இந்தத் தெளிவான வரையறை மீது நாலாபக்கங்களிலிருந்தும் கிண்டலும் கண்டனங்களும் பாயவே, “நாங்கள் ஒரு தனி நபரின் வருமானம் என்றுதான் வரையறுத்துக் கொடுத்திருக்கிறோம்; ஆனால், பொதுமக்கள் இதனைக் குடும்பத்தின் வருமானம் எனத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். மேலும், இது வறுமைக் கோட்டைத் தீர்மானிப்பதற்கான வரையறை தானே தவிர, இதனை அளவுகோலாகக் கொண்டு ஏழைகள் பெறும் உரிமைகள் எதையும் மறுக்கப் போவதில்லை” என தன்னிலை விளக்கத்தை அளித்திருக்கிறது, திட்ட கமிசன்.
இந்த விளக்கம், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுவது போன்ற பச்சையான மோசடித்தனமாகும். ஏனென்றால், “மே 2011 அன்று சந்தையில் நிலவும் விலைவாசியின் அடிப்படையில், மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறத் தகுதியுடையவர்கள் குறித்துத் தெளிவான வரையறையை வகுத்துத் தருமாறு” உச்ச நீதிமன்றம் கேட்டதற்குதான் இந்தப் பதிலை மனுவாகத் தாக்கல் செய்திருக்கிறது, திட்ட கமிசன். இதன் பொருள், ஒரு நாளைக்கு இதற்கு மேல் கூலி வாங்கும் யாரையும் ஏழையாகக் கருத முடியாது; அவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் உணவுப் பொருட்களை வழங்க முடியாது என்பதுதான்.
திட்ட கமிசன் தற்பொழுது உச்ச நீதிமன்றத்திடம் அளித்துள்ள இந்த வரையறையைக் கைவிட்டுவிட்டால்கூட, இதற்குப் பதிலாக இன்னொரு வரையறையை முன்வைத்து ஏழைகளைக் காவுகொள்ளத் தயங்கப் போவதில்லை. குறிப்பாக, ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வெட்டுவதற்கு, இந்திய மக்களின் சாதி மற்றும் சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது, திட்ட கமிசன்.
வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் வருமான அளவுகோலை அரசு மிகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதுதான் பிரச்சினை என்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் இதனைச் சுருக்கி விடுகின்றன. ஆனால், பிரச்சினை என்பது வருமான அளவுகோலைத் தீர்மானிப்பதல்ல. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான மானியங்களைக் கூடுமான வரை வெட்டிச் சுருக்கிவிட வேண்டும் என்ற அரசின் தீய நோக்கம்தான் இதில் மையமானது. குறிப்பாக, திட்ட கமிசன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளைக் கணிசமாகக் குறைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகிறது. இதற்காகவே, உணவுப் பாதுகாப்புச் சட்டம், சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு, தேசிய அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல தந்திரமான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. வருமான அளவுகோலை உயர்த்தி வைத்தால்கூட, இனி அடித்தட்டு மக்களுக்கு அரசின் நல உதவிகள் அனைத்தும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக