியலுக்கு திரும்புவதை விரும்பவில்லை.
இதனால் காங்கிரஸுக்கு உள்ள ஒரே வாய்ப்பாக எஸ்.எம்.கிருஷ்ணாவை கருதுகின்றனர். இருப்பினும் அவரது வயதை சுட்டிக்காட்டி முன்பைப் போல் தீவிர பிரச்சாரம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்புவோரும் காங்கிரஸில் உண்டு. இதற்கு பதிலடியாக கேரளத்து அச்சுதானந்ததனை சுட்டிக்காட்டி வாயடைத்து விடுகின்றனர்.எஸ்.எம். கிருஷ்ணாவை நகர்ப்புறங்களில் நல்ல இமேஜ் இருப்பதால் தற்போதைய 75 இடங்கள் என்பதிலிருந்து தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை நோக்கி காங்கிரஸ் முன்னேறிவிட முடியும் என்கின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளன.
கே-பிளான்
காங்கிரஸ் கட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்த மூத்த தலைவர்கள் எல்லாம் மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் வகுத்துக் கொடுத்த திட்டம். இன்னமும் கே-பிளான் என்று வரலாற்றில் பேசப்படும் இத்திட்டத்துக்கு சோனியா உயிர்கொடுத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சோனியான் கடைக்கண் பார்வையில் கே-பிளான் உயிர்பெறுமா? எஸ்.எம். கிருஷ்ணா மீண்டும் கர்நாடக அரசியலில் களம் இறங்குவாரா?
காத்திருக்கிறது கன்னட தேசம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக