வியாழன், 13 அக்டோபர், 2011

ஸ்டாலின்-தயாநிதி பவர் பாலிட்டிக்ஸா? சொத்து குவிப்பு விவகாரமா?

சென்னை, இந்தியா: தி.மு.க. உட்கட்சி மோதலின் உச்சக்கட்டமாக, பரிதி இளம்வரிதி தி.மு.க.வை விட்டே வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. கட்சிப் பதவிகளில் இருந்து ஒதுங்கினாலும், அடிப்படை உறுப்பினராக தொடர்வேன் என்று கருணாநிதிக்கு அவர் எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தார்.அவர் அடிப்படை உறுப்பினராகக்கூட இருக்க விரும்பவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில்.
தி.மு.க.வுக்குள் நடைபெறும் பவர் பாலிடிக்ஸின் விளைவுதான் இது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
“பரிதிக்கே இந்தக் கதியா?” என்று தி.மு.க. இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலரை திகைக்க வைத்திருக்கிறது பரிதியின் நடவடிக்கை. காரணம், பரிதிக்கு கட்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. அப்படி வெற்றிபெற்ற இருவரில் ஒருவர் கருணாநிதி. மற்றையவர் இந்த பரிதி இளம்வழுதி.
படுதோல்வியால் அவமானம் அடைந்த கருணாநிதி, வேறு காரணங்களைச் சொல்லி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதையடுத்து, தி.மு.க.வின் ஒரேயொரு பிரதிநிதியாக, தனியாளாக சட்டசபைக்குச் சென்று பரிதி கலக்கியதை தி.மு.க.வினர் மறந்திருக்க மாட்டார்கள்.
சட்டசபைக்குள் அ.தி.மு.க.வினர் தன்னைத் தாக்குகிறார்கள், வேட்டியைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று சொல்லி, சஃபாரி அணிந்து கொண்டு சட்டசபைக்கு சென்றவர் இவர். இப்படியான அதிடி அரசியல் செய்த பரிதிக்கு கட்சிக்குள் ஏன் இந்த நிலை?
அங்குதான் வருகிறது பவர் பாலிட்டிக்ஸ். ஆரம்பத்தில் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த பரிதி, பின்னர் (மறைந்த) முரசொலி மாறனுடன் நெருக்கமானார். அதன்பின், முரசொலி மாறனின் மகன் தயாநிதியின் ஆதரவாளராக மாறிப் போனார். தற்போது, கட்சியின் தலைமைப் பதவிக்காக காத்திருக்கும் ஸ்டாலின், தனக்கு எதிராக உள்ள அணிகளில் இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கட் பண்ணி வருகிறார் என்கிறார்கள்.
அந்த ரூட்டில்தான் பரிதிக்கும் இடைஞ்சல் கொடுத்து, அவராகவே வெளியேறுமாறு செய்திருக்கிறார்கள் என்கின்றனர் தி.மு.க.வில் ஒரு தரப்பினர்.
மற்றொரு தரப்பினர், இதற்குத் தலைகீழான கதை ஒன்றைக் கூறுகின்றனர். “தற்போது அ.தி.மு.க. அரசு பதவிக்கு வந்ததும், தி.மு.க.வினர் மீது வரிசையாக நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டது. பரிதி அதில் சிக்கிக் கொள்ள சான்ஸ் இல்லை. ஆனால், அடுத்த கட்டமாக சொத்துக் குவிப்பு வழக்குகள் வரப் போகின்றன. அதில் பரிதிக்கு நிறையவே சிக்கல்கள் உள்ளன” என்கிறார்கள் இந்தத் தரப்பினர்.
பரிதி வெளியேறியது, அல்லது, வெளியேறுவதாகக் கூறப்படுவது, சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவே என்பதுதான் தலைகீழான கருத்து.
இரண்டுக்குமே சான்ஸ் உள்ளதுதான், பரிதி கேஸில் உள்ள ஸ்பெஷாலிட்டி!

கருத்துகள் இல்லை: