ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஹெல்த் மினிஸ்ட்ரி தரவேண்டும் என்று MGR கேட்டதாகப்

ஹெல்த் மினிஸ்டர் எம்.ஜி.ஆர்?

க – 23
வெற்றிச்செய்திகள் கொடுத்த மகிழ்ச்சி கருணாநிதியை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்திருந்தது. விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு வாழ்த்துக்களைச் சொன்னார். சில நிமிடங்கள் இருவரும் பேசினர். பிறகு, ‘நேரில் வாருங்கள்.. பேசிக்கொள்ளலாம்’ என்று கருணாநிதி சொல்ல, உரையாடல் முடிந்தது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. புதிய அமைச்சரவையில் தனக்கு ஹெல்த் மினிஸ்ட்ரி தரவேண்டும் என்று அப்போது சூசகமாகக் கேட்டதாகப் பின்னாளில் சொன்னார் கருணாநிதி.
இருப்பினும் தனி விமானத்தில் சென்னை வந்தார் எம்.ஜி.ஆர். வந்ததும் நேராகக் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதற்குள் நெடுஞ்செழியன், மாதவன் போன்ற பல தலைவர்களும் கருணாநிதியிடம் பேசியிருந்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி தரவேண்டாம் என்று வலியுறுத்தினர். எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்திருந்தார் கருணாநிதி. தவிரவும், யார், யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்பது பற்றியும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார் கருணாநிதி.
எம்.ஜி.ஆர் வந்ததும், ‘உங்களை அமைச்சராக்குவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வரக்கூடும்’ என்றார் கருணாநிதி. அதிர்ச்சியாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

‘நடித்துக்கொண்டே அமைச்சராகப் பணியாற்றும் வகையில் அமைச்சருக்கான கோட்பாடுகளில் திருத்தம் கொண்டுவர இந்திரா காந்தியிடம் பேசலாமே’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சட்டரீதியாக எதையும் செய்யமுடியாது என்று சட்டநிபுணர்களின் கருத்தை மேற்கோள் காட்டி மாதவன் கருத்து தெரிவிக்கவே, வேறு வழியில்லாமல் அமைச்சர் பதவிக் கனவைத் தாற்காலிகமாக ஒத்திவைத்தார் எம்.ஜி.ஆர். உண்மையில் எம்.ஜி.ஆருக்கு அமைச்சராகும் தகுதி நிறையவே இருந்தது; மக்கள் சக்தி நிரம்பியவர்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்; வசீகரம் நிறைந்த பிரசார பீரங்கி; தொடர்ந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பவர்; கருணாநிதியின் அமைச்சரவையில் இணைந்தவர்களில் சிலரைக் காட்டிலும் சிறப்பானவர்; எனினும், அந்த வாய்ப்பு அவருக்குத் தரப்படவில்லை.
உண்மையில் எம்.ஜி.ஆர் – கருணாநிதி இடையே இது முக்கிய விரிசல். கடந்த முறை தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரை அமைச்சராக்கியபோதே எம்.ஜி.ஆரின் முகத்தில் அதிருப்தி ரேகைகள். இப்போது, தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது விரிசலை விரிவடையச் செய்தது. இத்தனைக்கும் கடந்த ஆண்டுதான் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தைத் தயாரித்திருந்தது. கருணாநிதி எழுதிய கதைக்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இணைந்து நடித்த அந்தப் படம் அபாரவெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.
எங்கள் தங்கத்தின்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் கடனில் மூழ்கிய கோபாலபுரம் வீட்டை மீட்டதாக ஒரு செய்தி பரவியிருந்தது. எனினும், திரைப்படத் தொழிலில் இணைந்து செயல்பட்டுவிட்டு, அமைச்சர் பதவி என்றதும் கருணாநிதி பின்வாங்கியதை எம்.ஜி.ஆரால் ஜீரணிக்க முடியவில்லை. பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். அந்த ஆண்டு வெளியான என் அண்ணன் என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு பாடல் இடம்பெற்றது.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. திமுக சட்டமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கு கருணாநிதியின் பெயரை நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். க. அன்பழகன், எம்.ஜி.ஆர், மதுரை எஸ். முத்து ஆகியோர் வழிமொழிந்தனர். சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, இரண்டாவது முறையாக முதலமைச்சரானார்.
கருணாநிதியின் அமைச்சரவையில் நெடுஞ்செழியனுக்குக் கல்வி, என்.வி.நடராசனுக்கு மக்கள் நல்வாழ்வு, சத்தியவாணி முத்துவுக்கு தாழ்த்தப்பட்டோர் நலன், ப.உ. சண்முகத்துக்கு உணவு, மாதவனுக்குத் தொழில், சாதிக் பாட்சாவுக்கு பொதுப்பணி, சி.பா. ஆதித்தனாருக்குக் கூட்டுறவு, அன்பில் தர்மலிங்கத்துக்கு விவசாயம், க. ராஜாராமுக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலன், ஓ.பி. ராமனுக்கு மின்சாரம், மு. கண்ணப்பனுக்கு அறநிலையம், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனுக்குப் போக்குவரத்து ஆகியன வழங்கப்பட்டன.
1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு கருணாநிதி எடுத்த மூன்று முடிவுகள் அவருக்கு எதிர்காலத்தில் பலத்த பின்னடைவுகளைக் கொடுத்தன. எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி தராமல் விட்டது. ஒருவேளை தந்திருக்கும் பட்சத்தில் பிள்ளையோ பிள்ளையை ஏற்றுக்கொண்டிருக்கலாம்; கருணாநிதியிடம் கணக்கு கேட்காமல் இருந்திருக்கலாம்; அதிருப்தி அடைந்து வெளியேறாமல் இருந்திருக்கலாம்; திமுக பிளவுபடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அன்று கருணாநிதி எடுத்த முடிவு, பல திருப்பங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிட்டது.
கருணாநிதி எடுத்த இரண்டாவது முடிவு, கே.ஏ. மதியழகனை சபாநாயகராக ஆக்கியது. கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மதியழகனுக்கு இந்த அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. காரணம், சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து விவகாரம் காரணமாக மதியழகனை முந்தைய அமைச்சரவையில் இருந்து விடுவித்திருந்தார் கருணாநிதி. ஆனாலும் அவருக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டது. எனினும், அமைச்சர் பதவி தராத ஆத்திரத்தில் இருந்த மதியழகன், கருணாநிதி – எம்.ஜி.ஆர் மோதல் விஸ்வரூபம் எடுத்தபோது எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து, சட்டமன்றத்தில் திமுகவுக்கு பலத்த நெருக்கடிகளைக் கொடுத்தார்.
மூன்றாவது முடிவு, மூத்த தலைவர்களுள் ஒருவரான ஏ. கோவிந்தசாமியின் இடத்தில் இளைஞரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு தந்தது. 1952 தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு, திமுக ஆதரவுடன் வெற்றிபெற்றவர் ஏ. கோவிந்தசாமி. ராஜாஜி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது உழைப்பாளர் கட்சியைக் காங்கிரஸுக்குள் இணைத்துவிட்டார் ராஜாஜி. அப்போது காங்கிரஸுடன் இணையாமல் திமுகவுடன் நெருக்கமாகிவிட்டவர் கோவிந்தசாமி. திமுக மும்முனைப் போராட்டத்தை நடத்தியபோது கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதாகிவிட்டனர். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் திமுகவை நிர்வகித்த கோவிந்தசாமியை அண்ணா அமைச்சராக்கினார். பிறகு கருணாநிதியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.
அப்படிப்பட்ட ஏ. கோவிந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் இருக்கும்போது தன்னைப் பார்க்கவந்த முதலமைச்சர் கருணாநிதியிடம் சில வார்த்தைகளைச் சொன்னார்.
எனது வேண்டுகோள் ஒன்றைத் தயவுசெய்து கேளுங்கள். நான் இறந்துவிட்டால் அந்த இடத்தில் அமைச்சராக யாரை நியமித்தாலும் நியமியுங்கள். ஏன், என் நண்பர் இளம்வழுதியையேகூட நியமியுங்கள். காரணம், அவர் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டார். என் வகுப்பார் ஒருவரை மந்திரியாக்கவேண்டுமே என்பதற்காகத் தயவுசெய்து பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும் நியமித்து விடாதீர்கள். அது கட்சிக்குப் பெரிய துரோகமாகிவிடும். அந்தக் கெடுதியை வலிய வரவழைத்துக்கொள்ளாதீர்கள். என் வார்த்தையை நான் இறந்தபிறகு தட்டிவிடாதீர்கள்.
ஏ. கோவிந்தசாமியின் வார்த்தைகளைப் புறக்கணித்தார் கருணாநிதி. பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். பின்னாளில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்துகொண்டு கருணாநிதிக்குக் கொடுத்த குடைச்சல்கள் அநேகம். தற்போது அதிமுகவுக்கு அடுத்தபடியாக திமுகவுக்குப் பெரிய சவாலாக இருப்பது நடிகர் விஜயகாந்தின் தேமுதிக. அந்தக் கட்சியின் அவைத்தலைவராக இருப்பவர் பண்ருட்டி ராமச்சந்திரனே.
புதிய அமைச்சரவைக்கு பெரியார் தலைமையில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய கருணாநிதி, பகுத்தறிவுப் பிரசாரத்தைத் தொடருவோம்; பக்திப் பிரசாரத்தைத் தடுக்கமாட்டோம்! என்றார்.
அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. இரண்டாவது முறையாக முதலமைச்சரானதும் திமுக அரசு செய்த காரியங்களுள் ஒன்று, திருவாரூரில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரைச் செப்பனிட்டு ஓடச் செய்தது. பகுத்தறிவுத் தந்தைக்கு திமுக ஆட்சி காணிக்கை என்று சொல்லிவிட்டு, வாக்குவங்கிக்காக ஆன்மிகக் காரியங்களைச் செய்கிறது என்ற விமரிசனம் திமுக அரசின் மீது வைக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் கொடுத்தார்.
‘தேர் நான்கு நாள்களுக்குத்தான் ஓடுகிறது. ஆனால் அதற்காக நான்கு லட்சம் ரூபாயில் போடப்பட்ட சாலைகளை அந்தப் பகுதி மக்கள்தான் பயன்படுத்தப் போகிறார்கள்.’
பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம். சாலையில் திரியும் பிச்சைக்காரர்களுக்கென திமுக அரசு சார்பில் விடுதிகள் உருவாக்கப்பட்டன. அங்கேயே அவர்கள் தங்கவைக்கப்பட்டு, உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் தரப்பட்டது. கண்பார்வை இழந்த ஏழை, எளிய முதியவர்களுக்குக் கண்ணொளி வழங்கும் திட்டம் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது. ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், ஆதரவற்ற சிறுவர் – சிறுமிகளுக்கான கருணை இல்லங்களை உருவாக்கும் திட்டம், விதவைகள் உதவித் திட்டம் என்று பல திட்டங்களை அறிவித்து, அமல்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடி. நிதி நெருக்கடி.
அண்ணா காலத்தில் அமலாகியிருந்த மதுவிலக்கை, நிதி நெருக்கடி காரணமாக ஒத்திவைக்க முடிவு செய்தது திமுக அரசு. அரசின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு. குறிப்பாக, மூத்த அரசியல் தலைவர்களான ராஜாஜி, காயிதே மில்லத் போன்ற பலரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் முதலமைச்சர் கருணாநிதி. மதுப்பழக்கத்தின் கொடுமைகளை விளக்கி நாடு தழுவிய அளவில் பிரசாரம் செய்வதற்காக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு எம்.ஜி.ஆர் தலைவர். முன்னாள் மேயர் சா. கணேசன் செயலாளர்.
மதுவிலக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் கலவரம் ஒன்றில் பலியாகியிருந்தார். கலவரத்தின் பின்னணியில் இருந்தது கருணாநிதிக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார்
www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: