டெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 8 வரை உயர்த்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
இந்தியாவில் பெட்ரோலின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் கச்சா எண்ணை பேரலுக்கு 109 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 134 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது.
இந்த விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனவாம். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.7.20 வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த இழப்பை சரி செய்ய பெட்ரோலின் விலையை உயர்த்துவது என்று எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.
தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட கூட்டம் நடந்து வருவதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த முடியாது. அதனால் இம்மாதம் 30-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைந்தபின் விலை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மத்திய அரசின் வசம் இருந்த பெட்ரோலிய விலை நிர்ணயம், எண்ணை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை உயரும் போதும், இறங்கும் போதும் அதற்கேற்றாற் போல் இந்தியாவிலும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் செய்யப்பபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டீஸல் விலை நிர்ணயம் இன்னும் அரசு வசமே உள்ளது. இப்போது டீஸல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக