செவ்வாய், 27 மார்ச், 2012

காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்” சுமங்கலி திட்டம்!கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் கொத்தடிமை


சுமங்கலிகோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர்.
கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்!;
கொத்தடிமை வாழ்க்கை
கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை நேரங்களிலோ தான் குடிதண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அன்றும் (20. 03. 2012 ) அவ்வாறுதான்  அதிகாலை 4 மணிக்கு கோவை விஜயலட்சுமி மில்ஸ் (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் குனியமுத்தூர் தாண்டி உள்ள பகுதி) பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ”காப்பாத்துங்கள்,  காப்பாத்துங்கள்”  என்று ஆறு இளம்பெண்களின் கதறல் கேட்டது. தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த இளம்பெண்களை பாதுகாத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


ம.உ.பா.மை தோழர்கள் சென்று பகுதி மக்களை சந்தித்தபோது. தங்களது பகுதியில் (விஜய லக்ஷ்மி மில்ஸ் பகுதியில்) இயங்கி வரும் ”சூரிய பிரபா” பஞ்சு மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவதாகவும்.
மில் நிர்வாகத்தின் கடுமையான துன்புறுத்தலை தாக்குப்பிடிக்க முடியாமல் 6 பெண்கள் மில்லில் இருந்து சுவர் ஏறிக்குதித்து முல்வேளிக்கம்பிகளை தாண்டி வந்து தங்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் தகவல் கூறினார்.
அதன் பிறகு தோழர்கள் அந்த பெண்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு தங்களுக்கு நடந்த கொடுமைகளை குறித்து அப்பெண்களே தோழர்களிடம் விளக்கமாக கூறி தங்களை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும்  நிர்வாகத்தால் ஏதும் தீமை நடந்துவிடாமல் தங்களை பாதுகாக்கும் படியும் தங்களது புகைப்படங்களை ஊடகங்களுக்கு அளிக்கவேண்டாம் என்றும் கோரினர்.

சூரிய பிரபா மில்..

கோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர். மில் நிர்வாகம் தங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது என்பதை அப்பெண்கள் கூறக்கேட்டபோது நமக்கு நெஞ்சம் பதறுகிறது.
மாதம் ரூ 3000 சம்பளம். தங்குமிடம், உணவு இலவசம் எனப்பேசி கூட்டி வந்ததாகவும், ஆனால் உண்மையில் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் என இதுவரையில் தெரியாது எனவும் கூறினார். நாள் ஒன்றிற்கு ரூ 75 பிடித்தம் செய்வதாகவும், நிர்வாகத்தின் தொலைபேசியில் இருந்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு போன் பேச அனுமதிப்பார்களாம். அதுவும் நிமிடத்திற்கு 2 ரூபாய் கட்டணத்தில்.அவ்வாறு பேசும் வேலைகளில் அருகிலிருந்து ஒட்டுக்கேட்கவும் செய்வார்களாம்.
உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து போவதும் இல்லையாம். மிகவும் கவலைக்கிடமானால் அழைத்து சென்றுவிட்டு வாகனம் மற்றும் மருத்துவ செலவிற்கு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வார்களாம். மாதம் ரூ 200 கொடுப்பார்கள் அதை வைத்துதான் துணி,சோப்பு,குளிக்கும் சோப்பு,நாப்கின்,பேஸ்ட், எண்ணெய்,etc அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டுமாம். ஒப்பந்தம் முடியும் வரை வெளியிலோ, சொந்த ஊருக்கோ செல்ல அனுமதிப்பது இல்லை. விடுதியில் தரமற்ற மோசமான. உணவு பிடிக்கவில்லை என்று கீழே கொட்டினால் அதற்கும் அபராதம்(FINE ) போடுவார்களாம்.
தங்குமிடமோ ஒரு பூலோக நரகம். 150 பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் 3 கழிவறைகளும்,3 குளியலறைகளும் மட்டுமே உள்ளதாம்.
மேலும் வேலை நேரம் 16 மணிநேரம் வரையும் மில் சுமார் 2 நாட்கள் 48 மணிநேரம் தொடர்ந்தால் போல வேலை செய்ய கட்டாயப்படுத்துவது. போன்ற ஏராளமான கொடுமைகளை அங்கு வேலை செய்யும் பெண்கள் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் கூறினார்கள் அந்த பெண்கள்.
புரோக்கர் பிரேமலதா
மில் நிர்வாகத்திற்கு புரோக்கராக பிரேமலதா என்ற பெண் உள்ளார். இந்த பிரேமலதாதான் மைனர் பெண்களை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டிவந்து மில்லில் வேலைக்கு சேர்த்து விடுகிறார் என்றும், இதற்காக மில் நிர்வாகத்திடம் மிக அதிக அளவு பணம் பெற்றுக்கொள்கிறார் என்றும், வேலையில் தொடர விருப்பம் இல்லாத பெண்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறையில் பொய்யாக புகார் கொடுத்து உங்களை கம்பி என்ன வைத்துவிடுவேன் என மிரட்டி மீண்டும் மில்லில் வேலைக்கு கூட்டி வந்து விடுகிறார் என்றும் கூறினார். இப்படிப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை கூறி தோழர்களிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள்.
ம.உ.பா.மை தோழர்கள் மனு ஒன்றை தயார் செய்து 6 பெண்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டி சென்றனர். RDO விசாரணை நடை பெற்று பின்னர் FACTORY INSPECTOR ஐ வைத்து விடுதியில் ஆய்வு செய்வதாகவும். புகார் தொடர்பாக ஆய்வு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இந்த வெற்று வாக்குறுதி தங்களுக்கு வேண்டாம் என்றும். 18 வயதுக்கு குறைவான பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொத்தடிமையாக வேலை வாங்கிய மில் நிர்வாகத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுமங்கலி திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்  மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேற்கண்ட கோரிக்கையை வலியுறித்தி அப்பகுதிவாழ் மக்களை திரட்டி மனித உரிமை பாதுகாப்பு மையம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறது.
____________________________________________________
– மனித உரிமை பாதுகாப்பு மையம் , கோவை.

கருத்துகள் இல்லை: