வியாழன், 29 மார்ச், 2012

பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்! ‘யோக்கியன்னா’ அது எடியூரப்பாதான்!!

மில்ட்ரீ டிஜிப்ளின்
“பரம் வைபன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தினசரி காலையில் பாடும் பஜனையில் வரும் ஒரு வரி. இதற்கு, ‘பரம வைபவமான நிலையில் உன்னை வைத்திருப்பேன் என் ஸ்வராஷ்ட்ரமே’ என்று பாரதத் தாயைப் பார்த்து பாடுவதாகப் பொருள் சொல்லிக் கொள்கிறார்கள். பாரதத் தாய் பரம வைபவமான நிலைக்குப் போனாளோ என்னவோ – காக்கி டவுசர் கும்பல் பரம வைபவத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக தினசரி செய்தித் தாள்களின் பக்கங்கள் கோலாகலமாக அறிவிக்கின்றன.
ஒழுக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ் – ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒழுக்கம் என்பது தான் அவர்களின் பாரம்பரிய மார்க்கெட்டிங் தந்திரம். இந்த தந்திர மந்திரத்தை தமிழகத்தில் துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் தவறாமல் ஓதுவது நாம் அறிந்த செய்திதான்.
ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் போய் ‘இந்த முக்கு முக்குறீங்களே… அப்டி இன்னா தான் சாதிக்கப் போறீங்கபா’ என்று கேட்டுப் பாருங்கள், “நாங்கள் ஒழுக்கமான கட்டுப்பாடான மனிதர்களை உண்டாக்குகிறோம்; அவர்கள் பல்வேறு துறைகளுக்கும் சென்று தமது நேர்மையான ஒழுக்கமான நடவடிக்கைகளால் தேசத்துக்கு சேவையாற்றுவார்கள்” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.
இப்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒழுக்கப் பல்கலைக்கழகத்தில் கடுமையாக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பயின்று பட்டம் பெற்று அரசியல் துறைக்கு அனுப்பப் பட்டவர்களைக் கொண்ட கட்சி தான் பாரதிய ஜனதா. சங்கப் பரிவாரத்தின் அரசியல் முகம். இந்தியாவில் மேற்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக பெரிய மாநிலங்களான குஜராத்திலும் கருநாடகத்திலும் அவர்களின் நல்லொழுக்க ராமனாட்சி நடந்து வருவதாக அவர்கள் மட்டுமல்ல – தினமலரும் கூட சொல்கிறது. தினமலருக்கு பார்த்தசாரதிகள் எழுதும் கடிதங்களில் ‘என்னயிருந்தாலும் குஜராத் மாதிரி வருமா.. மோடி போல வருமா… தல போல வருமா’ என்கிற புலம்பல்களைத் தவறாமல் பார்க்க முடியும்.
இவ்வாறாக ‘நல்லொழுக்க ராமராஜ்ஜியம்’ நடந்து வருவதாக சொல்லப்பட்ட இவ்விரு மாநிலங்களிலும் உண்மையில் நடப்பது ‘ஜொள்ளொழுகும் காமராஜ்ஜியம்’ தான் என்கிற உண்மை சமீபத்திய செய்திகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடகத்தைச் சேர்ந்த மூன்று பாரதிய ஜனதா அமைச்சர்கள் பிட்டுப் படம் பார்த்து கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கு நாடே காறித்துப்பி அந்த எச்சிலின் ஈரம் கூட காயும் முன் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இதே காரியத்தைச் செய்துள்ள விவகாரம் வெடித்துள்ளது.
குஜராத் சட்டமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம் ‘சூடாக’ நடந்து கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சவுத்ரி மற்றும் பார்வாத் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் கையில் உள்ள ஐ.பேடில் எதையோ பார்த்து தமக்குள் ‘சூடாக’ விவாதிப்பதை அவதானித்த பத்திரிகையாளர் ஜனக் தாவே, மக்கள் நலன் பற்றித் தான் ஏதோ பார்த்துக் கொண்டிருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துள்ளார். முதலில் விவேகானந்தரின் படங்களைப் பார்த்து மகிழ்ந்த காவி வேட்டி ராம பக்தர்கள், அதைத் தொடர்ந்து நிர்வாணப் படங்களைக் கண்டுகளித்து காவிக்குள் பதுங்குவது ராமபக்தியல்ல – காமபக்தி தான் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர். பட்ஜெட் சூட்டுக்கு இதமான குளிராக அந்த குஜால் மேட்டர் இருந்தவிதம் இந்தியாவுக்கே தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த ஜனக் தாவே, விஷயத்தை சபாநாயகர் கன்பத் வாஸ்வாவின் காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். விஷயத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்த சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சபா நாயகரின் ‘கொதிப்பை’ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன் – “இது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்வதற்கில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இப்படி ஊடகங்களால் குறிவைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாவதை சகித்துக் கொள்ளவே முடியாது. இது பற்றி உண்மையறிய ‘ப்ளா ப்ளா ப்ளா’ சட்டப்பிரிவுகளின் படி விசாரணை செய்வோம்”
கர்நாடகா-குஜராத்-பிட்டு
கடமை-கண்ணியம்-பிட்டுப்பாடு - ஜெய் ஸ்ரீ ராம்
இனி இந்த விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தனியே வேறு எழுத வேண்டுமா என்ன? இப்படி கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொள்ளும் கன்பத் வாஸ்வாவின் அறிவுக்கூர்மை கருநாடக சபாநாயகருக்கு இல்லாமல் போனதை நினைத்து ‘நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்’ என்று தலைமேல் கைவைத்து அமர்ந்துள்ளார் அம்மாநில பாரதிய ஜனதா முதல்வர் சதானந்த கவுடா. கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொள்ளும் விஷயத்தில் கருநாடக பாரதிய ஜனதா வேண்டுமானால் தத்திகளாக இருக்கலாம், ஆனால் அம்மாநில நீதித் துறையோ இந்த விசயத்தில் கப்பென்று பற்றிக் கொள்ளும் பெட்ரோலில் ஊறிய கற்பூரமாய் இருக்கிறது.
கருநாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே அம்மாநிலத்தில் நடந்த சுரங்க ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணை அறிக்கை ஒன்றை முன்பு தாக்கல் செய்திருந்தது. அதில், ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் லஞ்சம் கொடுத்தது என்கிற விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ம் அத்தியாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மேல் முதல் தகவலறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடந்த கோமாளிக் கூத்துகளைத் தொடர்ந்து எடியூரப்பா தனது விசுவாசியான சதானந்த கவுடாவை ஒப்புக்குச் சப்பானியாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு பதவியிலிருந்து இறங்கினார். சிறைக்குப் போனார் – ஜாமீனிலும் வந்தார்.
தற்போது இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஆலமரத்தடி பஞ்சாயத்துக் கூட்டத்தார், லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் இருக்கிறது – ஆனால், அதை வாங்கிக் கொண்டு தான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு எங்கே ஆதாரம் – அதனால் ‘செல்லாது செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், காசு வாங்கித் தான் சலுகை காட்டப்பட்டது என்றால் அதைப் பற்றி எடியூரப்பாவின் கருத்தைக் கேட்கவில்லையே – அப்படிக் கேட்பது தானே இயற்கையான நீதிமுறை என்று அங்கலாய்த்துள்ளது. இதே பஞ்சாயத்து தீர்ப்பை அப்படியே விரிவாக்கிப் பாருங்கள் – கலைஞர் டீவிக்கு காசு வந்தது என்னவோ சரிதான் – ஆனால், அது சலுகை காட்டப் பட்டதற்காகத் தான் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் அப்படியே இருந்தாலும் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப் படாதா என்று ஆ.ராசா மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது கேட்கிறதா?.
வலது கை தான் தின்றது – இடது கை தான் கழுவியது ஆனாலும் ரெண்டும் வேற வேற கையாச்சே? என்று கூட இந்தத் தீர்ப்பை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்தத் ‘தீர்ப்பை’ விளங்கிக் கொள்ள பல்வேறு வகைகளிலும் முயன்று பார்த்தோம்.. நாராசமான உதாரணங்களே நினைவுக்கு வருவதால், நீதிமன்ற ‘மாண்பையும்’ ‘புனிதத்தையும்’ கணக்கில் கொண்டு இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். இத்தீர்ப்பில் உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது,  வெறும் சந்தேகத்தை  மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரச பதவியில் இருக்கும் ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமில்லை என்று சொல்லியிருக்கிறது.
புகழெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் – வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த முசுலீம்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்? முசுலீம்கள் என்பதலேயே சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? க்ரோசின் மாத்திரை வைத்திருப்பதாலேயே நக்சலைட் என்று சந்தேகப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்தியாவின் மொத்த ஆலமரத்தடி பஞ்சாயத்து கும்பல்களுக்கும் எடியூரப்பாக்களின் புகழின் மேல் இருக்கும் விசுவாசமும் கவலையும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மேலும் உயிரின் மீதும் என்றாவது தோன்றியிருக்குமா?
எடியூரப்பா
எப்பூடி!!!
இது ஒருபக்கமிருக்க, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் ‘பாத்தீங்களா நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னோம்ல’ என்று பாரதிய ஜனதாவின் மேலிடம் சட்டையின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் போதே கீழே வேட்டியை உருவி விட்டார் எடியூரப்பா. தனக்கு விசுவாசமான 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் ஓட்டிக் கொண்டு போய் பெங்களூரு நகரத்துக்கு வெளியே இருக்கும் ஐந்து நட்சத்திர ஆட்டுப் பட்டி ஒன்றில் அடைத்த எடியூரப்பா, ‘சரி சரி கிளம்பு காத்து வரட்டும்’ என்று சதானந்த கவுடாவுக்கு கெடு விதித்து விட்டார். ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குப் பேர் போன காவி கும்பலின் கட்டுப்பாடு ‘பிட்’டுப்பாடாகிக் கிழிந்து கந்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் எடியூரப்பா அவிழ்த்தெறிந்து விடுவாறோ என்று அஞ்சிய பாரதிய ஜனதா டவுசர் பாண்டிகளின் மேலிடம் களத்தில் இறங்குகிறது.
தொடர்ந்து நடந்து வரும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் இன்று வரை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே தில்லியை நோக்கி ஒரு படையெடுப்பையும் நடத்தி முடித்துள்ளார் எடியூரப்பா. பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்காரியில் இருந்து அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஸ்வயம் சேவகத் தலைவர்களுக்கு இரண்டு பக்கமும் இடி – ஒன்று, எடியூரப்பாவைப் பகைத்துக் கொள்வது உடனடியாக ஆட்சிக்கு ஆப்பு வைத்து விடும் என்பதோடு நீண்ட கால நோக்கில் அவருக்கு விசுவாசமான சாதி ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம், அவரை முதல்வராக்கினால் அகில இந்திய ரீதியில் ஊழல் ‘ஒழிப்பை’ முன்வைத்து தாம் போட்டு வரும் சீனின் திரை கிழிந்து விடும். இனி என்ன கிழிவதற்கு? ஏற்கனவே நார் நாராய் தொங்குவது வேறு விசயம்.
கழுதை முன்னே போனா கடிக்கும் பின்னே போனா உதைக்கும் என்கிற இந்த இக்கட்டான நிலையில் கடிவாங்கலாமா உதை வாங்கலாமா என்பது பற்றி முடிவெடுப்பதற்காகக் கூடிய பாரதிய ஜனதா உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடந்து எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது – அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும் போது நிதின் கட்காரின் மூஞ்சில் ஒரு சங்கடமான புன்னகையொன்று தோன்றியதை செய்திச் சேனல்களில் காண முடிந்தது. அடேங்கப்பா.. ஆர்.எஸ்.எஸ் காரவுக என்னமா டிரெய்னிங் குடுக்கறாங்கபா!

கருத்துகள் இல்லை: