புதன், 12 அக்டோபர், 2011

ஜெயலலிதா-கருணாநிதி: வெட்டலாமா? வெட்டினால் ஜெயிக்கலாமா?


Viruvirupu,
 தேர்தல் கூட்டணி எதுவுமே இல்லாமல் போட்டியிட்டால், தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுமா? இந்தக் கேள்விக்கு இவ்வளவு நாளும் வெறும் ஊகங்களே பதிலாகக் கிடைத்தன. இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் இதற்குரிய சரியான பதிலைத் தேட வேண்டுமானால், கோவை தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் போதுமானது.
காரணம், இங்கு கட்சிகளின் செல்வாக்கு எந்தக் கட்சிக்கு அதிகம் என்று சொல்வது சிரமம். மக்கள் செல்வாக்கு ஒரே கட்சியிடம் குவிந்துபோய் இல்லை.
வெளிப்படையாகப் பார்த்தால் போட்டி என்னவோ, அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேதான் இருப்பது போலத் தோன்றும். ஆனால், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சைலன்ட் சப்போர்ட் கணிசமான அளவில் உண்டு.
காட்​டன் மில்கள், மற்றும் சிறிய பெரிய மோட்டார் உற்பத்தி தொழிற்சாலைகள் கோவையில் பரவலாக உள்ளன. இவற்றில் வேலை செய்பவர்களில் பெரும்பாலான ஆட்கள், தொழிற்சங்கங்களில் உறுப்பினர்கள்.
மற்றைய நகரங்களைவிட இந்த வாக்காளர் எண்ணிக்கை கோவையில் அதிகம். தொழிற்சங்கங்களில் பொதுவாகவே கம்யூனிச ஆதரவு அதிகம். அந்த வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் பேரணி என்று ஷோ காட்டாமலேயே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஓட்டு வந்து விழும்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தே.மு.தி.க.வுடன் இணைந்து ஒரே கூட்டணியில் போட்டியிடுகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளுமே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தன. அந்தத் தேர்தலில் கோவையில் அ.தி.மு.க. கூட்டணி பெற்ற அட்டகாசமான வெற்றியில் இவர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. இம்முறை இவர்களது கூட்டணி இல்லாமல் தனியே போட்டியிடுகின்றது அ.தி.மு.க.
அ.தி.மு.க.வின் பிரதான வேட்பாளர், செ.ம.வேலுசாமி. மாஜி அமைச்சரான இவருக்கு சொந்தக் கட்சியிலேயே 100 சதவீத ஆதரவு இல்லை என்பதுதான் பயங்கரம்! சாதாரண நாட்களிலேயே அ.தி.மு.க.வில் இவருக்கு எதிராக செயற்படுவது எம்.எல்.ஏ. மலரவன் கோஷ்டி. தேர்தலில் இவர் ஜெயிக்க அவர்கள் விட்டுவிடுவார்களா?
ஆனால், இந்த கோஷ்டி மோதல் விவகாரம் போயஸ் கார்டன் வரை போய், பைசல் செய்யப்பட்டு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள் லோக்கல் அ.தி.மு.க.வினர். “வேலுசாமி தோற்றால், நீங்கள்தான் பதில் கூற வேண்டியிருக்கும்” என்று மலரவனுக்கு மேலிடத்தில் இருந்து கூறப்பட்டிருப்பதால், இந்தத் தேர்தலில் கோஷ்டி மோதல் இருக்காது என்று நம்புகிறார்கள் அவர்கள். மலரவனும், வேலுசாமிக்காக தேர்தல் வேலைகள் செய்வதுபோல காட்டிக் கொள்கிறார்.
உண்மையில் வேலை செய்கிறாரா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் தெரியவரும்.
தி.மு.க.வில் நிலைமை அவ்வளவு மோசமில்லை. நாயுடு சமூக மக்கள் அதிகளவில் வசிக்கும் கோவையில், தி.மு.க. இறக்கியுள்ள நாயுடு சமூக வேட்பாளர் கார்த்திக். தற்போது துணை மேயராக இருப்பவரும் இவர்தான். அந்த வகையில் தொகுதிக்குள் செல்வாக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் பொறுமைசாலி. இலகுவாக அணுகக்கூடிய நபர். கோஷ்டி அரசியலுக்குள் சிக்காதவர் என்று பல பிளஸ் பாயின்ட்கள் இவருக்கு உண்டு.
கடந்த ஆட்சியில் தி.மு.க. சம்பாதித்த கெட்ட பெயர்தான் இவரது மைனஸ் பாயின்ட்.
தி.மு.க.வின் மற்றைய மாநகராட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்காத அதிஷ்டம் ஒன்று இவருக்கு அடித்திருக்கிறது. அது, கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு மூலமா இங்கு செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள். கோவையை அழகு படுத்திய அந்தப் பணிகள், தனக்கு ஓட்டுக்களாக மாறும் என்று நம்புகிறார் இவர்.
இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் சவால் விடும் விதத்தில் இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களது வேட்பாளர், சிவஞானம்.  நாங்கள் ஏற்கனவே எழுதியதுபோல் தொழிற்சங்க ஓட்டுக்கள் கணிசமாக இவருக்கு விழும். அத்துடன், தே.மு.தி.க.வின் வாக்குகளும் கிடைக்கும்.
இவருக்கு பிளஸ் பாயின்டாக உள்ள மற்றொரு விஷயம், கோவையில் உள்ள தலித் மக்களின் வாக்கு வங்கி. தோழர் சிவஞானமே ஒரு தலித் போராளியாக அறியப்பட்டவர்தான். அத்துடன், சமுதாய சீர்திருத்தப் போராட்டங்கள், தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்று போராட்ட ரூட்டில் பிரபலமானவர். கோவையில் உள்ள சில சீர்திருத்த அமைப்புகள், மாதர் சங்கங்கள் ஆகியவற்றின் ஆதரவும் இவருக்கு உண்டு.
சட்டமன்றக் கூட்டணி தொடர்ந்திருந்தால், 100 சதவீதம் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று அடித்துக் கூறக்கூடிய நிலையில் உள்ள கோவைதான், தேர்தல் முடிவுகள் வரும்போது கூட்டணி தேவையா இல்லையா என்பதை அ.தி.மு.க.வுக்கு புரிய வைக்கப் போகின்றது.
கோவையில் அ.தி.மு.க. தோற்றாலும் கூட்டணி பலம் அவசியம் என்பது நிரூபிக்கப்படும். தி.மு.க. ஜெயித்தாலும் கூட்டணி பலம் (அ.தி.மு.க.வுக்கு) அவசியம் என்பது நிரூபிக்கப்படும். தி.மு.க. தோற்றால், கூட்டணியை மாத்திரம் குறைசொல்ல முடியாது. அ.தி.மு.க. ஜெயித்தால், அடுத்த தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் தைரியம் ஜெயலலிதாவுக்கு ஏற்படும்.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயித்தால்?
தமிழகத்துக்கு ஒரு புத்தம்புது அரசியல் அடித்தளம், கோவையில் இடப்படும்! (சத்தியமாக நான் கம்யூனிஸ்ட் அல்ல)
-கோவையிலிருந்து மார்ட்டின் ரொசாரியோவின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: