சனி, 31 மார்ச், 2012

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்கள்

கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லைஎன்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?
- ராஜன்
__________________________________________
அன்புள்ள ராஜன்,
கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?
கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும்,  ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது?

நமது இந்தக் கருத்தும் தினமலரின் அந்தக் கருத்தும் சொந்த/தனிப்பட்ட முறையில் தான் உண்டானதென்று நம்புகிறீர்களா?  இல்லை.
நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமது இதயம் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாயின் சிதறிய ரத்தத் துளிகளைக் கண்டு கூட பதறுகிறது. தினமலரின் இதயமோ ஈழத்தில் ஆயிரக்கணக்கில் செத்துச் சிதறிய அப்பாவி மனித உடல்களைக் கண்டு குதூகலிக்கிறது. சேனல் 4ன் வீடியோவைப் பற்றி ‘இன்ட்ரெஸ்டிங்கா ஏதும் இல்லை’ என்று கொக்கரிக்க வைக்கிறது. ராஜபக்சே கும்பலும் இது பொய் என்று ஊளையிட்டு விட்டு எளிதில் கடந்து செல்கிறது.
ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.
கடவுள் பற்றிய நமது கருத்துக்களையும் கூட அவ்வாறே நாம் ‘வெளியில்’ இருந்து தான் ‘உள்ளே’ இறக்கிக் கொள்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ,  முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர். அச்சமற்ற இயல்பையும், அளவற்ற ஆற்றலையும் கொண்ட குழந்தைகளை அதனைச் சுற்றியிருப்போர் தான் கடவுள் பூச்சாண்டி காட்டி அஞ்சி நடுங்கும் கோழைகளாக்குகின்றனர்.
ஆக, கடவுளை உங்கள் நண்பர் கண்டடைந்ததே  தனிப்பட்ட முறையில் அல்ல எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது. இருப்பினும் அந்த ‘தனிப்பட்ட’ கடவுள் நம்பிக்கை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பதுங்கிக் கொள்ளும் வரை, எவரையும் துன்புறுத்தாத வரை யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவ்வாறு பதுங்கிக் கொள்வதில் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
வட / தென் துருவங்களில் கடலில் மிதக்கும் ஐஸ் மலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் சிறிய முனை மட்டுமே கடல் மட்டத்துக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் விதமாய் மிதந்து கொண்டிருக்கும். கடவுள் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறானதே. அது தனது கால்களின் கீழே ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறது – அதன் மேல் தான் நிலை கொண்டுமிருக்கிறது. சுற்றிலும் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளும், அப்பாவி மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும் கடவுள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை நித்தம் நித்தம் அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.
வாழ்க்கை நெடுக தம்மோடு சுக துக்கங்களில் சேர்ந்து பயணிக்கப் போகும் காதலியிடம் கூட ஒரு சில முறைகள் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருப்பார் – ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் போதாமல், தனக்குள்ள கடவுள் சித்திரத்தை ஒத்திராத நம்பிக்கை கொண்டவர்களிடம் முரண்பட்டு உரசிப் பார்த்து தனக்குத்தானே திருப்தி கொள்கிறார்..
‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன?  இதைப் பார்க்கும் முன், இதற்கு நேர் எதிரான ‘நம்பிக்கையற்ற’ நிலையைப் பற்றியும் பார்த்து விடலாம். இவையிரண்டும் தம்மளவில் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு மனிதனின் ஆளுமையையும் அவனது சமூகப் பொறுப்பையும் இவை மட்டுமே தீர்மானிப்பவைகளாக இல்லை.
நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.
இந்து பாஸிச பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ் கும்பலுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுத்தவரும், இந்து மகாசபையின் தலைவரும், காந்தி கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவருமான வி.டி சாவர்க்கரும் அவரது ஞான குருவான இத்தாலி பாசிஸ்ட் கட்சி தலைவர் பெனிட்டோ முசோலினியும் கூட கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகள் தான். சாவர்க்கர் கடவுளை நம்பாத அதே நேரம் வேதத்தையும், பார்ப்பனிய வருண தர்மத்தையும் நம்பினார். எனினும் அவர் நாத்திகர்தான். ஆனால் சிதம்பரம் சிவனடியார் ஆறுமுகசாமியோ கடவுளை நம்பும் ஒரு பக்தர். ஆனால் அவரது பக்தி, இந்து மதத்தில் நிலவும் பார்ப்பன மேலாதிக்கம், மொழித் தீண்டாமை போன்ற இழிவுகளை சகித்துக் கொண்டிராமல் எதிர்த்துப் போராடும் நேர்மையான தன்மான உணர்ச்சிக்குத் தடையாய் நிற்கவில்லை. கடவுளை நம்பிய சித்தர்கள் கூட அதன் பெயரில் விளங்கிய ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பனிய இழிவையும் இடித்துரைத்துள்ளனர்.
ஆக, ஒருவர் சமூக அளவில் வகிக்கும் பாத்திரம் என்னவென்பதிலிருந்து தான் அவரை மதிப்பீடு செய்ய முடியுமேயொழிய கடவுளை நம்புகிறாரா இல்லையா என்பதைக் கொண்டல்ல. நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல – போற்றத்தக்கதுமல்ல. கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள்.  வீட்டினுள் தொலைத்ததை தெருவிலே தேடியலையும் மக்களின் அந்தக் கையறு நிலை ஒரு அவலம். அந்த அவலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அதனால் தான் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று குறிப்பிட்டு விட்டு,  அது “இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது” என்றார்.
வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி,  கல்யாணம் முடிய, குழந்தை பிறக்க, குழந்தையின் பள்ளிக்கூட சீட், படிப்பு, வேலை, அதற்கு ஒரு திருமணம், அதன் வாழ்க்கை…. என்று நீளும் வாழ்க்கைத் தேவைகளும் அது நிறைவேறாமல் போகும் சமூக எதார்த்தமும், உறைந்து போய் நிற்கும் ஏற்றத்தாழ்வுகளும் அப்பாவி மக்களை ‘ஆறுதலுடன்’ அணிதிரட்டி கோவில்களையும், ஆன்மீக நிறுவனங்களையும் நோக்கி விரட்டி விடுகிறது. தீர்வு அங்கேயில்லை என்பதையும் எங்கே உள்ளது என்பதையும் நேர்மறையில் உணர்த்த வேண்டியது நமது கடமை – வறட்டு நாத்திகத்தை மட்டும் பேசிக்கொண்டு மக்களுக்கு மேலாக நம்மைக் கருதிக் கொள்வதல்ல.  அதே நேரம், தீர்வுக்கான பாதையை நந்தி போல் மறைத்துக் கொண்டு கடவுள் நம்பிக்கை வரும் போது இடித்துரைப்பதும் நேர்மறையில் விமர்சிப்பதும் அவசியம்.
நமது விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்த ‘ தனிப்பட்ட நம்பிக்கைகள்’ உதிர்ந்து ஒழிந்து போக வேண்டிய ஒரு சந்தர்பத்தை நேர்மையாக சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது எப்போது?
சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது.  துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட  தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?
இங்கே நாம் கையறு நிலையில் ஏற்பட்ட கடவுள் பக்தியையும் காரியவாதக் கடவுள் பக்தியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் – இரண்டையும் இருவேறு விதமாய் அணுக வேண்டியுள்ளது.
வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதன் சகல இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு இடையிடையே எப்போதாவது எழும் குற்றவுணர்வைத் தவிர்த்துக் கொள்ள கோயில் உண்டியல்கள் முன்பும் கார்ப்பரேட் குரு பீடங்களின் முன்பும் திரளும் மேட்டுக்குடி கனவான்களின் நம்பிக்கையும் சாதாரண மக்களின் நம்பிக்கையும் ஒன்றல்ல.
வயதான மனைவியின் மருத்துவத்துக்கு சல்லிக்காசு கூட இல்லாமல், தாமதமாகி இழுத்துக் கொண்டேயிருக்கும் ஓய்வூதிய செட்டில்மெண்டு பாஸ் ஆக வேண்டுமே என்கிற பதைப்போடு வந்தவரும் – கறுப்புப் பணக் குவியலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை கிள்ளி உண்டியலில் போட்டு விட்டால் ரெய்டிலிருந்து தப்பலாமோவென்கிற ‘பதைபதைப்போடும்’  வந்தவரும் ஒன்றாகத் திருப்பதி ஏழுமலையான் முன் வரிசை கட்டி நிற்கிறார்களே, இவர்களின் பக்தி ஒன்றா?
இரண்டும் வேறுவேறானது என்றாலும் நாம் இரண்டிலும் தலையிட்டுத் தான் தீர வேண்டும் – ஆனால், அணுகுமுறையில் பாரிய வேறுபாடு இருக்கும். முந்தையவர் நம்மோடு ஒரே அணியில் நின்று போராட வேண்டியவர்; பிந்தையவரோ நமக்கு நேர் எதிரணியில் நிற்பவர் – எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்.
ஆக, கடவுள் நம்பிக்கையில் தனிப்பட்டது என்று எதுவுமில்லை. உங்கள் நண்பரால் தனது மூக்கு நுனியைத் தாண்டி எட்டிப்பார்க்காமல் அவரது நம்பிக்கையைக் கட்டி வைத்துக் கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்களையும், சமூக விடுதலைக்கு குறுக்கே கடவுள் நிற்பதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறதா என்று கவனியுங்கள். முடிகிறது என்றால், கவலையை விடுங்கள் கூடிய சீக்கிரம் கடவுள் பெட்டி சட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.

கருத்துகள் இல்லை: