வியாழன், 13 அக்டோபர், 2011

சம்பந்தன்: TULF ன் புது நிர்வாக சபையை ஏற்க முடியாது

கூட்டணியின் புது நிர்வாக சபையை ஏற்க முடியாது என்கிறார் சம்பந்தன்;நிராகரித்துத் தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம்

நீதிமன்ற உத்தரவை மீறி பொதுச்செயலாளரான தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதி யாகச் செல்லுபடியற்றது என்று இரா. சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளருக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் அவர் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், நல்லூரில் இடம்பெற்ற மாநாடு, கட்சி தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதுடன் சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். "தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நானே. நீதிமன்றத் தீர்ப்புப்படி நான் அழைப்பு விடுக்காமல் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தையோ மாநாட்டையோ நடத்த முடியாது. இது பற்றிச் சட்டத்தரணி மூலமும் நேரிலும் ஆனந்தசங்கரிக்கு அறிவித்திருந்தேன். அதனையும் மீறி ஓகஸ்ட் 25ஆம் திகதி அவர் நல்லூரில் மாநாட்டைக் கூட்டி புதிய நிர்வாக சபையையும் தெரிவு செய்துள்ளார். இது செல்லுபடியற்றது. இதனை ஏற்க முடியாது. பொதுச் செயலாளராகிய என்னால் கூட்டப்படாத இந்த மாநாடு சட்டரீதியற்றது. எனவே இந்த மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் புதிய நிர்வாகத்தை தேர்தல்கள் திணைக்களம் ஏற்றுக்கொள்ளக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி மறுத்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்துக்குள் அதனை மீறிச் சென்றவர் சம்பந்தன். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விடுதலைப் புலிகளைத் தலைவராக ஏற்றுச் செயற்பட்டவர். அப்படியிருக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமைகோர அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. கடந்த மூன்று தேர்தல்களில் அவரைக் கேட்காமல்தான் கட்சி போட்டியிட்டது. அவர் இல்லாமல்தான் கட்சி இயங்குகிறது. கட்சியின் மாநாட்டை நிறுத்தக் கோரி இரு தடவைகள் கடிதங்கள் அனுப்பினார். ஆனால், நான் அவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. முடிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எடுத்துப் பார்க்கட்டும் என்றார் ஆனந்தசங்கரி

கருத்துகள் இல்லை: