வியாழன், 29 மார்ச், 2012

தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் எத்தனை பேர்? கணக்கெடுப்பு

வறுமைக்கோட்டின் கீழ் வராதவர் யார், என்ற கேள்விக்கு நாள் ஒன்றுக்கு, 29.62 ரூபாய் வருமானம் உடையவர்கள் என்ற கருத்தை, திட்ட கமிஷன் கூறியது, தற்போது பெரிய சர்ச்சையாக பேசப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்களில், தமிழகத்தில் உள்ள ஏழைகளை அடையாளம் காண சுலபமாக வழி வகுக்கும். மொத்தம், 36 கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகளில் தொகுக்கப்பட்ட, இக்கணக்கெடுப்பில் தமிழக மக்கள் வசதிகளை எளிதாகக் கண்டறிய சில தகவல்கள் உள்ளன.

தமிழகத்தில், 1.85 கோடி வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வானொலி, "டிவி' மற்றும் அலைபேசி மற்றும் தொலைபேசி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் வசதி ஆகியவை பற்றி அறியாத வீடுகளும் உள்ளன. இதில், அதிக சதவீதம் உள்ள மாவட்டங்கள், தர்மபுரி ( 8.2 சதவீதம் ), சேலம் ( 7.8 சதவீதம்), திண்டுக்கல் (7.8 சதவீதம்), தேனி ( 7.7 சதவீதம்), அரியலூர் ( 7.1 சதவீதம் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், இந்த மாதிரி வசதியற்றவர்கள் வாழ்கிறார்களா? அது எந்த ஊர் என்பதை, மக்கள் தொகை ஆவணங்களை மறு ஆய்வு செய்தால் தகவல் கிடைக்கும். தற்போது, மாநில அரசு அடுத்த, 10 ஆண்டுகளில் நிறைவேற்ற இருக்கும் நெடுநோக்குத் திட்டத்தில், இப்பகுதியில் இலவசங்களை தந்தும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க செய்யலாம். இத்தகவலில், முன்னணி மாவட்டங்களான கோவை, திருப்பூரில் கூட இந்த வசதிகள் இல்லாத மக்கள் கிட்டத்தட்ட, நான்கு சதவீதம் என்பது சற்று வியப்பைத் தருகிறது. இம்மாதிரி எந்த வசதியும் இல்லாதவர்கள், குடும்பங்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை, ஆராய வேண்டியது அடுத்த கட்டம் ஆகும்.

அதிரவைக்கும் தகவல்: இந்த கணக்கெடுப்பில், வீடுகளின் வசதி பற்றிய தகவலில், சமையலறை என்று, தனி வசதி இல்லாத வீடுகள் தமிழகத்தில் மொத்தம், 9.4 சதவீதம். மாவட்ட வாரியாக பார்த்தால், அரியலூர் முதலிடத்தை பிடிக்கிறது. அங்கு, சமையலறை என்று, தனி வசதி இல்லாத வீடுகள் 33.6 சதவீதம். பெரம்பலூரில் 30.3 சதவீதம், விழுப்புரத்தில் 24.2 சதவீதம், திருவண்ணாமலையில் 20.6 சதவீதம் ஆகும். அதே சமயம், சென்னை 4.8 சதவீதமாகவும், மதுரை 9.3 சதவீதமாகவும் சற்று ஆறுதல் தருகிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் சமையலறை இல்லாத வீடுகள், 2.8 சதவீதம் மட்டுமே. பெண்கள் முன்னேற்றம், அதிக கல்வியறிவு மற்றும் பெண் உரிமை என்று பேசப்பட்ட போதிலும், சமையலறை தனியாக இல்லாமல் உள்ள வீடுகள் என்பது, முழு வளர்ச்சிக்கான அடையாளம் அல்ல. அதைவிட மோசமான தகவல் வீட்டுக்கு வெளியே சமையல் செய்யும் கணக்கீட்டில், தர்மபுரி 27.5 சதவீதம் என்று, முதலிடத்தில் உள்ளது. அதனால் தானோ என்னவோ பெண்கள் சிசுக்கொலை அதிகரித்த மாவட்டங்களில், அது ஒன்றாகத் திகழ்கிறது. சமூக ஆர்வலர்களும், அரசும் இந்த அம்சத்தை கவனிக்க, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நிச்சயமாக உதவும்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: