சென்னை, மார்ச்.25-பட்ஜெட் தேதி அறிவிக்கப் பட்ட பின்னர் புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பது முறைதானா? தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட 560 மடிக்கணினிகள் பரணில் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தமிழக அரசின் 2012-13ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கை 26-ஆம் தேதி வர விருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பிறகு, முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை செய்திருப்பது முறைதானா?
பதில்:- கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய வரிகளை தமிழக அரசின் சார்பில் விதித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைப் போலவே தான் 26ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறி விக்கப்பட்டுள்ள நிலையில்; முதலமைச்சர் காவல் துறையை அதிநவீனமயமாக்க ரூ.34 கோடிக்கு முன் னோடி திட்டங்களையும், ஆதிதிராவிடர், பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் 4,050 பேர் பயன்பெறத்தக்க வகையில் ரூ.5.34 கோடிக்கு 53 விடுதிகளை தொடங்கவும், 187 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், போடியில் ரூ.94 கோடியில் புதியதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதாக செய்தி வந்துள்ளது. நிதிநிலை அறிக்கை என்றாலே அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கும் அறிக்கைதான். ஆனால் நிதிநிலை அறிக்கை 26-ஆம் தேதி என்று அறிவித்துவிட்டு, இவ்வாறு அரசின் அறிவிப்புகளையெல்லாம் முதலமைச்சர் செய்வது முறை தானா?
ஒருவேளை நிதிநிலை அறிக்கையிலே இந்த அறிவிப்புகளையெல்லாம் சேர்த்தால் அதனை நிதியமைச்சர்தான் படித்தறிவிக்க வேண்டும்; முதலமைச்சர் உத்தரவு என்று ஏடுகளிலே வராது என்பதால் இவ்வாறு அறிவிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.கேள்வி:- நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பதாகவும், நலவாரியம் செயல்படுவதும் இல்லை என்றும் சொல்லப் படுகிறதே?
பதில்:- என்னைச் சந்தித்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் இதுபற்றி என்னிடம் கூறி வருத்தப்பட்டார்கள்.
கேள்வி:- சத்துணவு மய்யங்களில் புதியதாக அலுவலர்கள் காலி இடங்களிலே நியமிக்கப் படுவார்கள் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தவாறு நியமிக்கப்பட்டுவிட்டார்களா?
பதில்:- புதியதாக பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபை கூட்டத்தொடரில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மய்யத்தில் 28 ஆயிரம் புதிய பணி இடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். பல மாதங்களாகியும், புதிய பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அரசு சார்பில் இதுவரை எந்த வித தகவலும் இல்லை.
கேள்வி:- தமிழக அரசின் 2012-13ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 26-ஆம் தேதி வெளிவரவிருக்கின்ற நேரத்தில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதா?
பதில்:- 2,682 முதுகலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித் திருந்தார்கள். அதற்கு இப்போதுதான் விண்ணப் பங்களே வழங்கப்பட்டு வருகின்றன. 5,790 பட்ட தாரி ஆசிரியர்களை, 4,342 இடைநிலை ஆசிரி யர்களை தேர்வு செய்யப்போகிறோம் என்றார்கள். அதற்கு முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும். ஆனால் இதற்கும் இப்போதுதான் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் மூலம் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வெளியேறி வருகின்றனர். ஆனால் 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இதுவரை முடிவுகளை வெளியிடாமல், அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மே திங்களில் புதிய மாணவர்களுக்கான தேர்வுகள் நெருங்கி வரு கின்றன. என்ன செய்யப்போகிறார்களோ? கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்காக வாங்கப் பட்ட 560 மடிக்கணினிகள் (லேப்-டாப்) பரணில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த பட்ஜெட்டும் வந்துவிட்டது.-இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக