கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட பின்னணி குறித்து, கைதான பாதிரியார் உள்ளிட்டோர் மூலம், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன.
கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்கு எதிராக, உதயகுமார் தலைமையிலான குழுவினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு மின் நிலையத்தை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்த பின்பும், உதயகுமார் குழுவினர் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்ட களமான இடிந்தகரை கிராமம், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு, போராட்டக்காரர்கள் அனுமதியுடன் தான், அரசு ஊழியர்களோ, பொதுமக்களோ செல்லும் நிலை உள்ளது. இடிந்தகரை தனிநாடு போன்ற நிலைக்கு வந்துள்ளது. போராட்டம் தொடர்பாக, இதுவரை, 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கத்தோலிக்க பிஷப் கவுன்சில் கட்டுப்பாட்டில் பணியாற்றும், கூட்டப்புளி பாதிரியார் சுசிலனும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், போராட்டக்குழுவில் முக்கிய பங்காற்றிய சிவசுப்ரமணியன் என்பவர், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் இவர்களை கைது செய்ததும், கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன், தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில், பாதிரியார் சுசிலன் மூலம் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கிடைத்த தகவல்கள்: கூடங்குளம் போராட்டத்திற்கு, தூத்துக்குடி மறை மாவட்ட கட்டுப்பாட்டில் செயல்படும் தொண்டு நிறுவனத்தினரும், அதை சார்ந்தவர்களும், அதிக அளவில் உதவி புரிந்துள்ளனர். இடிந்தகரை கிராமத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு, தொண்டு நிறுவனங்களிடமிருந்து, தேவையான உணவுப்பொருட்கள், துணி, மருந்து உள்ளிட்டவை, தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மாவட்ட மீனவ கிராமங்களிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம், ஆட்களை திரட்டி வர, ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு, கடல் வழி பயணங்கள் அத்துப்படி என்பதால், அவர்கள் கடல் வழியிலேயே இடிந்தகரைக்கு வந்து போராட்டத்தை தொடர்வது எளிதாக இருந்தது. இதேபோல், சில பயங்கரவாத ஆதரவு குழுக்களும், கடத்தல் கும்பல்களுக்கு மறைமுக ஆதரவு தருவோரும், இந்த போராட்டத்துக்கு, தங்களது ஜனநாயக ஆதரவு அமைப்புகள் மூலம், தார்மீக ஆதரவு தர ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், தற்போதே இடிந்தகரை சர்ச் அருகிலுள்ள மண்டபத்தில், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, கைதானவர்களிடம் விசாரித்ததில், போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக