வியாழன், 13 அக்டோபர், 2011

Conflict of interest என்று தெரிந்தும் தயாநிதி மாறனுக்கு இந்தத் துறையை

மாறன் சாம்ராஜ்ஜியத்தில் ரெய்டு  திமுகவில் பலருக்கு உள்ளூர ஆனந்தம் என்றாலும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது

திங்கள்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ காலை நிகழ்ச்சிக்காக ஜென்ராம் என்னை அழைத்திருந்தார். மற்றொரு விருந்தினர் ஞாநி. செய்தித்தாள்களில் வந்தவற்றை அலசும் நிகழ்ச்சி. ஏற்கெனவே அதில் இருமுறை கலந்துகொண்டுள்ளேன். நேரலை ஒளிபரப்பு முடிந்து வெளியே வரும்போது நியூஸ் பகுதியிலிருந்து பரபரப்பாக அங்கு வந்தனர். ‘மாறன் வீட்டில் ரெய்ட். அது தொடர்பான லைவ் கவரேஜில் கலந்துகொள்ள முடியுமா?’ என்று கேட்டனர். எனக்கு அலுவலகம் செல்ல நேரமாகிக்கொண்டிருந்தது. இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 2ஜி பற்றியும் மேக்சிஸ்-ஏர்செல் பற்றியும் என் கருத்துகளைச் சொன்னேன்.

நிகழ்ச்சி நடக்கும்போது குருமூர்த்தி, சோ ராமசாமி, தா.பாண்டியன், டி.ராஜா, சௌந்திரராஜன் என்று பலர் தொலைபேசி வழியாகக் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தனர். கம்யூனிஸ்டுகள் அல்லது கட்சி சாராதவர்கள் தவிர மீதி யாருமே கருத்து சொல்லத் தயாராக இல்லை என்று தெரிகிறது. அஇஅதிமுகவில் அம்மா தவிர மீது எல்லோரும் டம்மி.
திமுகவில் பலருக்கு உள்ளூர ஆனந்தம் என்றாலும் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. காங்கிரஸ் இதைப்பற்றி எதையுமே சொல்லத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு பதிலாக குருமூர்த்தியும் சோவும் பேசிவிட்டனர்.
ரெய்டு தொடர்பான தகவல்கள் மிகச் சொற்பமே. விலாவரியாக இன்னமும் யாரும் இந்தக் கதையை விளக்கவில்லை. ரெய்டு நடைபெற்றது மேக்சிஸ்-ஏர்செல் விஷயம் தொடர்பாக மட்டும்தானா அல்லது தயாநிதி மாறன் வீட்டில் இருந்த சட்டவிரோதமான தொலைபேசி இணைப்பகம் தொடர்பானதா? அல்லது இரண்டையும் பற்றியதா?
சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் என்றால் அது 2ஜி வழக்குடன் சேர்ந்து வராது. அதற்கெனத் தனி வழக்கு ஒன்று பதிவு செய்யவேண்டும். ஆனால் அந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால் அதில் தண்டனை பெற்றுத்தருவது எளிது.
மாறாக, மேக்சிஸ்-ஏர்செல் விஷயத்தில் வலுவான வழக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இங்கும் சந்தர்ப்ப சூழ்நிலை, பாதிக்கப்பட்டவரின் (சிவசங்கரனின்) வாக்குமூலம் என்று போனால், வழக்கு நிற்குமா என்று தெரியவில்லை.
தயாநிதி மாறன் உண்மையிலேயே திட்டம் தீட்டி, சிவசங்கரனை மிரட்டி, உரிமம் தராமல் அலைக்கழித்து, பின் மேக்சிஸ் ஏர்செல்லை வாங்கியவுடனேயே அனைத்து உரிமங்களையும் தந்திருக்கலாம். ஆனால் அதனை எப்படி சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சியங்களுடன் ஒரு வழக்காடுமன்றத்தில் நிரூபிப்பது? அதுதான் சிக்கலே.

அடிப்படையில் தயாநிதி மாறனுக்குத் தொலைத்தொடர்புத் துறையே கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது. Conflict of interest என்று தெரிந்தும் தயாநிதி மாறனுக்கு இந்தத் துறையைக் கொடுத்து மன்மோகனும் காங்கிரஸும் திமுகவின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்ததுதான் மிகப் பெரிய குற்றம். ஆனால் அதற்கு சட்டரீதியில் தண்டனை எதையும் கொடுக்கமுடியாது. வாக்களிக்கும்போதுதான் தண்டனை கொடுக்கமுடியும்.

கருத்துகள் இல்லை: